மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

நான் கூறியது சரித்திர உண்மை: முன் ஜாமீன் கோரும் கமல்

நான் கூறியது சரித்திர உண்மை:  முன் ஜாமீன் கோரும் கமல்

அரவக்குறிச்சியில் தான் சொன்னது சரித்திர உண்மை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் மே 12ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறியிருந்தார். கமலின் இந்தக் கருத்துக்கு கடந்த இரு நாட்களாக நாடு முழுவதும் ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. கமலின் பேச்சு தொடர்பாக இதுவரையில் சென்னை, திருவள்ளூர், சீர்காழி உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் மே 14ஆம் தேதி இந்து முன்னணி அளித்த புகாரின் அடிப்படையில் கமல் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் 154, 153ஏ, 295ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கமல் இன்று (மே 15) முறையீடு செய்துள்ளார்.

இதை விசாரித்த நீதிமன்றம், உயர் நீதிமன்ற அடிப்படை விதிப்படி, வழக்குத் தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு,குற்றவாளி அந்த குற்றப்பத்திரிகையைப் பெற்ற பிறகுதான் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்ய முடியும். விசாரணை நிலையிலேயே வழக்கை ரத்து செய்யக் கோர முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனைப் பரிசீலிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முன் ஜாமீன் கேட்டு கமல் தரப்பில் இன்றே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, பாஜக சார்பில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ’டெல்லி நீதிமன்றத்தின் வரம்பிற்குள் கமல்ஹாசனுக்கு எதிரான மனுவை விசாரிக்க முடியாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது. இருப்பினும் இம்மனு தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், உச்ச நீதிமன்றத்தில் தான் முறையீடு செய்யவுள்ளதாகவும் அஸ்வினி உபாத்யாயா கூறியுள்ளார்.

இந்நிலையில், அதற்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாகப் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்த கமல்ஹாசன் இன்று (மே 15) மதுரை திருப்பரங்குன்றத்தில் மநீம வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசிய கமல்ஹாசன், “அரவக்குறிச்சியில் பேசியதற்காக கோவப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை. என்னுடைய பேச்சை முழுமையாகக் கேட்காமல், அதன் நுனியைக் கத்தரித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

வாலையும், தலையையும் வெட்டிவிட்டால் யாரையும் திட்டியது போன்று மாற்றிவிடலாம். நான் ஒரு முறை சொன்னதை ஊடகங்கள் 200 முறை போட்டுள்ளன” என்றார். தேர்தல் அரசியல் களத்துக்கு வந்தபிறகு ஒரு இனம் மட்டும் போதுமா என்று கூறிய அவர், ”பெரும்பான்மையை நோக்கி நான் போய்விட்டால் மக்கள் நீதி என்ற பெயர் அடிபட்டு விடாதா? என் மக்கள் எல்லோரும் என்ன இனமாக இருந்தாலும், என்ன சாதியாக இருந்தாலும், என்ன மதமாக இருந்தாலும் அவர்களுக்கு வேண்டிய நீதி கிடைக்க வேண்டும். நான் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் என்றாவது பேசியிருக்கிறேன் என்று அவர்களால் சொல்ல இயலுமா?” என்றார்.

இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டேன் என்று சொல்கிறார்கள்; என் வீட்டுக்குப் போனால் இந்துக்கள் இருக்கிறார்கள் என்ற கமல், “அவர்களைப் புண்படுத்தும் வகையில் நான் பேசமாட்டேன். ஆனால் சரித்திர உண்மையை சொன்னால் புண்படுகிறது என்று சொன்னால், அந்த புண் ஆறாது. ஆற்ற வேண்டும். நாம் கூடித்தான் வாழ வேண்டும். சிறுபான்மை மக்கள் எல்லோரும் மக்கள் என்ற ஒரு சொல்லில் அடங்குபவர்கள். அவர்கள் வழிபடும் சாமி எது என்று நான் கேட்கவே மாட்டேன். அவர்கள் என் மக்கள்” என்றார்.

மேலும், தீவிரவாதி என்னும் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுங்கள் என்று கமல், “நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்றும், கொலையாளி என்றும் சொல்லியிருக்கலாம். நாங்கள் தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம். இனி தீவிரமாகத்தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை. மூன்று நாள் பிரச்சாரத்தில் என்னை பேசவிடாமல் தடுக்கும் முயற்சிதான் இது. எந்த ஊரிலும் எந்த ஜாதியையும், மதத்தையும் சந்தோசமாக பேசுவேன்; விமர்சிப்பேன். காரணம் இவர்கள் என் மக்கள்” என்றார்.

தோப்பூரில் காவல்துறையின் பலத்த பாதுகாப்புக்கு இடையில்தான் கமலின் பிரச்சாரம் நடந்தது. இதனிடையே திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சாமநத்தம், பனையூர், வில்லாபுரத்தில் நடைபெறவிருந்த கமலின் பிரச்சாரங்கள் ஒரு மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டு, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் கட்சித் நிர்வாகிகளுடன் அவர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன் ஜாமீன், மனு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டிருந்த மநீம பொதுக்கூட்டம் நடைபெறுமா இல்லையா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

..

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019