எல்லா அரசியலும் எண்ணெய்க்கே...


உலக அரசியல் பழகு -5 ஆரா
பொதுவாகவே ஒரு பிரச்சினைக்கு நாம் எப்போது முக்கியத்துவம் கொடுப்போம்? அந்தப் பிரச்சினை நம்மை பாதித்தால், நம் மீது குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் ஏற்படுத்தினால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
வெனிசூலா பிரச்சினையும் அதுபோலத்தான். எங்கோ இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசூலாவில் என்ன நடந்தால் நமக்கென்ன என்று இருந்துவிட்டுப் போக முடியாது. ஏனெனில், வெனிசூலாவுக்கும்- அமெரிக்கா, மேற்குலகத்துக்கும் இடையிலான இந்த பிரச்சினையில் இந்தியாவின் மீது தாக்கம் ஏற்பட்டுவருகிறது. அதுதான் பெட்ரோல், டீசலின் மூலப் பொருளான கச்சா எண்ணெய் தொடர்பான தாக்கம்.
இந்தியாவின் எண்ணெய் தேவைகளும் அதற்கான பக்க விளைவுகளும் இந்த பிரச்சினையை ஒட்டியவை என்பதைத் தெரிந்துகொள்வோம்.
எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. அந்த அளவு அதிகமான பெட்ரோல், டீசலின் மூலப் பொருளான குரூட் ஆயிலை நாம் இறக்குமதி செய்கிறோம்.
இந்தியாவின் எண்ணெய் தேவையை அதிகமாக பூர்த்தி செய்வது நான்கு நாடுகள். முதலில் இருப்பது ஈராக், இரண்டாவது சவுதி அரேபியா, மூன்றாவது ஈரான், நான்காவது வெனிசூலா. வளைகுடா நாடுகளைத் தாண்டி இந்தியா இன்னொரு நாட்டில் இருந்து பெருமளவிலான எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்றால் அது லத்தீன் அமெரிக்க நாடான வெனிசூலாவில் இருந்துதான். இந்தியாவின் ஓராண்டு எண்ணெய் தேவையில் 12% வெனிசூலாவில் இருந்துதான் இறக்குமதியாகிறது. இந்தியாவில் ஒவ்வொரு 100 வாகனத்திலும் 12 வாகனம் வெனிசூலாவின் எரிபொருளால்தான் இயங்குகின்றன.
ஆனால், அமெரிக்காவின் ஈரான், வெனிசூலா மீதான தடைகளால் இந்தியா, தான் அதிகமாக எரிபொருள் வாங்கும் இந்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் குறைத்துக்கொண்டிருக்கிறது. இங்கேதான் நமது அமெரிக்கச் சார்புக் கொள்கையும் தெரிகிறது. உலகில் இன்று நடப்பது வர்த்தக அரசியல் மட்டுமே. வர்த்தக அரசியலிலும் குறிப்பாக நடப்பது எண்ணெய் வர்த்தக அரசியல் மட்டுமே,.
பிரதமர் மோடி இரண்டாம் முறையாக வெற்றி பெற்றதை ஒட்டி அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா, தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த மே 23ஆம் தேதி வாஷிங்டனில் இருந்து செய்தியாளர்களை சந்திக்கிறார்.
அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசுகிறார். குறிப்பாக எண்ணெய் அரசியல் பற்றியும் பேசுகிறார். உலகில் அமெரிக்கா நிர்ணயிக்கும் எண்ணெய் அரசியலின்படிதான் இந்தியா நடந்துகொண்டுவருகிறது என்பதை ஒப்புக்கொள்ளும் ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகவே ஹர்ஷர்வதன் ஷ்ரிங்க்லாவின் அந்த பேட்டி அமைந்திருக்கிறது.
“ஈரான் வெனிசூலா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை இந்தியா பெருமளவு குறைத்துவிட்டது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு இணங்க, இவ்விரு நாடுகளில் இருந்து இந்தியாவின் இறக்குமதியைக் குறைத்துள்ளோம். ஈரான், வெனிசூலா ஆகிய இரு நாடுகளுமே இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகள் என்பதால், இந்த இறக்குமதியைக் குறைப்பதால் இந்தியாவுக்கு சில வலிகள் நேர்கின்றன. ஆனாலும் அமெரிக்காவுடனான நல்லுறவை பராமரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்,
ஆக ஈரான், வெனிசூலா ஆகிய இரு நாடுகளும் அமெரிக்காவின் வணிக உடன்படிக்கை,. அணு சக்தி உள்ளிட்ட விஷயங்களில் உடன்பட்டு வராததால் இருநாடுகள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதிக்கிறது அமெரிக்கா. அதன் படி ஈரான். வெனிசூலா ஆகிய இரு நாடுகளின் முக்கிய வணிகமான எண்ணெய் மீது கை வைக்கிறது. ஈரானும், வெனிசூலாவும் எண்ணெய் ஏற்றுமதி மூலமாகவே பெருமளவு லாபம் சம்பாதிக்கின்றன. அந்த நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு பேரல் கூட எண்ணெய் ஏற்றுமதி ஆகக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை.
அமெரிக்காவின் சொல்படி ஈரான், வெனிசூலா நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும் பல வாடிக்கையாளர் நாடுகள் தங்கள் இறக்குமதியைக் குறைத்தன. இந்தியாவும் அப்படி குறைத்துக் கொண்டதைத்தான் மோடியின் வெற்றி விழா பிரஸ்மீட்டில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரே வெளிப்படையாக சொல்கிறார்.
ஈரானும், வெனிசூலாவும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் சுமார் 20% பங்கு வகிக்கும் நாடுகள். இங்கிருந்து எண்ணெய் பெறுவதை இந்தியா நிறுத்திக் கொண்டால் அதே அளவு எண்ணெயை வேறு நாடுகளில் இருந்து வாங்க வேண்டும். ஈரானும், வெனிசூலாவும் இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் உதவி வந்த நாடுகள். அதே வணிக புரிந்துணர்வோடு வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவுக்குச் சற்று கடினம்தான். அதைத்தான் இந்திய தூதர் ஹர்ஷவர்தன், “இதில் இந்தியாவுக்குச் சில வலிகள் இருக்கின்றன:” என்று குறிப்பிடுகிறார்.
வெனிசூலாவின் முக்கியமான தொழில் எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி. தான் விரும்பிய அதிபர் அங்கே முழுமையாக ஆட்சிக்கு வரும் வரை வெனிசூலா ஒரு சொட்டு எண்ணெயை கூட உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்பதே அமெரிக்க தடையின் நோக்கம். இப்போதைய வெனிசூலா அதிபர் மதுராவை தூக்கிப் போட்டுவிட்டு தனக்கு இணக்கமாக இருக்கும் குய்டோவை வெனிசூலா அதிபர் ஆக்குவதன் மூலம் அந்நாட்டில் ஆண்டாண்டு காலமாக நிலவும் அமெரிக்க எதிர்ப்பு அரசியலை எரித்து விட வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். இதற்காகத்தான் வெனிசூலாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா போன்ற நாடுகளை எண்ணெய் இறக்குமதியில் இருந்து தடுக்கிறது அமெரிக்கா.
வெனிசூலாவில் தன் அரசியலை நிலைநிறுத்த எண்ணெய் வணிகத்தில்தான் தலையிடுகிறது அமெரிக்கா. இதனால் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வெனிசூலாவும் தத்தளிக்கிறது. வெனிசூலாவிலிருந்து 10% எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா அதை நிறுத்தியதால் விரைவில் தத்தளிக்கப்போகிறது.
(அடுத்த சனிக்கிழமை சந்திப்போம்)
வெனிசூலா: இரு அதிபர்கள், ஒரே காரணம்!
சாவேஸ்: அமெரிக்காவின் அடிவயிற்றில் செருகப்பட்ட வாள்!
துரத்தப்படும் வெனிசூலாவின் தூதர்கள்!
.
.
மேலும் படிக்க
.
.
.
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடிக்கு திடீர் நெருக்கடி!
.
ராஜ்யசபா: தங்கத்துக்கு அதிமுகவின் புதிய ஆஃபர்!
.
மோடி அமைச்சரவையில் சமூக நீதி எங்கே? - நீதிபதி கேள்வி!
.
டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு -ஸ்டாலினுக்கு ஸ்பீடு பிரேக் போட்டது யார்?
.
மத்திய அமைச்சரவை: தவிர்க்கப்பட்ட தமிழ்நாடு!
.
.