மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 மே 2019

சொன்னது சொன்னபடி!

சொன்னது சொன்னபடி!

ஒரு சொல் கேளீரோ! – 6: அரவிந்தன்

ஊடகங்களில் செய்திகளைத் தரும்போது யாரேனும் கூறியதை அல்லது அறிக்கையில் தெரிவித்ததை வைத்துச் செய்தியை எழுதுகிறார்கள். சொன்னதைச் சொன்னபடியே தருவது நேர் கூற்று. அதை நம் வார்த்தைகளில் மாற்றித் தருவது அயல் கூற்று.

நேர் கூற்று (Direct speech):

“நான் 20ஆம் தேதி திரும்பி வருவேன், அதுவரை இந்தப் புகார்க் கடிதங்களைப் பிரிக்க வேண்டாம்” என்று கட்சித் தலைவர் கூறினார்.

அயல் கூற்று (Indirect speech):

தான் 20ஆம் தேதி திரும்பி வருவதாகவும் அதுவரை எந்தக் கூட்டமும் நடத்த வேண்டாம் என்றும் கட்சித் தலைவர் கூறினார்.

நேர் கூற்று, அயல் கூற்றுக்கான இலக்கணத்தில் பல கூறுகள் உள்ளன. அவற்றை முழுமையாக இங்கே தர இயலாது. எனவே முக்கியமான கூறுகளை மட்டும் பார்ப்போம்.

ஒருவர் சொன்னதைச் சொன்னபடி எழுதும்போது இரட்டை மேற்கோள் குறிக்குள் தர வேண்டும்.

ஒருவர் சொன்னதை உள்வாங்கி நாம் சொல்வதாக எழுதும்போது இரட்டை மேற்கோள் தேவையில்லை.

“இது அபாயகரமான போக்கு” என்றார் அவர் – இது நேர் கூற்று.

இது அபாயகரமான போக்கு என்றார் அவர் என்று எழுதினாலும் தவறு இல்லை. ஒற்றை வாக்கியத்தை அப்படியே எழுதும்போது மேற்கோள் இல்லாமல் தந்தாலும் குழப்பம் எதுவும் வராது. ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்களை நேர் கூற்றாக எழுதும்போது மேற்கோள் குறிகள் தேவை. இல்லையென்றால் எது அவர் சொன்னது, எது நீங்கள் சொல்வது என்னும் குழப்பம் ஏற்படும்.

எடுத்துக்காட்டு:

“இது அபாயகரமான போக்கு. எங்கள் நிறுவனம் ஒருபோதும் இதை அனுமதிக்காது. நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என்றார் அவர்.

இந்தக் கூற்றில் மூன்று வாக்கியங்கள் உள்ளன. மேற்கோள் அடைப்பிற்குள் இருக்கும்போது இவை அனைத்தும் அவருடைய கருத்துகள் என்பது தெளிவாகிறது. மேற்கோள் இல்லையென்றால் இந்த மூன்று வாக்கியங்களையும் சொன்னது யார் என்னும் குழப்பம் ஏற்படும்.

இதை அயல் கூற்றில் இப்படி எழுதலாம்:

இது அபாயகரமான போக்கு என்றும், தங்கள் நிறுவனம் ஒருபோதும் இதை அனுமதிக்காது என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

இது சரியான வாக்கியம்தான் என்றாலும், வாக்கியம் நீளமாக இருக்கிறது. ஒரே வாக்கியத்தில் மூன்று முறை ‘என்றும்’ என்னும் சொல் வந்துள்ளது. இது படிப்பவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தும்.

மேற்கண்ட வாக்கியத்தை அயல் கூற்றில் இப்படி எழுதலாம்.

இது அபாயகரமான போக்கு என்று சொன்ன அவர், தங்கள் நிறுவனம் இதை அனுமதிக்காது என்றார். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறினார்.

இப்படி உடைத்து எழுதலாம். எளிமை, தெளிவு இரண்டும் இதில் உள்ளன.

ஆனால், அயல் கூற்றில் பேச்சு அல்லது அறிக்கையைக் கொடுக்கும்போது நான் என்னும் சொல் வரக் கூடாது. அவர் அல்லது அவர்கள் அல்லது அமைப்பின் பெயர் வர வேண்டும். மேலே உள்ள உதாரணத்தில் இந்த மாற்றத்தைக் கவனிக்கலாம்.

அதேபோல, மேற்கோளுக்குள் வரும் நான், நீங்கள் என்னும் சொற்களை மாற்றக் கூடாது. சொன்னது சொன்னபடி இருக்க வேண்டும்.

‘செய்வதாகவும்’, ‘சொன்னதாகவும்’ என்பன போன்ற சொற்கள் அயல் கூற்றுக்கே உரியவை. மேற்கோள் குறிகளுக்குள் இதுபோன்ற சொற்கள் வரக் கூடாது.

பொது விதி:

ஊடகங்களில் அறிக்கை அல்லது பேச்சை அப்படியே பயன்படுத்துவது என்பது அரிதான சமயங்களில்தான் நிகழும். ஊடகம் தன்னுடைய நடையில் அறிக்கை / பேச்சை வழங்குவதே பொதுவான நடைமுறை. மேற்கோளுக்குள் நீண்ட செய்தியைப் படிக்க அலுப்பு ஏற்படும். பேச்சை எழுதும்போது மேற்கோளுக்குள் எங்கே பத்தி பிரிப்பது என்னும் சிக்கலும் எழும். எனவே நீண்ட பேச்சை எழுதும்போது ஓரிரு வாக்கியங்களை மட்டும் நேர் கூற்றில் மேற்கோள் குறிகளுக்குள் கொடுத்துவிட்டு அயல் கூற்றில் எழுதுவதே வசதியானது. பேசியவரின் சொற்களைக் கூடியவரை மாற்றாமல் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.

செய்திக் கட்டுரைகளில் நாம் சொல்ல வரும் கருத்தை அல்லது முன்வைக்கும் வாதத்தை நிறுவ உரிய நபர்களின் கூற்றுகளைப் பயன்படுத்துவோம். அப்படிப் பயன்படுத்தும்போது நீளமாக மேற்கோள் காட்டுவதைத் தவிர்க்கலாம். முக்கியமான பகுதிகளை மட்டும் மேற்கோளுக்குள் சொன்னது சொன்னபடி தந்துவிட்டு, பிற பகுதிகளை அயல் கூற்றாகத் தந்து, என்று அவர் கூறினார் என எழுதலாம்.

(தொடரின் அடுத்த பகுதி வரும் வெள்ளியன்று)

தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்

மொழியில் இருக்க வேண்டிய நெகிழ்வு!

ஒருமை – பன்மை மயக்கம் எப்படி ஏற்படுகிறது?

ஒருமை – பன்மை: மேலும் சில விதிகள்!

இது யாருடைய செய்வினை?

.

.

மேலும் படிக்க

.

எடப்பாடியை அகற்ற பரோலில் வரும் சசிகலா

.

எடப்பாடிக்கு எதிராக அணி திரளும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்!

.

சந்திரபாபு நாயுடுவுடன் துரைமுருகன் சந்திப்பு!

.

தேவராட்டம் கொடுத்த லாபம்!

.

திமுக பேசியது உண்மைதான்: தமிழிசை

.

.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 15 மே 2019