மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

13 கோடி, 12 கிலோ தங்கம்: எடப்பாடிக்கு துரைமுருகன் சவால்!

13 கோடி, 12 கிலோ தங்கம்: எடப்பாடிக்கு  துரைமுருகன் சவால்!

துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் 13 கோடி பணம், 12 கிலோ தங்கத்தை வருமான வரித் துறை கைப்பற்றியதாக முதல்வர் குற்றம்சாட்டிய நிலையில், அதற்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

வேலூருக்கு நடைபெற இருந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். மார்ச் 31ஆம் தேதி துரைமுருகன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 10 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 11.48 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனைக் காரணம் காட்டி வேலூர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 1ஆம் தேதி சூலூரில் நடந்த பிரச்சாரத்தின்போது இதனைக் குறிப்பிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “25 நாட்களுக்குள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஸ்டாலினை முதல்வராக்கும் பொறுப்பை துரைமுருகன் ஏற்றுக்கொள்வதாகப் பேசியிருக்கிறார். அவரால் அவரது மகனையே வெற்றிபெற வைக்கமுடியவில்லை. அவரது மகன் வேலூரில் திமுக சார்பாக நிறுத்தப்பட்டார். அப்போது வருமான வரித் துறை அதிகாரிகள் அவருக்கு வேண்டியப்பட்ட வீட்டில் சோதனை செய்தபோது மூக்குத்தி, கால் பவுன், அரை பவுன் என 12 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

13 கோடி ரூபாய் பணத்தை ரொக்கமாக எடுத்தார்கள். அனைத்தும் புது 200 ரூபாய் நோட்டுக்கள். கிடைத்தது 13 கோடி, கிடைக்காதது எத்தனை கோடி என்று தெரியவில்லை. 8வருடம் ஆட்சியில் இல்லாதபோதே இவ்வளவு கொள்ளையடித்திருக்கிறார்கள் என்றால், ஆட்சியில் இருந்திருந்தால் எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்கள்” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (மே 3) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், இதுதொடர்பாக வந்த செய்தியை பார்த்தபோது எடப்பாடி பழனிசாமியை பார்த்து பரிதாபப்படுவதா, சிரிப்பதா அல்லது ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை. முதலமைச்சர் இவ்வளவு விவரம் அற்றவராக இருப்பார் என்று நினைக்கவில்லை. அவர் கூறியது அனைத்தும் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “எங்களது வீடு-கல்லூரிகளில் வருமான வரித் துறையினர் சோதனையிட்டபோது,அவர்கள் எடுத்துச் சென்றது 10 லட்சம் ரூபாய் மட்டுமே. முதல்வரின் கூற்றுப்படி 13 கோடி ரூபாய் அல்ல. ரூ.13 கோடி எடுத்த இடமும் எங்களுக்கு உரியது அல்ல. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் எடப்பாடி கூறுகிறார். ஆனால் சோதனையில் எங்கும் தங்கம் கைப்பற்றப்படவில்லை.இதுதான் உண்மை. வருமான வரித் துறை கொடுத்துள்ள பஞ்சன்நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்” என்று விளக்கியுள்ள துரைமுருகன், எல்லாவற்றையும் அறிந்துகொள்ளக் கூடிய இடத்தில் அமர்ந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதுவும் தெரியாத சராசரி மனிதரைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும் என்று விமர்சித்துள்ளார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019