மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

மைனஸ் மதிப்பெண்கள் முறையை நீக்க வலியுறுத்தல்!

மைனஸ் மதிப்பெண்கள் முறையை நீக்க வலியுறுத்தல்!

மாவட்ட நீதிபதிகள் பணிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மே 3) வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்றுக் கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வில் சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3 ஆயிரத்து 562 பேர் பங்கேற்றனர். ஆனால் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதியவர்களில் ஒருவர் கூட தேர்ச்சியடையவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இதற்கு, எந்த ஆண்டும் இல்லாத வகையில் கேள்விகள் மிகவும் கடுமையாக இருந்ததாலும், தவறான விடைக்கு மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதாலும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்பட்டது.

இந்தநிலையில் மாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாவட்ட நீதிபதிகளுக்கான தேர்வில், சரியான விடைகளுக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்பட்ட நிலையில், தவறான விடைகளுக்கு அரை மதிப்பெண் வீதம் கழிக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித் தேர்வில் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பதால், அதுபற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிட்டத்தட்ட அனைவருமே அதிக அளவில் மைனஸ் மதிப்பெண்களைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, மாவட்ட நீதிபதிகள் பதவிக்கான போட்டித்தேர்வில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் பதிலளிக்க முடியாத வகையில் மிகக் கடினமாகவும், சுற்றி வளைத்தும் தயாரிக்கப்பட்டிருந்தன. அதனால் தான் இந்தத் தேர்வில் கலந்து கொண்ட மூத்த வழக்கறிஞர்கள், அரசு உதவி வழக்கறிஞர்கள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோரால் கூட தேர்ச்சி பெற முடியாமல் போனது.

அதேபோல், போட்டித்தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்குவதும் தவறு ஆகும். இதைச் சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த நீதிபதி மகாதேவன்,’மைனஸ் மதிப்பெண் வழங்கும் முறை ஒரு முறையற்ற செயலாகும். நியாயம், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பு தத்துவங்களுக்கு இது எதிரானதாகும். போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து வருபவர்கள் ஆவர். பணக்காரக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களின் திறமைகளையும், தேர்வு நுட்பத்தையும் அதிகரித்து கொள்ளும் சூழலில், அதையே ஏழை மாணவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே, போட்டித் தேர்வுகளில் மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படக்கூடாது’ என விரிவாகக் கூறியிருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019