மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

பிரதமர் மம்தா?

பிரதமர் மம்தா?

விவேக் கணநாதன்

‘வங்கம் இந்தியாவின் வரலாற்றுக்கு வாசல்’ என்பார்கள். இந்தி ஆதிக்க எதிர்ப்பு, கூட்டாட்சி தத்துவத்துக்கான முன்னெடுப்புகள், அரசியலின் இரண்டு தரப்புகளில் ஏதேனும் ஒரு தரப்பில் நிலைநிறுத்தப்பட்ட உறுதியான முற்போக்கு அடையாளம் போன்றவை தமிழ்நாட்டுக்கு ஒப்பான வங்கத்தின் இயல்புகள்.

2019இல் டெல்லிக் கோட்டையின் அதிகார மையத்தைத் தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக இருக்கப்போவது வங்கம். கடைசியாக நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் வரை அங்கே அசைக்கக்கூட முடியாத மாபெரும் சக்தியாக வளர்ந்து நிற்கிறார் மம்தா பானர்ஜி.

கட்சி ஆரம்பித்த 20 ஆண்டுகளுக்குள் இரண்டு முறை ஆட்சியைப் பிடித்துவிட்டார். 7 ஆண்டுகள் முதல்வர், 6 ஆண்டுகள் மத்திய அமைச்சர் எனப் பெரும்பாலான காலம் அதிகாரத்திலேயே இருந்திருக்கிறார். 2009க்குப் பிறகு தொடர் ஏறுமுகம்தான் அவருக்கு. 2008இல் உள்ளாட்சியில் வெற்றி. 2009 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்கள். 2011இல் மாநில ஆட் சியைக் கைப்பற்றினார். 2014 மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே நான்காவது பெரும் கட்சியாக உருவெடுத்தார். 2016இல் மீண்டும் முதல்வர். இப்போது, பிரதமர் பதவிக்கு மம்தா பெயர் அடிபடுகிறது.

எல்லோருக்குமான அக்கா

கடந்த 10 ஆண்டுகளில் மம்தா பெற்றிருப்பது அசுரத்தனமான மக்கள் செல்வாக்கு. வங்கத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் அவரை ஏற்றுக்கொள்ளும் அரசியல் தரப்பு இருக்கிறது. வங்கம் மம்தாவை ‘amar didi’ என்கிறது. அப்படியென்றால், எல்லோருக்குமான அக்கா.

‘எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என மம்தா முன்வைக்கும் முழக்கம்தான் இதற்குக் காரணம். இந்த அடைமொழிக்குத் தனது அதிகாரத்தின் மூலம் நியாயம் செய்திருக்கிறார் மம்தா. கடந்த ஏழு ஆண்டுக் காலத்தில் முன்னெப்போதையும்விட வங்கத்தில் போராட்டங்கள், வேலைநிறுத்தம் குறைந்துள்ளன. ஒருபக்கம் வங்கக் கடல், மறுபக்கம் இமயமலை, பக்கத்திலேயே பங்களாதேஷ் என அமைந்திருக்கும் வங்கம் சமீபகாலமாக நல்ல முன்னேற்றம் அடைந்துவருகிறது.

வங்கத் துறைமுகங்கள் வியாபாரத்துக்கு ஏற்றவகையில் மாறியிருக்கின்றன. ‘வங்கத்துக்கு வாருங்கள், வளர்ச்சியைத் தாருங்கள்’ என்கிற மம்தாவின் கோஷம் வெற்றி பெற்றிருக்கிறது. சிங்கூர் டாடா தொழிற்சாலை நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக வாள் சுழற்றித்தான் மம்தா முதலில் வெற்றிக்கொடி நாட்டினார். இதனால், தொழில் துறையினர் மத்தியில் அவருக்குக் கொஞ்சம் அவப்பெயர் இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அதை மம்தா சரி செய்திருக்கிறார்.

2011இல் ஆட்சிக்கு வந்த பிறகு கல்வி, உட்கட்டமைப்பு, ஒருங்கிணைந்த நகர - கிராம வளர்ச்சி, சாலைகள், பெண்கள் முன்னேற்றம், அரசியல் நிலைத்தன்மை எனப் பலவற்றில் கவனம் செலுத்தினார் மம்தா. மாணவர்களுக்கு சைக்கிள், மாநில மக்கள் அனைவருக்கும் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு எனத் தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தினார். 2015இல் ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் அளித்த அறிக்கையின்படி, 7.3% என்கிற ஒட்டுமொத்த இந்திய ஜி.டி.பி.யைவிட அதிகமாக, சுமார் 12.02% என்னும் வேகத்தில் இருந்தது வங்கத்தின் வளர்ச்சி.

37 ஆண்டுக் கால மார்க்ஸிஸ்ட்டுகளின் ஆட்சியில் சராசரி ஜி.டி.பி. வளர்ச்சி 3 - 4% மட்டுமே. 2012 முதல் 2015 வரை இந்தியாவில் வேகமாக வளரும் மாநிலங்களில் வங்கத்தின் இடம் மூன்று. இப்போது, ஜி.டி.பி. அடிப்படையில் வங்கத்தின் இடம் இந்திய அளவில் 6. மம்தாவின் ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 8% வளர்ச்சி சாத்தியப்பட்டுள்ளது.

வளர்ச்சி, மேம்பாடு என்கிற அளவில் மம்தாவுக்கு நல்ல பெயர் கிடைத்திருந்தாலும், அவரது அமைச்சரவை சகாக்களின் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் எழுந்துவருகின்றன.

திருணமூல் காங்கிரஸ் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகள் மீது கம்யூனிஸ்ட்களின் வரலாற்றையே மிஞ்சும் அளவுக்குக் கடும் வன்முறையைப் பிரயோகித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இன்னொரு பக்கம், வங்கத்தின் கழுத்தைக் கடன் சுமை முறித்துக்கொண்டிருக்கிறது. இது உண்மையான வளர்ச்சியே இல்லை என்கிற விமர்சனத்தை மார்க்ஸிஸ்ட்கள் முன்வைக்கின்றனர்.

நிறம் மாறும் மாநிலம்

நடந்து முடிந்த வங்க உள்ளாட்சித் தேர்தல், வங்க அரசியல் நிறம் மாறிவருவதைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. காரணம், உள்ளாட்சியில் திருணமூல் காங்கிரஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது பாஜக. மொத்தம் உள்ள 58,000 இடங்களில் 21,110 இடங்களில் வென்றதன் மூலம் தற்போதைக்குத் தன்னை அசைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார் மம்தா.

ஆனால், திருணமூல் கட்சிக்கு அடுத்த இடத்திலிருந்த மார்க்ஸிஸ்ட் கட்சியினர் சரிய, அவ்விடத்தை நோக்கி பாஜக முன்னேறுகிறது. மார்க்ஸிஸ்ட்டுகள் 1,708 இடங்களிலும், காங்கிரஸ் 1,062 இடங்களிலும் வெல்ல, பாஜக 5,747 இடங்களில் வென்றிருக்கிறது. மாநிலம் முழுவதும் 18% வாக்குகளைப் பெற்று திருணமூல் காங்கிரஸுக்கு முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக. இடதுசாரிக் கட்சிகள் 4.5% வாக்குகள், காங்கிரஸ் 3.3% வாக்குகள் என்று மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

2013இல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் வெறும் 18% இடங்களில் மட்டும் போட்டியிட்ட பாஜக, இந்த ஆண்டு 48% இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பாஜக வென்றிருக்கும் பல தொகுதிகள் முன்பு மார்க்ஸிஸ்ட்டுகளிடம் இருந்தவை என்பது திருணமூலைத் தாண்டி, இடதுசாரிகளையும் கலக்கம் அடைய வைத்திருக்கும் செய்தி.

மால்டா, புரிலியா, ஜார்ஹாம், நாடியா, அலிபுர்தார் போன்ற மாவட்டங்களில் பாஜக செல்வாக்கு ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் கெட்டிப்பட்டுவருகிறது. விளைவு திருணமூல், பாஜக இடையே வன்முறை வெடிக்கிறது. பாஜகவின் செல்வாக்கான கோட்டையாகியிருக்கும் டார்ஜிலிங் ‘கூர்காலேண்ட்’ மாநிலப் பிரிவினைக் கோரிக்கைக்காகக் கலவரத்தால் எரிந்தது.

வளரும் மென் இந்துத்துவம், அழியாத வன்முறை, சமூக அரசியலில் தளரும் சித்தாந்த அடித்தளம் என உருமாறும் வங்கத்தில், மம்தாவின் இடம் காலியாவதை நோக்கி கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸும், பாஜகவும் காத்திருக்கின்றன. மம்தா தன் கட்சியைப் பலப்படுத்தி வைத்திருக்கிறார். ஆனால், அதன் விளைவாக வீழ்ந்துகொண்டிருக்கும் மார்க்ஸிஸ்ட்களின் இடத்தை எதிர்பாராத விதமாக பாஜக பிடித்துவருகிறது. மம்தாவை வீழ்த்துவதற்குத் தேவையான கட்டமைப்பு பாஜகவிடம் கிடையாது. அத்தகைய இடங்களில் மம்தாவை வீழ்த்த கம்யூனிஸ்ட்கள் பாஜகவுக்கு உதவுவதாக கடந்த வாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டது.

டெல்லியில் வலிமைபெற வேண்டுமென்றால் வங்கத்தின் 42 மக்களவைத் தொகுதிகளிலும் வெல்வது மம்தாவின் இலக்கு. 22 இடங்களையாவது வெல்வது அமித் ஷாவின் இலக்கு. 15 - 20% வாக்கு வங்கியை வைத்திருக்கும் மார்க்ஸிஸ்ட்கள் ஓர் இடத்தில்கூட வெல்ல முடியாது என்கின்றன கருத்துக்கணிப்புகள். “பாஜக கூட்டணிக்கு நிச்சயம் போதுமான இடம் கிடைக்காது. அந்த நேரத்தில் திருணமூல் காங்கிரஸுக்கு மிக முக்கியமான இடம் இருக்கும். மோடி அல்லாத, ராகுலை ஏற்க முடியாதவர்களின் நிச்சயமான தேர்வாக மம்தா இருப்பார்” என பாஜகவிலிருந்து விலகி யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இன்னொருபுறம் மம்தாவோடு தொடர்பில் இருக்கிறார் சந்திரபாபு. ஆனால், அகிலேஷும் மாயாவதியும் இவருக்கு ஆதரவு காட்டவில்லை.

இன்று மம்தா, நாளை பாஜக?

சமூக அரசியல் களத்தில் பாஜக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிறது; மம்தா ‘ஜெய் மா காளி’ என்கிறார். பாஜக ராம் நவமி கொண்டாட்டத்தை விரிவாக்குகிறது. மம்தா காளி பூஜையை ஊக்குவிக்கிறார். நேதாஜி, விவேகானந்தரை இந்துத்துவப்படுத்துகிறது பாஜக. விவேகானந்தரின் தேசியத்தை மாநில இன அடையாளத்தின் ஒரு பகுதியாகவும் நேதாஜியின் சாகசங்களை வங்கத்து வீரமாகவும் முன்வைக்கிறார் மம்தா.

ஆனால், மம்தா நடத்துவது தனிமனித ஆளுமையின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி. இந்தச் சூழலில், மம்தாவின் அரசியல் எழுச்சி பின்னாளில் பாஜகவுக்குப் பயன்படக்கூடும் என்ற அச்சம் இப்போதே எழுந்துள்ளது.

இந்தி ஆதிக்க எதிர்ப்புணர்வு, கூட்டாட்சிச் சிந்தனையில் புத்துயிர்ப்பு என்ற அதிகார அரசியல் ஒருபுறம்; மென் இந்துத்துவப் பண்பாட்டை வலுவாக்கும் சமூக அரசியல் மறுபுறம் என வங்க அரசியல் திகைக்கிறது. தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பாஜகவுக்கு எதிரான பொது வெறுப்பு வங்கத்தில் கிடையாது. இது பாஜகவின் நீண்டகாலத் திட்டங்களுக்கு மிகவும் சாதகமானது.

மம்தா சந்திக்கும் சவாலை 1990களில் பிகாரில் லாலு சந்தித்த சவாலோடு ஒப்பிடுகின்றனர் டெல்லி பத்திரிகையாளர்கள். ஆனால், 2014க்குப் பிறகு ஜெயலலிதா சந்தித்த நெருக்கடிகளோடு அவற்றை ஒப்பிடுவது இன்னமும் பொருத்தமாக இருக்கும். 2014 தேர்தலில் நேரடியான வாய்ச்சண்டைக்கு மோடியை அழைத்து, மோடி அலைக்கு எதிராக தன் பிம்பத்தை முன்னிறுத்தினார் ஜெயலலிதா.

இம்முறை அதே நிலைக்கு மம்தா வந்துள்ளார். ‘மோடியின் பல்லை உடைப்போம்’, ‘செவிளில் அறைவார்கள்’ என மம்தா கொட்டும் அனல் ஜெயலலிதா உச்சரித்த மொழியின் வங்கத்துச் சூழ்நிலைபெயர்ப்பு. ஜெயலலிதா பிரதமராகப் போகிறார் என்கிற பிரச்சாரம் தமிழ்நாட்டு வாக்குகளை 2014இல் பெரிய அளவில் ஜெயா பக்கம் திருப்பியது. பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போயிருந்தால் அந்த ஆட்டத்தையும் ஆடிப்பார்த்திருப்பார் ஜெயலலிதா. காரணம், ஜெயாவுக்கு அன்றைக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் அப்படி. ஜெயாவுக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் இன்றைக்கு மம்தாவைச் சுற்றி உள்ளன.

அந்த வலைகளை அறுப்பதற்காகவேனும் என்ன விலை கொடுத்தும் பிரதமராகவோ, அல்லது கூட்டணி அரசில் மிக முக்கிய இடத்தைப் பெறவோ நினைக்கிறார் மம்தா.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூடான ஆட்டத்தில் மம்தா ஒருவேளை பிரதமராகவும் வரலாம். ஆனால், மம்தாவின் வாழ்வுக்குப் பிறகான ‘மம்தா’வைப் பிரதமர் பதவிப் பட்டியலில் பெயர் இருப்பது மட்டும் காப்பாற்றாது. தான் பேசும் அரசியலைத் தனக்குப் பிறகு காப்பாற்ற மம்தா என்ன செய்யப்போகிறார் என்பதிலிருக்கிறது அவரது சாதுர்யம்.

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019