மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

அந்த உடைப்பு ஏன் நிகழ்வதில்லை?

அந்த உடைப்பு ஏன் நிகழ்வதில்லை?

ஒரு கப் காபி!

ஆயிரம் கரங்கள் கொண்ட காற்று முகத்தின் மீது மென் தழுவல் நடத்தும் தருணத்தை மின்சார ரயில் பயணத்தில் நீங்கள் அடிக்கடி எதிர்கொண்டிருக்கலாம். அந்தக் காற்றின் தழுவலுக்கு நிகரான சில மனித நேயத் தழுவல்களையும் மின்சார ரயில் தினம் தினம் சகலருக்கும் வழங்கிக்கொண்டே இருக்கிறது.

மாநகருக்குள் தினம் தினம் பார்க்கும் ரயில் முகங்கள்கூட ரயில் சினேகமாய் மாறுவதற்கான வாய்ப்பு அபூர்வம். அதேநேரம் செங்கல்பட்டிலிருந்து நீண்ட தூரம், நீண்ட நேரம் பயணம் செய்யும் முகங்கள் சில நாட்களிலேயே பழகி பல நாள் நண்பர்கள் போல பழுப்பதுண்டு. நேரமும் தூரமும் மட்டுமே இதற்குக் காரணமா என்றால் அது மட்டுமல்ல. மனமும்தான்.

மாநகரத்துக்குள் தினம் தினம் பழகும் முகங்கள், தயக்கத்துடனான புன்னகையைத் தாண்டித் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. அதற்கான மனோதத்துவக் காரணம் ஆராயப்பட வேண்டியது. ஆனால் மாநகரம் தாண்டிச் சிற்றூர், பேரூர்களிலிருந்து பயணிப்பவர்கள் சொந்த ஊர், வேலையில் ஆரம்பித்து, குடும்பம் வரை கலந்துரையாடித் தங்கள் வீட்டு விசேஷங்களுக்குப் பரஸ்பரம் அழைத்துக்கொள்வதுவரை நெருங்கிவிடுகிறார்கள்.

மாநகர ரயில் நிலையம் ஒன்றில் இறங்கி நடைமேடையில் நடந்துகொண்டிருக்கிறேன். பெரிய கூட்டமில்லை. மதியத்துக்கும் மாலைக்குமான இறக்கத்தில் இருந்தது பொழுது. ஒரு இளம் பெண் குமுறிக் குமுறி அழுதுகொண்டே என்னைக் கடக்கிறார். அவருக்குக் கண்ணீர் பெருக்கெடுக்கிறது. அவர் அழுகிறார் என்பது எல்லாருக்கும் தெரிகிறது. எல்லாரும் கடந்து சென்றுகொண்டிருந்தோம்.

உண்மையில் சொல்கிறேன். சில வருடங்கள் முன்னால் நானும் இப்படித்தான் கடந்து சென்றுகொண்டிருந்தேன். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இருக்க முடியவில்லை. அந்த இளம்பெண் அருகே சட்டென சென்று, “என்னம்மா பிரச்சினை, எதும் உதவி வேணுமா?” என்று கேட்டேன். கண்ணீர் திரைக்கிடையே என்னைப் பார்த்த அந்தப் பெண், “ஒண்ணுமில்லைண்ணா… இறங்கும்போது இடிச்சுத் தள்ளிட்டாங்கண்ணா” என்றார். “கொஞ்சம் உட்கார்ந்துட்டு போங்கம்மா” என்று சொன்னவுடன், “சரிங்கண்ணா… தேங்க்ஸ்” என்றார் அழுகையை கட்டுக்குள் கொண்டுவந்தபடியே.

அந்தப் பிரச்சினை பெரிய பிரச்சினை இல்லை. நானும் பெரிய உதவி செய்யவில்லை. ஆனால், தான் அழுவதை நூற்றுக்கணக்கான முகங்கள் கண்டும் காணாமல் போகிற நிலையில் ஒரே ஒரு குரல், “ஏன் அழறீங்க?” என்று கேட்கும்போது அந்த குரல் யாருடைய குரலாக இருந்தாலும் அதற்குப் பேராற்றல் உள்ளது.

அழுகையை நிறுத்தும் ஆற்றல் ஆறுதலுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆறுதலான வார்த்தைகள் எந்தத் திசையிலிருந்தும், எவரிடமிருந்தும் எந்தப் பொழுதிலும் வரலாம் என்பதே மனிதத்தின் மாண்பு. ஆனால், மாநகரம் அந்த மனித மாண்பைப் பெருமளவு தொலைத்துவிட்டு நிற்கிறது.

மாநகரவாசிகளுக்குள் ஏன் அந்த உடைப்பு நிகழ்வதில்லை? சிற்றூர்வாசியும் பேரூர்வாசியும் அலுவலக ரீதியாக மாநகரவாசிகளாகவும் இருக்கும் நிலையில் அவர்களுக்கு மட்டும் எப்படி அந்தப் பழகும் வித்தை கை வருகிறது?

மாநகரவாசிகள் என்ற முலாமைத் தங்களுக்குள் பூசிக்கொண்ட பெரும்பான்மை கிராமத்து மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பொது இடங்களில் இதுபோன்ற மனித உடைப்பை மெனக்கெட்டுத் தடுத்து வைத்துக்கொள்கிறார்கள். இதுவும் மனநல நிபுணர்கள் விவாதிக்க வேண்டிய விஷயம்.

பொது இடங்களில் யார் அழுதாலும் பார்த்துக்கொண்டிருக்காதீர்கள். அவர்கள் என்ன வயதினராக இருந்தாலும், “ஏன் அழறீங்க?” என்ற ஒற்றை வார்த்தையை வீசுங்கள். அதுவே அவர்களின் முதல் ஆறுதலாக இருக்கக்கூடும். பொது இடங்களில் புன்னகைக்காமல்கூட இருந்துவிடலாம். ஆனால், அழுபவர்களை ஏன் என்று விசாரிக்காமல் இருந்துவிடல் ஆகாது.

ஏனெனில் நாளை நமக்கும் அழுகை வரலாம்... அந்தக் குரல் நமக்கும் தேவைப்படலாம்.

- ஆரா

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019