மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

அருள் கைது: பெரம்பலூர் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டம்!

அருள் கைது: பெரம்பலூர் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டம்!

ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் புகார் கொடுத்த விவகாரத்தில் பெரம்பலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ப. அருள் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.

அருள் மீது தமிழக அரசு தொடுத்து வரும் தொடர் அடக்குமுறைகளை எதிர்த்தும், பெரம்பலூர் மாவட்ட காவல்துறைக்கு எதிராகவும் வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களில் இறங்கியுள்ளன. ஏற்கனவே பெரம்பலூர் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடந்த திங்கள் முதல் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பெரம்பலூர் பார் கவுன்சிலும் அருளுக்கு ஆதரவான போராட்டங்களை முன்னெடுத்து உள்ளது.

இந்நிலையில் இன்று (மே 15) பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் அருள் விவகாரத்தில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறையைக் கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. அரசியல் கட்சிகள் சார்பான போராட்டமாக அல்லாமல் வழக்கறிஞர்கள் சங்க போராட்டமாகவே நடைபெற்றாலும் அருள் சார்ந்த, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலரும் இதில் பங்கேற்றனர்.

இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும், என்றும் வழக்கறிஞர்கள் மீதான காவல்துறையின் காழ்ப்புணர்ச்சியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன.

முன்னதாக வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் காவல்துறையை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“எந்த நபரும் பாதிக்கப்படாத நிலையில் மூன்றாம் தரப்பினரின் கற்பனையான குற்றச்சாட்டின்பேரில் வழக்கறிஞர் அருள் மீது, எஸ்சி, எஸ்டி வழக்கு தொடரப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டார். பின் அருள் கொடுத்த புகாரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராகவே வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட வழக்கானது இயற்கை நீதிக்கு எதிராகவும் வழக்கறிஞர்களின் தொழில் சுதந்திரத்தை நசுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை நிர்வாகம் ஏவலாளியாகவும் மாறி அதிகாரம் மிக்கவர்களின் விரல் அசைவுக்கு இயங்கி பணிந்து சட்ட நடைமுறைகள், நீதி பரிபாலனங்களைத் தங்கள் காலடியில் போட்டு நசுக்கி செயல்படுவது வெளிப்படையாக உள்ளது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், “அருள் அளித்த புகாரின் பேரில் அவர் மீதே பொய் வழக்கு புனையப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மாட்சிமை பொருந்திய கூடுதல் மகளிர் நீதிமன்றம் ஒரு ஆய்வாளருக்கு, நீதிமன்ற பணியாளர் மூலம் நீதிமன்றத்திற்கு வருகை தாருங்கள் என பலமுறை அழைப்பு விடுத்தும் அதனை ஏற்க மறுத்து ஆய்வாளர் மே 8 முதல் மே 9 மதியம் வரை தொடர்பு கொள்ளவில்லை. நீதிமன்றத்திற்கு இதுபோன்ற விஷயங்களில் பதிலை சமர்ப்பிக்க உதவி ஆய்வாளர், தலைமை காவலர்கள் உள்ளிட்டோர் இருந்தும் அவர்கள் பதிலளிக்காமல்.... விசாரணை அலுவலர் வந்துவிட்டார் வந்து கொண்டிருக்கிறார் என காவல்துறை கூறியதையும் அதற்காக நீதிமன்றம் காத்திருந்த நிகழ்வுகளும் நீதிமன்ற மாட்சிமை மீதான கவலையை அதிகரிக்கச் செய்கிறது. இதற்காக காவல்துறையை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டிக்கிறது” என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர்.

பெரம்பலூர் வழக்கறிஞர்களின் தொடர் போராட்டத்தால் காவல்துறை கதிகலங்கிப் போயுள்ளது. சில வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்ட பெரம்பலூர் காவல்துறையினர், “எங்க கையில எதுவும் இல்லை. மேலே இருந்து சொன்னதையே நாங்கள் செய்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

ராகுல் பிரதமர்: ஏற்கத் தயாராகும் மம்தா?

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019