மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 ஜூலை 2019

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள... திமுக-அதிமுக கலகல!

டிஜிட்டல் திண்ணை: மாமா... மாப்ள...  திமுக-அதிமுக கலகல!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும், வாட்ஸ் அப் ஆன் லைனில் இருந்தது. லொக்கேஷன் தமிழ்நாடு தலைமைச் செயலகம் காட்டியது. கொஞ்ச நேரத்துக்குப் பின் செய்தி வந்து விழுந்தது.

“தமிழ்நாடு சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்டு 5 ஆம் தேதி தேர்தல் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக திமுகவும், அதிமுகவும் கூடிப் பேசி சட்டமன்றம் ஜூலை 30 ஆம் தேதி நடக்க இருந்ததை 20 ஆம் தேதியோடு முடிக்கிறார்கள். இதற்காக இந்த வாரம் திங்கள் கிழமை முதல் காலை, மாலை என இரு அமர்வுகளாக நடக்கிறது சட்டமன்றம்.

வழக்கமாக சட்டமன்றம் என்றால் அதுவும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளும் அதிமுகவினரை கதிகலக்கும் கேள்விகள், பதில் அளிக்க முடியாத அளவுக்கு மலைக்க வைக்கும் வாதங்கள் இதெல்லாம் உத்தரவாதமாக இருக்கும். அதுவும் குறிப்பாக கலைஞர், ஜெயலலிதா காலத்தில் இதெல்லாம் மிக அதிகமாக இருக்கும். ஆனால் நடப்பு சட்டமன்றம் இதுவரை இல்லாத அளவுக்கு திமுக, அதிமுக இடையே அன்னியோன்யம், அனுசரணை ஆகியவற்றின் சாட்சியாகிக் கொண்டிருக்கிறது.

மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்களின் போது திமுக உறுப்பினர்களின் கேள்விகள் வழக்கமாக பீரங்கிகளைப் போல இருக்கும். ஆனால் இப்போது அரசுத் தரப்பினரை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பூக்களால் தாக்குவதுபோலவும், பதிலுக்கு அரசுத் தரப்பினர் புன்னகைப்பது போலவும் இருக்கின்றன என்கிறார்கள் பத்திரிகையாளர்களும், மாடத்தில் அமர்ந்து ரசிக்கும் பார்வையாளர்களும்.

கடந்த வாரமே சட்டமன்றத்தில் முதலமைச்சர் பதிலளிக்கும் விதத்தைப் பார்த்து அசந்துபோயிட்டேன் என்று மனம் திறந்து பாராட்டினார் எதிர்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன். இன்னொரு சந்தர்ப்பத்தில், ‘எதைக் கேட்க வேண்டுமோ அதை மட்டும் கேட்கும் நல்ல பழக்கம் மகேஷுக்கு இருக்கிறது’ என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷை பாராட்டினார் முதல்வர். இதன் நீட்சியாகவோ என்னவோ சட்டமன்றத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பதற்கு முன்பாகவே அவருக்கு சட்டமன்றத்தில் மகேஷ் வாழ்த்துகளைத் தெரிவிக்க அதுவும் சட்டமன்றக் குறிப்பில் இடம்பெற்றது.

’சட்டமன்றத்தில் எல்லாருமே உறுப்பினர்கள்தான், இதில் என்ன இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இதை விட அன்னியோன்யமாக இருக்கிறார்கள்’ என்று இதற்கு சில சமாதானங்கள் சொல்லப்பட்டாலும் அங்கே நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் மோடி அரசை கேள்விகளால் கிழித்துத் தொங்க விடுகிறார்கள். அதுபோல சட்டமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில் இதுவரை நடக்கவில்லை.

ஒவ்வொரு மானியக் கோரிக்கை பற்றிய விவாதத்தின் போதும் அந்தத் துறை பற்றிய கூர்மையான வினாக்களை தயாரித்து அரசு தயாராக வைத்திருக்கும் பதில்களுக்கு குறுக்குக்கேள்விகள் கேட்டு மடக்குவதுதான் திமுகவின் பாணி. ஆனால் இந்த சட்டமன்றத்தில் அதைப் பார்க்க முடியவில்லை. குறிப்பாக உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கை ஜூலை 8 ஆம் தேதி நடந்தது. தமிழகம் எங்கும் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியை திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு திமுக பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை. குடிநீர் பஞ்சம் இல்லை, பற்றாக்குறைதான் நிலவுகிறது என்று வேலுமணி சொன்னபோது, பற்றாக்குறைக்கா ஆயிரம் கோடி மத்திய அரசிடம் நிதி கேட்டீர்கள், பற்றாக்குறைக்கா ஜோலார் பேட்டையில் இருந்து நீர் கொண்டு வருகிறீர்கள் என்றெல்லாம் திமுக கிடுக்கிப் பிடி போட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை. ஜூலை 9 ஆம் தேதி சிறைத்துறை மானியக் கோரிக்கையின் போது, ‘என்ன சிறைத்துறை பத்தி நிறைய கேள்விகளே வரலை’ என்று அமைச்சர் சி.வி. சண்முகமே ஆச்சரியப்பட்டு பேசுகிறார்.அந்த அளவுக்குத்தான் திமுகவின் பர்ஃபாமென்ஸ் இருக்கிறது.

இதையெல்லாம் தாண்டி திமுக உறுப்பினர்களும் அதிமுக உறுப்பினர்களும் மாமா, மாப்ளே என்று பேசிக் கொள்ளும் புதிய காட்சியைக் கூட இந்த சட்டமன்றத்தில் காண முடிகிறது. இப்படி திமுக, அதிமுக இடையே ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் மன்ற நிகழ்வுகளை உற்று நோக்குபவர்கள். ’ஒருபக்கம் ஆட்சியைக் கவிழ்ப்போம் என்று பேசுகிறோம், சட்டமன்றத்திலே இப்படி நடக்கிறோம் ஒன்றுமே புரியவில்லை’ என்று சீனியர் சட்டமன்ற உறுப்பினர்கள் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்” என்ற மெசேஜை அனுப்பிவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

மேலும் படிக்க

இளைஞரணியில் உதயநிதி செய்யும் மாற்றம்!

ஆச்சரியமும் விறுவிறுப்பும் இல்லாத உலகக் கோப்பை!

10% இட ஒதுக்கீடு: எதிர்ப்பு - 16, ஆதரவு - 5

டிஜிட்டல் திண்ணை: முகிலன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்?

அமித்ஷாவின் அடுத்த இலக்கு!

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

செவ்வாய் 9 ஜூலை 2019