மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

அருளை பொய் வழக்கில் சிறைப்படுத்துவதா? சீமான் கண்டனம்!

அருளை பொய் வழக்கில் சிறைப்படுத்துவதா? சீமான் கண்டனம்!

பெரம்பலூர் பாலியல் விவகாரத்தைக் வெளிக்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருளை கைது செய்துள்ளதற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் பத்துக்கும் மேற்பட்ட இளம்பெண்களை நட்சத்திர விடுதிகளில் வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்து அவர்களை மிரட்டி பணம், நகைகள் பறித்ததாக நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான அருள் சில ஆதாரங்களை வெளியிட்டார். ஆளுங்கட்சியினருக்கும் இவ்விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தி அருள் விளக்கம் அளித்தார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களின் பரபரப்பு அடங்குவதற்குள் பெரம்பலூரில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதாக ஆடியோ ஆதாரங்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏப்ரல் 30ஆம் தேதி இரவு திடீரென பெரம்பலூர் குன்னம் பகுதியில் காரில் வந்த போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். யார் அளித்த புகாரின் அடிப்படையில் அருள் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் இதுவரையில் உறுதியாக வெளியாகவில்லை. நாம் தமிழர் கட்சியிலேயே அவருக்கு இவ்விவகாரத்தில் உரிய ஆதரவு இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. ஆனால் இது பொதுப்பிரச்சனை என்பதால் அருளே தானாக முன்வந்து இவ்விவகாரத்தை கையிலெடுத்து செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அருள் மீதான கைது நடவடிக்கையையும், பெரம்பலூர் பாலியல் கொடுமை சம்பவத்தையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் மற்றும் வழக்கறிஞர் அருள் மீது பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. பொள்ளாச்சி சம்பவத்துக்கே இன்னும் நீதி பெறாத நிலையில், பெரம்பலூரிலும் அதே கொடுமை நிகழ்த்தப்பட்டிருப்பது மனவலியைத் தருகிறது” என்று கூறியுள்ளார்.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்ததால் புகார்தாரர் மீதே காவல்துறை பொய்வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவது வேறு எங்கும் நடந்திராதப் பெருங்கொடுமை என்று கூறியுள்ள சீமான், ” இதுபோன்ற நிலையிருந்தால் மக்களுக்கு அரசாங்கம் மீதும், காவல்துறையின் மீதும் எப்படி நம்பிக்கையிருக்கும்? சட்டப் போராட்டத்தின் மூலம் அநீதிக்கான நீதியினைப் பெற முடியும்? என எப்படி நம்புவார்கள் என்கிற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலிருக்கிறது?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை காப்பதற்காக அநீதிக்கு துணைபோகும் தமிழக அரசின் இச்செயல்கள் ஜனநாயகப் படுகொலை என்று குற்றம்சாட்டியுள்ள சீமான், “ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்த மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இது. இந்த கொடுமைக்கு எதிராக அனைத்து ஜனநாயக ஆற்றல்களும், முற்போக்கு சக்திகளும் அணிதிரள வேண்டியது தலையாய கடமையாகும். பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கு மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணையைப் பரிந்துரைக்க வேண்டுமெனவும், கைதுசெய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழக அரசு இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019