மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

இன்றைய கோட்சேக்களும் கமல்ஹாசனும்

இன்றைய கோட்சேக்களும் கமல்ஹாசனும்

ராஜன் குறை

கோட்சேயின் அணுகுமுறை, இந்து வல்லரசை உருவாக்க வேண்டும் என்ற பாசிச நோக்கிலான நவீன அரசியல் சித்தாந்தத்தைச் சார்ந்தது. இதில் நவீனம் எங்கே வருகிறது என்றால் தேசிய அரசு என்ற வடிவத்தை தெய்வமாக மாற்றும் மனோபாவத்தில் வருகிறது. இதில் தேசம் என்பதைவிட அரசு என்பது முக்கியத்துவம் பெறுவதுதான் பாசிசத்திற்கும் வெகுஜன அரசியலுக்கும் உள்ள முரண். அரசிற்காக தேசம், அதன் மக்கள் என்பது அரசு மைய நவீனம். மக்கள்தான் தேசம், அரசு என்பது மக்களுக்காக என்பது மனிதாயமான சிந்தனை.

வல்லரசுக் கனவு என்பது இன்றுவரை நம் சொல்லாடலில் இருக்கிறது. காந்தி நவீனத்திற்கு மாற்றான பண்பாட்டு விழுமியங்களை முன்வைப்பதற்குத் தேசம் என்ற களத்தை எடுத்துக்கொண்டாலும் அது பன்மை நிறைந்ததாக, வன்முறையற்றதாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர். அவருடன் பல முரண்பாடுகள் இருப்பவர்கள்கூட அது அவர் இலட்சியவாத நோக்கின் பலவீனம் என்றே கருதியது உண்டு.

கோட்சேவின் நவீன பாசிச அடையாளவாத அரசு மைய சித்தாந்தம் காந்தியின் கொள்கைகளைக் கண்டு அருவறுத்தது. அதன் காரணமாக அவரைக் கொல்வது இன்றியமையாதது என்று கோட்சேவும் அவர் கொள்கைகளைக் கொண்ட சில, பல இந்துத்துவர்களும் நினைத்தார்கள் இந்தக் கொள்கை முரணின் தீவிரத்தன்மையைச் சிறப்பாக எடுத்துச் சொன்னவர் சிந்தனையாளர் அஷிஸ் நந்தி. அவர் வழக்கு விசாரணையின்போது கோட்சே கொடுத்த வாக்குமூலத்தை வாசிப்பதன் மூலம் அஷிஸ் நந்தி அதைச் செய்தார். எண்பதுகளின் மத்தியில் அஷிஸ் நந்தியின் கட்டுரை வெளியானது (அக்கட்டுரையின் மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளது).

கோட்சேயும் சாகேத் ராமும்

கமல்ஹாசனின் ‘ஹே ராம்!’ ஒரு குழப்பமான படம். அதைக் குறித்து கமல்ஹாசன் சொன்ன நோக்கங்கள், அதை உருவாக்குவதற்கு அவர் எடுத்துக்கொண்ட சிரமங்கள், ஒரு திரைப்படமாகச் சிறப்பாக அமைந்த காட்சிகள் என இருந்தாலும் அந்தப் படம் மிக மோசமான அரசியல் புரிதலையே முன்வைத்தது. அதன் கதாநாயகன் சாகேத் ராம் கோட்சேவாக முயன்றவன். அவன் அந்த முயற்சியில் தோல்வியடைந்து, திடீரென விழிப்புணர்வு பெற்று, காந்தியவாதியாக மாறும்போது, அவன் செய்ய விரும்பியதை கோட்சே செய்து முடிக்கிறான்.

இதில் என்ன பிரச்சினை என்றால் இந்த கோட்சேவின் பதலீடான சாகேத் ராம் உருவாகக் காரணம் மதக் கலவரம். கலவரத்தில் தன் மனைவி பலாத்காரம் செய்யப்பட்டு இறப்பதால் வெறிகொண்டு கலவரத்தில் இறங்கியவனை, இந்து அமைப்பொன்றைச் சேர்ந்த அப்யங்கர் அடையாளம் கண்டு தொடர்புபடுத்திக்கொள்கிறான். அந்த அமைப்பின் கருத்தியல் சாகேத் ராமிற்குப் போதிக்கப்பட்டாலும், சாகேத் ராமின் உளவியல் அவன் மனைவிக்கு நேர்ந்ததற்குப் பழிவாங்கும் உளவியலாகத்தான் இருக்கிறது. இதைத் தொடர்ந்து படம் இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக மாறிவிடுகிறது.

மத நல்லிணக்கம் அவசியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் நவீன அடையாளவாத அரசியலின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வது. மதத்தையும், மத அடையாளவாதத்தையும் குழப்பிக்கொள்ளாமல் இருப்பது. காந்தி கடைசியாக உச்சரித்ததாகக் கருதப்படும் “ஹே ராம்!” என்ற விளிச்சொல்லிற்கும், ராமரைத் தங்கள் அடையாள அரசியலுக்குப் பயன்படுத்தும் இயக்கத்திற்கும் தொடர்பு எதுவும் கிடையாது. கமல்ஹாசன் போன்ற ஒரு நபர் அஷிஸ் நந்தி போன்ற சிந்தனையாளர்களைப் படித்தோ, படித்தவர்களுடன் உரையாடியோ இதையெல்லாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். தனக்காகப் பிரசாரத்திற்கு வரும் யோகேந்திர யாதவைக் கேட்டாலேகூட அவர் தெளிவுபடுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கமல்ஹாசனின் புகழ்பெற்ற தற்காமம் அவரை அடுத்தவர்களுக்குக் காதுகொடுத்துக் கேட்டுக் கற்க அனுமதிக்காது.

இன்றைய கோட்சேக்களும் கமலும்

இந்தப் பிரச்சினையின் பின்புலத்தில்தான் கமலின் தேர்தல் பிரச்சாரப் பேச்சை நாம் காண வேண்டும். கோட்ஸே காந்தியைக் கொன்றது மதக் கலவரத்தின் பகுதியாக அல்ல. ஒரு நவீன அரசியல் கோட்பாட்டின் பாசிசத்தின் அடிப்படையில். அதே பாசிச சித்தாந்தம்தான் சமீபத்தில் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் என்று பல கொலைகளைச் செய்தது. அந்தக் கொலைகள் நடக்கும்போது கமல்ஹாசன் என்ன விண்வெளிப் பயணமா சென்றிருந்தார்? ஆளும் பாரதிய ஜனதாவைச் சார்ந்தவர்கள், இந்துத்துவ அரசியல் அடையாளம் கொண்டவர்கள் ஆகியோர் அந்தக் கொலைகளைச் சமூக வலைதளங்களில் வரவேற்றதெல்லாம் அவருக்குத் தெரியாதா? இதுபோன்ற கொலைகளால் பிரகாஷ் ராஜ் கொதித்தெழுந்து பெங்களூரில் சுயேச்சை வேட்பாளாராக நிற்பதும் தெரியாதா?

இன்று பகிரங்கமாகக் கோலோச்சும் கோட்சேவின் வழித்தோன்றல்களைக் கண்டிக்காமல் கோட்சே குறித்துக் கமல்ஹாசன் பேசுவதன் அரசியல் என்ன என்ற கேள்வி ஏன் கேட்கப்படுவதில்லை?

இங்கேதான் நம் பொதுமன்றத்தின் பார்ப்பனியக் கருத்தியல் மேலாண்மை துலக்கமாகிறது. இது வெளிப்படையாக மோடியையோ, பாரதீய ஜனதாவையோ ஆதரிக்காவிட்டாலும், அவர்களை ஒரு அரசியல் தரப்பாக மாற்றுகிறது. குடிமைச் சமூக விழுமியங்களுக்கு, மக்களாட்சி விழுமியங்களுக்கு எதிரான அவர்களின் வன்முறைக் கலாசாரத்தை, பாசிச அரசியலைப் பேச மறுக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும் தங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுத்த பிறகும்கூட பொதுமன்றம் இந்தக் கொலைகளுக்கு எதிராகத் தன் வலுவான கண்டனத்தைப் பதிவு செய்யவில்லை. ஊடகங்களில் ஊடுருவிய இந்துத்துவச் சார்பாளர்களால் வெற்றிகரமாக எல்லாப் பிரச்சினைகளையும் திசை திருப்ப முடிகிறது.

பெரியார் மிகத் துல்லியமாக, “காந்தி பார்ப்பனர்களை நம்பினார், அவர்களால் கொலை செய்யப்பட்டார்” என்று கூறினார். அவர் பார்ப்பனர்கள் என்று சொல்வது பார்ப்பனியக் கருத்தியலை முன்னெடுப்பவர்கள் என்ற பொருளில்தான். பார்ப்பனியம் என்பதே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அடிப்படை என்பதும், அதன் நவீன அரசு மையத்துவம் பார்ப்பனியக் கருத்தியல் மேலாண்மையின் அடிப்படையில் கட்டப்பட்டது என்பதும்தான்.

மாலனின் பிரச்சினை என்ன?

இவர் பிரச்சினை இப்படியிருக்க அந்தக் காலத்தில் காந்தி படுகொலையை முன்வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சில பரபரபான இதழியல் வெகுஜன வரலாற்று ஆக்கங்களை அடிப்படையாக வைத்து ‘ஜன கண மன’ என்ற ஒரு புதினத்தை எழுதியவர் மாலன். அவரால் இன்று கோட்சே கொலை செய்தது ஒரு எதிர்வினை என்று பேச முடிகிறது. அதாவது இந்து - முஸ்லிம் கலவரத்தின் பகுதியாக, முஸ்லிம்களின் வன்முறைக்கான எதிர்வினையாம் அது. காந்தி முஸ்லிம்களை ஆதரித்ததால் கோட்சே கொன்றானாம். கோட்சேவை சாகேத் ராமாக மாற்றும் தந்திரத்தை மாலன் செய்வது பொதுமன்றத்தின் சீரழிவை, பலவீனத்தைக் காட்டுகிறது. கோட்சே குறித்து இன்று விரிவான நூல்கள் வெளியாகியுள்ளன. காந்தி கொலை குறித்தும் நிறைய தரவுகள் வெளியாகியுள்ளன.

அதையெல்லாம்விட முக்கியம், அஷிஸ் நந்தியின் பார்வை. மாலன் போன்ற ஒரு இதழியலாளரும் கவிஞருமான பிரிதீஷ் நந்தி இல்லஸ்டிரேடட் வீக்லி ஆசிரியராக இருந்தபோதுதான் கோட்சே குறித்த அஷிஷ் நந்தியின் கட்டுரை அதில் வெளியானது. அந்தக் கட்டுரையின் தடயங்கள் எதுவும் மாலனின் புதினத்தில் கிடையாது. இன்று அவர் பேச்சிலும் அது அறவே கிடையாது.

காந்திய வழியும் கோட்சே வழியும்

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதன் முன் இருந்த பல சாத்தியங்களில் இரண்டு மிக முக்கியமானது. ஒன்று மத அடையாளத்தை அரசியல் அடையாளமாக ஏற்க மறுத்து, இந்தியாவின் பண்பாட்டுப் பன்மையை, அகிம்சை விழுமியங்களை, எளிய வாழ்வை, குடிமைச் சமூகத்தின், அரசின் அடிப்படையாகக் கொள்வது; வல்லரசுக் கனவு, மேற்கத்திய பாணி உற்பத்தி -நுகர்வின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது. அதுவே காந்திய வழி.

மற்றொன்று அடையாளவாத அரசியலின் அடிப்படையில் வலுவான அரசை உருவாக்கி அதைப் பொருளாதார, ராணுவ, உற்பத்தி - நுகர்வுப் போட்டியில் ஈடுபடுத்தி உலக அளவிலான அதிகாரப் போட்டியில் ஈடுபடுவது. அது கோட்சேவின் வழி.

இதில் எந்த வழியில் போக வேண்டும் என்பதை இன்றும்கூட யோசிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அதுவே நம் அரசியலின் திசைகாட்டி. கமல்ஹாசனும், மாலனும் நம்மை திசைதிருப்பக் காரணம் என்ன என்பதையும் நாம் தொடர்ந்து பரிசீலிக்கத்தான் வேண்டும்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

ரீபண்ட் தொகை: வருமான வரித் துறை எச்சரிக்கை!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019