மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவுடன் இணைப்பா? ஆய்வுக் கூட்டத்தில் தினகரன்

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. வாட்ஸ் அப் ஆன் லைனில் லொக்கேஷன் சென்னை அசோக் நகர் என்று காட்டியது. முதலில் அமமுகவின் ஆய்வுக் கூட்ட போட்டோக்களை செண்ட் செய்த வாட்ஸ் அப், சில நிமிடங்களில் செய்தியையும் டைப் செய்யத் தொடங்கியது.

“மே 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்டபடி இன்று (ஜூன் 1 ) காலை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியது. காலை 10.30 மணி வாக்கில் அடையாறிலுள்ள தனது வீட்டில் தலைமைக் கழக நிர்வாகிகள் வெற்றிவேல், பழனியப்பன் ஆகியோருடன் டிபன் சாப்பிட்டு விட்டு கட்சி அலுவலகத்துக்குப் புறப்பட்டார் தினகரன். அப்போதே அவரது கையில் பூஜ்ய ஓட்டு வாங்கிய பூத்துகளின் பட்டியலும், அமமுகவின் ஒவ்வொரு வேட்பாளரும் வாங்கிய ஓட்டு விவரங்களும் இருந்தன.

மேடையில் துணைத் தலைவர் அன்பழகன், மண்டலப் பொறுப்பாளர்கள் வெற்றிவேல், பழனியப்பன், தங்க தமிழ்செல்வன், பொருளாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் பலரும் மேடையில் தங்க தமிழ்ச்செல்வனைப் பார்த்து நிம்மதி அடைந்தனர். சில நிர்வாகிகள் அவரிடமே போய், ‘உங்களப் பத்தி நியூஸ் வந்துக்கிட்டே இருக்கேண்ணே?’ என்று கேட்க, ‘அதிமுகவுக்கு போறேங்குறாங்க. திமுகவுக்கு போறேங்குறாங்க. நான் எங்கய்யா போறது? பாத்தியல்ல இங்கதான் இருக்கேன்’ என்று சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தார். 11 மணியளவில் தினகரன் அரங்கத்துக்குள் நுழைந்து மேடையேறினார்.

‘இந்தக் கூட்டம் தேர்தலில் நாம் அடைந்த தோல்வியை ஆராய்வதற்காக நடக்கிறது. அதனால வேட்பாளர்கள் மட்டும் பேசினால் போதும்னு நினைக்கிறேன். இன்னொரு கூட்டத்துல மாவட்டச் செயலாளர்கள் பேசிக்கலாம்’ என்று சொல்ல, ஒரு சில வேட்பாளர்கள் எழுந்து, ‘சில தகவல்களை மட்டும்தான் இங்க சொல்ல முடியும். நீங்க ஒவ்வொரு வேட்பாளரையும் தனித்தனியா சந்திக்க நேரம் ஒதுக்கணும். அப்பதான் முழுசா உங்ககிட்ட உண்மைகளை சொல்ல முடியும்’ என்றனர். கதிர்காமர் பேசும்போது, ‘தலைவர் தேவையில்லாத சில பூனைகளை மடியில கட்டிக்கிட்டிருக்காரு. அதையெல்லாம் அவுத்துவிட்டாலே போதும்’ என்று சொல்ல யாரை பூனைகள் என்ற சொல்கிறார் என புரியாமல் நிர்வாகிகள் திரும்பித் திரும்பிப் பார்த்தனர்.

புகழேந்தி பேசுகையில், ‘நமது சின்னமான பரிசுப்பெட்டியை நம்மால் குறுகிய காலத்துக்குள் கொண்டு போய் சேர்க்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டார். சில வேட்பாளர்கள் எழுந்து, ‘மக்கள் செல்வர் அவர்களே...’ என்று பட்டப் பெயர்களைச் சொல்லி இழுத்துக் கொண்டிருக்க, ‘நீங்க உட்காருங்க. இதெல்லாம் சொல்றதுக்காக உங்களைக் கூப்பிடல’ என்று சொல்லி அடுத்தடுத்த வேட்பாளர்களிடம் மைக்கை மாற்றிவிட்டார் தினகரன்.

பல வேட்பாளர்கள் ஓரிரு நிமிடங்களில் பேசி முடித்துவிட ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி வேட்பாளரான தாம்பரம் நாராயணன் மட்டுமே இந்தக் கூட்டத்தில் தனி நபராக 17 நிமிடங்கள் பேசியிருக்கிறார். தினகரனும் அவர் பேசப் பேசக் கேட்டுக்கொண்டே இருந்தார்.

‘இப்படி ஒரு தோல்வியை நாம் எதிர்பார்க்கலை. ஆனால் தோல்விக்கான காரணங்கள் நியாயமா இருக்கு. அதை நாம பேசியே ஆகணும். தோல்விக்கு முக்கியமான காரணமே அமமுக கட்சியினருக்கு நாம இன்னும் ஆளுங்கட்சிதான் அப்படிங்குற ஒரு மிதப்பு இருக்குறதுதான். மாவட்டச் செயலாளர்கள்,நிர்வாகிகள் எல்லாருக்கும் ஆளுங்கட்சி என்ற மிதப்பு இருக்கு. தலைவரை (தினகரனை) திருப்திப் படுத்துறது எப்படினு அவங்க எல்லாரும் நல்லா கத்து வச்சிருக்காங்க. தலைவர் ஒரு ஊருக்கு வருகிறார்னா அங்கே ஐயாயிரம் பேரைக் கூட்டி பெரிசா ஒரு மாஸ் காமிச்சுடுறாங்க. ஆனா கிராம, ஒன்றிய அளவுல இன்னும் கட்டமைப்பையே மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கலை. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் குறுநில மன்னர்கள் போலவே இருக்காங்க. மாவட்டச் செயலாளர்கள் என்ன நினைக்குறாங்கன்னா, அமமுக அப்படிங்குறது ஒரு டெம்ப்ரவரி சுனாமி. இது மறுபடியும் அதிமுகவுல சேர்ந்துடும்னு கட்சிக் கட்டமைப்பு வேலை எதுவும் செய்யாமலே இருக்காங்க. அவங்களை எல்லாம் இதுக்கு மேலயும் கண்டுக்காம இருந்தா கட்சி காணாம போயிடும்’ என்று பேசினார்.

அப்போது இடைமறித்த தினகரன், ‘நீங்க சொல்ற எல்லாம் எனக்குப் புரியுது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத்துகள்ல பூஜ்யம் ஒட்டுதான் வந்திருக்கு. அந்த பட்டியல் என்கிட்ட இருக்கு. யார் யார் என்ன பண்ணீங்கனு எல்லா ரிப்போர்ட்டும் என் கையில இருக்கு. தினகரன்னா சும்மா சிரிச்சு பேசிட்டு போயிடுவாருனு நினைச்சுக்காதீங்க. அம்மா எந்த வேகத்துல நடவடிக்கை எடுப்பாங்களோ. அதுபோல என் நடவடிக்கை இருக்கும். மாநில நிர்வாகியா இருந்தாலும் சரி மாவட்டச் செயலாளரா இருந்தாலும் சரி. நான் மாத்துறதை வச்சே தெரிஞ்சுக்குவீங்க யார் யார் தப்பு செஞ்சிருக்காங்கனு.

அப்புறம் முக்கியமான விஷயம். அதிமுகவோட நாம இணைவோம்னு இனியும் நினைச்சுக்கிட்டிருக்காதீங்க. திமுகவை அண்ணா ஆரம்பிச்சபோது உதயசூரியன் சின்னம் பிரபலமாச்சு. எம்ஜிஆரே அந்த சின்னத்துல நின்னுதான் ஜெயிச்சாரு. எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பிச்சப்ப உதயசூரியன் சின்னம் மிக பிரபலமா இருந்தது. ஆனா அதை எதிர்த்து இரட்டை இலையை மக்களிடம் கொண்டு சேர்த்தாரு. அதையே நாம பண்ணுவோம். இப்ப இரட்டை இலை பிரபலமா இருக்கலாம். ஆனா அந்த சின்னத்தை தோற்கடிச்சு நம்ம சின்னத்தை மக்கள்கிட்ட கொண்டு போற வேலைய பார்ப்போம். அமமுகவோட சேர்ந்து செயல்பட முடிஞ்சா என்கூட வாங்க. இல்லேன்னா எங்க வசதியோ அங்க போயிடுங்க. ஆனா அமமுக நிச்சயமா ஆட்சியை பிடிக்கும் இது நிச்சயம்’ என்று பேசினார் தினகரன்.

மீண்டும் பேசிய நாராயணன், ’பூத் ஏஜெண்டுகளே ஓட்டுப் போடலைனு சொல்றாங்க. ஆனா பூத் ஏஜெண்ட்டுக்கு பணம் போய் சேர்ந்துச்சா? நீங்க யார்கிட்ட பணம் கொடுத்தீங்களோ, அவங்கவங்க வீட்லதான் இன்னும் பணம் இருக்கு’ என்றும் குற்றம் சாட்டினார். அப்போது தேர்தல் செலவுக்கு கொடுத்த பணம் அமுக்கப்பட்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டு கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் தினகரன்.

வெகு விரைவில் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தவர் அதற்கான ஏற்பாடுகளில் இறங்குமாறும் வேலூர், நாங்குனேரி இடைத்தேர்தலில் ஜெயிப்பதற்கான வேலைகளில் இப்போதே ஈடுபட வேண்டும் என்றும் கூறி முடித்தார்.

அமமுகவின் ஆய்வுக் கூட்டத்தில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, சைவ விருந்து என உணவு களை கட்டியது. தோல்வியை ஆராய்வதையே இப்படி பிரம்மாண்ட விழா மாதிரி நடத்துறாங்கனா வெற்றி பெற்றா எப்படி இருக்கும் என்று கேட்டுக்கொண்டே நிர்வாகிகள் பலரும் கூட்டம் முடிந்து புறப்பட்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

.

.

மேலும் படிக்க

.

.

.

டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!

.

ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!

.

விமர்சனம்: என்ஜிகே

.

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?

.

தொடங்கியது அமமுகவின் ஆய்வுக் கூட்டம்!

.

.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019