மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு: தொழிற்சாலைகளுக்குப் பயன்!

சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு: தொழிற்சாலைகளுக்குப் பயன்!

சென்னை கோயம்பேடு, கொடுங்கையூரில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பெறப்படும் நீரானது ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டையிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது குடிநீர் வாரியம்.

கோடையினாலும் வடகிழக்குப் பருவ மழை சரியாகப் பொழியாததனாலும், சென்னை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாடத் தேவைகளுக்கே நீர் போதாத நிலையில், பெரிய தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டையில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பெறப்படுகிறது. மணலியில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்குத் தேவையான 45 மில்லியன் லிட்டர் நீரானது மீஞ்சூரில் உள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதில் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது சென்னை குடிநீர் வாரியம்.

ரூ. 700 கோடி மதிப்பில் சென்னை கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய 4 இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் கோயம்பேடு, கொடுங்கையூர் பகுதிகளில் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூலை மாதம் முதல் இங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படும்.

இது பற்றிப் பேசிய சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.என்.ஹரிஹரன், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பெறப்படும் நீரைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கவுள்ளதாகக் கூறினார்.

“கோயம்பேடு, கொடுங்கையூர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு மாற்று ஏற்பாடாக வழங்கப்பட உள்ளது. இதற்காக கோயம்பேட்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை சிப்காட் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குழாய்கள் பதிக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதேபோல் கொடுங்கையூரில் இருந்து மணலியில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தொழிற்சாலைகளுக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டால், தற்போது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019