மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

அமித் ஷா பேரணியில் வன்முறை: போலீசார் தடியடி!

அமித் ஷா பேரணியில் வன்முறை: போலீசார் தடியடி!

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மெகா பேரணியைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்துள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஆறு கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மே 19ஆம் தேதி இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன. முன்னதாக ஜாதவ்பூரில் அமித்ஷா பங்கேற்கவிருந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது. அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரை இறங்கவும் அனுமதி அளிக்கப்படவில்லை. கூட்டம் நடைபெற இருந்த இடத்தில் திருணமூல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பிரச்சாரக் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, “என்னை பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கலாம். ஆனால் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க முடியாது” என்று அமித் ஷா, மம்தா பானர்ஜிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பின்னர், நேற்று மாலை 4.30 மணி அளவில் மத்திய கொல்கத்தாவின் எஸ்ப்ளனேட் பகுதியில் அமித் ஷாவின் மெகா பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியைத் தொடர்ந்து திருணமூல் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களுக்குத் தீவைப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்று உள்ளன. திருணமூல் காங்கிரஸின் மாணவர் அணியினர் அமித் ஷாவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதாகவும், அவர் சென்ற வாகனத்தின் மீது கற்களை வீசியதாகவும் குற்றம்சாட்டப்படுவதோடு ’கோ பேக் அமித் ஷா’ என்று அவர்கள் முழக்கமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்தே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கொல்கத்தா விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்கு வெளியே உள்ள சாலையில் இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகத்தில் இருந்த 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வியாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையும் உடைக்கப்பட்டிருக்கிறது. இந்த வன்முறை தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதில் காவி உடை அணிந்த சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்துவது பதிவாகியிருக்கிறது. இந்த வன்முறைக்குக் காரணம் நீங்கள்தான் என்று இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவருகின்றனர்.

ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அமித் ஷா, “திருணமூல் காங்கிரஸ் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் என்னால் முழுமையாகப் பேரணியை நடத்த முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக குண்டர்கள் வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் அடங்கிய குழு தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நிர்மலா சீதாராமன், ”இந்த வன்முறைச் சம்பவம் என்பது, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்பதைக் காண்பிக்கிறது” என்று கூறியுள்ளார்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019