மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

டிஜிட்டல் திண்ணை: அள்ளிவீசும் அதிமுக, அமமுக; கிள்ளிக் கொடுக்கும் திமுக

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் 2 ஆயிரம் ரூபாயின் புகைப்படம் ஒன்றை அனுப்பியது. இடைத்தேர்தலின் கரன்சி நிலவரம் பற்றிய செய்தியாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதை பொய்யாக்காமல் கொஞ்ச நேரத்திலேயே விரிவான வாட்ஸ் அப் மெசேஜ் வந்து விழுந்தது.

“இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இதை ஒட்டி 17 ஆம் தேதியோடு பிரச்சாரம் ஓய்கிறது. மூன்று கட்சிகளுமே தத்தமது ஏரியா பொறுப்பாளர்களை 17 ஆம் தேதிவரை தொகுதியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளன. பிரச்சாரம் ஓய்வதற்கு ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில் பணப்பட்டுவாடாவும் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் விவி.செந்தில்நாதன், அமமுக வேட்பாளர் சாகுல் அமீது, திமுக வேட்பாளராகச் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்கள். இங்கே கடந்த மூன்று நாட்களாக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடைபெற்றுவருகிறது. மூன்று கட்சிகளின் ஒவ்வொரு பகுதிப் பொறுப்பாளர்களும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு பணப்பட்டுவாடாவில் இயல்பாகவே ஈடுபடுகிறார்கள். காலையில் நீங்கள் கொடுங்கள், மாலையில் நாங்கள் கொடுத்துக் கொள்கிறோம் என்று அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் எழுதப்படாத ஒப்பந்தமே உருவாகியிருக்கிறது. இதுபோல திமுகவும் மற்ற கட்சிகளின் பண விநியோகத்தைத் தடுக்கும் மூடில் இல்லை. மாறாக தாங்கள் பணம் கொடுக்கும் நேரத்தையும் லோக்கலில் இருக்கும் போட்டிக் கட்சிகளின் பொறுப்பாளர்களுக்கு சொல்லிவிட்டே விநியோகம் செய்கிறார்கள்.

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக, அமமுக தலா இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி என்பதால் இயல்பாகவே திமுக மீது வாக்காளர்களுக்கு அரவக்குறிச்சியில் அதிக ‘எதிர்பார்ப்பு’ எழுந்திருக்கிறது. இதை உணர்ந்த திமுக தரப்பினரும் அதிமுக, அமமுகவுக்கு இணையாக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள்.

மூன்று வேட்பாளரிடமும் தலா 2 ஆயிரம் வாங்கிய வாக்காளர்கள் ஒருவருக்குதான் ஓட்டுப்போடப் போகிறார்கள் அது அவர்கள் மனதிற்குமட்டும்தான் தெரியும் என அரவக்குறிச்சி தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் மூன்று கட்சியினரும் ஒருசேர சொல்கிறார்கள். அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும்தான் கரன்சி விநியோகத்தில் திமுக சமமாக இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி, அமமுக வேட்பாளராக மகேந்திரன், திமுக வேட்பாளராக சரவணன் போட்டியிடுகிறார்கள். அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் கொடுத்து வருகிறார்கள். அமமுகவினர் இடத்துக்கு ஏற்றதுபோல் ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரையில் விநியோகம் செய்து முடித்துவிட்டார்கள். திமுக ஓட்டுக்கு ஆயிரம் என வழங்கிவருகிறது.

சூலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் விபி.கந்தசாமி, அமமுக வேட்பாளர் .சுகுமார், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்கள். தொகுதியில் வேலைசெய்யும் அதிமுக வெளியூர், உள்ளூர் நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு தலா 2 ஆயிரம் என 80%பேருக்கு விநியோகம் செய்துவிட்டார்கள். அமமுகவினரும் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் எனக் கொடுத்துவருவதால் அதிமுக திணறிவருகிறது. அதிமுகவுக்கு இணையாக அமமமுகவும் பல இடங்களில் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துவரும் தகவல் அமைச்சர் வேலுமணிக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிமுகவுக்கு வீக் ஆன இடங்களாக கருதப்படும் இடங்களில் மட்டும் இன்னும் ஒரு தவணை இரண்டாயிரம் ரூபாய் தாளை வீச அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.

திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி கடந்த வாரத்தில்தான் கரூர் சென்று ஒரு ஃபைனான்ஸ் பார்ட்டியிடம் பேசி பத்து கோடி ரூபாய் வாங்கினார். அதை வைத்து திமுக சார்பில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார். திமுகவினர் ஆயிரம் ரூபாய் கொடுப்பதை வாங்கிக் கொண்ட வாக்காளர்கள் பலர், ‘நாங்க திமுகவுக்குதான் ஓட்டுப் போடலாம்னு இருக்கோம். ஆனா நீங்க அதிமுக, தினகரன் கட்சிங்க கொடுக்கறதுல சரிபாதிதான் கொடுக்குறீங்க. என்ன நியாயம்ப்பா இது?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு திமுக பொறுப்பாளர்கள், ‘நாங்க என்னம்மா பண்றது? எட்டு வருசமா ஆட்சியில இருக்குறவங்க அள்ளி வீசுறாங்க. நாங்க இவ்ளவுதாம்மா கொடுக்க முடியும்’ என்று சொல்லிச் சொல்லியே ஆயிரம் ரூபாயைக் கொடுத்து மக்களிடம் சமாதானம் பேசிச் செல்கிறார்கள்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகன், அமமுக வேட்பாளர் சுந்தரராஜன், திமுக வேட்பாளர் சண்முகையா களத்தில் உள்ளார்கள். இங்கேயும் அதிமுகவினர் 80% வாக்காளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து முடித்துவிட்டனர். அமமுகவினர் இடத்துக்கு ஏற்றதுபோல் வாக்காளர்களுக்கு 2ஆயிரம் கொடுத்துவருகிறார்கள், சில பகுதியில் ஆயிரம் கொடுத்துவருகிறார்கள். திமுகவினரோ இன்று காலையிலிருந்து வீடு வீடாகச் சென்று வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து ஓட்டுக்கு ஆயிரம் என வழங்கிவருகிறார்கள். அதுவும் 60 சதவீதம் வாக்காளர்களை மட்டுமே திமுக குறிவைத்திருக்கிறது.

அதிமுகவும், அமமுகவும் போட்டி போட்டுக் கொண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுகின்றன. திமுகவோ அரவக்குறிச்சியில் மட்டும் இந்த கரன்சி போட்டிக்கு ஈடு கொடுத்து வருகிறது. மற்ற தொகுதிகளில் எல்லாம் அதிமுகவும், அமமுகவும் கொடுத்து முடித்த பின்பே திமுக தனது கரன்சி விநியோகத்தை ஆசுவாசமின்றித் துவங்கியிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019