மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

ஃபோனி கோரத்தாண்டவம்: மூவர் உயிரிழப்பு!

ஃபோனி கோரத்தாண்டவம்: மூவர் உயிரிழப்பு!

அதிதீவிர புயலான ஃபோனியின் கோர தாண்டவத்தால் ஒடிசாவில் மூவர் உயிரிழந்துள்ளனர். அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஃபோனி புயல் அதிதீவிர புயலாக உருவாகி இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் கரையைக் கடந்தது. காலை 8 மணிக்குப் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் 11 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது.

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபோனி புயலால், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பூரியில் இளைஞர் ஒருவர் மீது மரம் விழுந்ததில், உடல் நசுங்கி உயிரிழந்தார். பெண் ஒருவர் தண்ணீர் எடுக்க வெளியே சென்ற போது, கான்கிரிட் கட்டிடத்தில் இருந்த கல் மேலே விழுந்ததால் உயிரிழந்தார். மற்றொரு பெண் முகாம்களில் தங்கியிருந்தபோது, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் கரையைக் கடந்த பூரி மாவட்டம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மாநிலம் முழுவதிலுமிருந்து மொத்தம் 11 லட்ச மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பூரியிலிருந்து மட்டும் 1.3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இங்குள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி என தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,மாநிலத்தில் மே 15 வரை மருத்துவர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

காற்றின் வேகத்தால் கிராமப் பகுதிகளில் குடிசை வீடுகளின் கூரைகள் பறந்துள்ளன. பல இடங்களில் செல்போன் கோபுரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. செல்போன் சேவைகளும் பாதிக்கப்பட்டு ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் மேற்கூரை பறக்கும் வீடியோ வெளியாகி புயலின் தாக்கத்தை உணர்த்துகிறது. அதுபோன்று புயல் தொடர்பான வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.

இதற்கிடையே புயல் பாதித்த பகுதிகளுக்கு முதற்கட்ட நிவாரண நிதியாக ரூ.1000 கோடியை விடுவித்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், புயல் காரணமாக மேற்கு வங்கம் , ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநில அரசுகளுடன், மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவைப் போன்று ஃபோனி புயலால் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், விழிநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 20,000த்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காகத் தேர்தல் விதிகளைத் தளர்த்தியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஃபோனி புயல் மேற்கு வங்கம் நோக்கி நகர்வதாகவும் ,கொல்கத்தாவின் தென்மேற்கில் இருந்து 370 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் இன்று இரவு மேற்கு வங்கத்தைத் தாக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கொல்கத்தா விமான நிலையம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு ஃபோனி பெயர்

ஒடிசா, மன்சேஸ்வர் பகுதியில் வசிக்கும் ரயில்வே ஊழியர் ஒருவரின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், புவனேஷ்வரில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புயல் கடுமையாகத் தாக்கிய நேரமான காலை 11.03 மணிக்கு அவருக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், குழந்தைக்குப் பெற்றோர்கள் ஃபோனி என்றே பெயரிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019