மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

ஒரே ஆண்டுக்குள் ரூ.72,000: ராகுல் உறுதி!

ஒரே ஆண்டுக்குள் ரூ.72,000: ராகுல் உறுதி!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய குடும்பங்களுக்கு ஒரே ஆண்டுக்குள் 5 கோடி குடும்பங்களுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டத்தைக் கொண்டு சேர்ப்போம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலின் நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில், மே 6ஆம் தேதி பிகார், ஜார்க்கண்ட், ஜம்மு - காஷ்மீர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையொட்டி அம்மாநிலங்களில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதையொட்டி நேற்று (மே 2) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சிம்தேகா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “2 கோடி வேலைகளை ஆண்டொன்றுக்கு அளிப்பதாகக் கூறிய நரேந்திர மோடி அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வோர் இந்தியர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறியதையும் நிறைவேற்றவில்லை. 15 முதல் 20 தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் ஐந்து ஆண்டுகளாக அவர் வேலைபார்த்தார். விவசாயிகளின் கடன்களை இந்த அரசு தள்ளுபடி செய்யவில்லை” என்று குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் திட்டம் குறித்து அவர் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் (NYAY scheme) 5 கோடி குடும்பங்களுக்கு ஒரே ஆண்டுக்குள் ரூ.72,000 வழங்கப்பட்டுவிடும். 12,000 ரூபாய்க்குக் கீழ் மாதாந்திர வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு இந்தத் தொகை கிடைக்கும்” என்றார். ஆனால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை என்று பாஜக கடுமையாகச் சாடி வருகிறது.

”பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தபோதும் பாஜக இப்படித்தான் பேசியது. உடனடியாக ஆட்சிக்கு வந்த மறுநாளே இத்திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று நாங்கள் சொல்லவில்லை. முதலில் சோதனைக்காலம் வைத்து செயல்படுத்துவோம். பிறகு படிப்படியாக 5 கோடி மக்களுக்கும் இத்திட்டத்தைக் கொண்டு சேர்ப்போம்” என்று முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறிவரும் நிலையில், ஒரே ஆண்டுக்குள் 5 கோடி குடும்பங்களுக்கும் இந்தத் திட்டத்தைக் கொண்டு சேர்ப்போம் என்று ராகுல் காந்தி தற்போது கூறியிருக்கிறார்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019