மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 1 ஜுன் 2019

’ஒடிஷா மோடியின்’ பின்னணி?

’ஒடிஷா மோடியின்’  பின்னணி?

இந்தியாவின் மிக ஏழ்மையான மத்திய அமைச்சர் என்று இணையத்தைக் கலக்கிய, பிரதாப் சாரங்கியின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. புதிதாகப் பதவி ஏற்ற பாஜக அமைச்சர்கள் 22 பேர் மீது குற்ற வழக்குகளும், தீவிர குற்ற வழக்குகளும் இருப்பதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்த நிலையில் தற்போது இத்தகவலும் வெளிவந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்த பாஜக 350 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது. இதில் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் அதிகமாகப் பேசப்பட்டவர் பிரதாப் சாரங்கி. யார் இந்த பிரதாப் சாரங்கி?.

ஒடிசாவில் பாலசோர் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிஜு ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களை தோற்கடித்து, வெற்றி பெற்றவர் பாஜகவைச் சேர்ந்த பிரதாப் சாரங்கி. இவருக்கு நேற்று முன்தினம் (மே 30), மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. சிறு குறு நடுத்தர தொழில், பால் மற்றும் மீன்வளத் துறை ஒதுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஏழை அமைச்சர் என அறியப்பட்டார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவின. ஏழை பங்காளன், குடிசை வீட்டிலிருந்து வந்தவர், சைக்கிளில் தான் சென்று வருவார். ஆட்டோவில் தான்பிரச்சாரம் மேற்கொண்டார் என பல வகையிலும் பேசப்பட்டார். மோடி அமைச்சரவையில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பதவி வழங்கப்பட்டது என்றும் சொல்லப்பட்டது. ஓடிசாவின் மோடி என்று அழைக்கப்படும் இவர் சமூக ஆர்வலர் என்றும் கூறப்பட்டார்.

இந்நிலையில் ஏழை என்றே அறியப்பட்ட ’ஒடிசா மோடியின்’ உண்மை பின்புலம் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. இவர், வேட்புமனுவோடு தாக்கல் செய்த, பிரமாணப் பத்திரத்தை ஆராய்ந்ததில், இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

அவர் கையிருப்பாக ரூ.15,000 வைத்துள்ளார். அசையும் சொத்துகள் ரூ.15 லட்சம் மதிப்பில் உள்ளது. அசையா சொத்துகள் ரூ. 15 லட்சம் மதிப்பில் உள்ளது. அதேபோல் அவர்மீது அச்சுறுத்தல், கலகம் செய்தல், மதம், இனம் முதலியவற்றின் அடிப்படையில் இரு குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தது, உள்ளிட்ட குற்றவியல் வழக்குகளும் உள்ளன.

2002ல் ஆர்.எஸ்.எஸை சேர்ந்த இந்து அமைப்பான பஜ்ரங் தள் என்ற அமைப்பின் தலைவராக இருந்துள்ளார். அப்போது கலவரம் செய்தது, கொலை முயற்சி, அரசாங்க சொத்திற்குச் சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவரை ஒடிசா போலீசார் கைது செய்திருக்கின்றனர். அயோத்தி நில விவகாரத்தில், ராமர் கோயில் கட்ட நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று கலவரம் நடந்த போது ஒடிசா சட்டமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் விஷ்வ ஹிந்து பரிசத், துர்க வாஷினி, பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த 500 பேர் ஈடுபட்டனர். அப்போதும் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார்.

ஒடிசாவில் கிறிஸ்துவ மதத்தினருக்கு எதிரான வன்முறைகளிலும் பிரதாப் சாரங்கிக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், 1999ஆம் ஆண்டில் நாட்டை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய வழக்கிலும், இவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 1999ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரகாம்ஸ்டெயின்ஸ் என்ற கிறிஸ்துவ மதபோதகரும், அவருடைய இரு குழந்தைகளும் (வயது: 11, 7) பஜ்ரங் தள்ஆதரவாளர்களால் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளியாக இருந்தார். ஆனால் இவ்வழக்கு குறித்து புலனாய்வு செய்த வாத்வா ஆணையம், இந்தப் புகார்கள் எல்லாம் பொய்யானவை என அறிக்கை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 1 ஜுன் 2019