மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

தமிழக பாஜக அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்?

தமிழக பாஜக அடுத்த தலைவர் நயினார் நாகேந்திரன்?

மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகளை அனைவரும் எதிர்நோக்கிக் காத்திருக்கையில் தமிழக பாஜக இன்னும் ஒரு விஷயத்துக்காகவும் காத்திருக்கிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் அடுத்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜகவுக்குப் புதிய தலைவர் நியமிக்கப்படக் கூடும் என்பதுதான் பாஜக பிரமுகர்களுக்குள் தற்போது நடக்கும் சூடான பேச்சு.

2014ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சரான பின் அந்த இடத்துக்கு தமிழிசை நியமிக்கப்பட்டார். அந்தப் பதவி காலத்தின் சொச்சத்தை நிறைவு செய்த தமிழிசை, இரண்டாவது முறையாக தமிழகத் தலைவராக நியமிக்கப்பட்டார். விரைவில் தமிழிசையின் பதவிக் காலம் முடிவடைகிற நிலையில் அடுத்த தலைவருக்கான தேடலில் ஈடுபட்டிருக்கிறது பாஜக மேலிடம்.

“தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள். மீண்டும் பெண்களுக்கு வாய்ப்பா என்ற கேள்வி எழும் நிலையில் வானதிக்கு வாய்ப்பில்லை. கருப்பு முருகானந்தம் அதிரடியான நபர். பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர். அவரை தலைவர் ஆக்குவதற்கும் பொன்னாரை தலைவர் ஆக்குவதற்கும் வேறுபாடில்லை என்று கருதுகிறது பாஜக தலைமை.

ஆக, அடுத்த தேடலில் முக்கியமான கவனம் பெறுபவர் நயினார் நாகேந்திரன். அதிமுகவிலிருந்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் பாஜகவுக்கு வந்தார் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன். நடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார்.

இதுவரை தமிழக பாஜக தலைமையில் நாடார் சமூகத்தினர் முக்கியத்துவம் பெற்று வந்த நிலையில், அடுத்து முக்குலத்தோர் சமூகத்தினரை நோக்கி கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது பாஜக. அந்தக் கோணத்திலும் அதிமுகவில் நீண்ட அரசியல் கள அனுபவம் உள்ளவர், பண பலம் உள்ளவர் என்ற அடிப்படையிலும் நயினார் நாகேந்திரன் தலைவர் பதவிக்கான ரேஸில் இடம் பிடிக்கிறார். அதேநேரம் மாநிலச் செயலாளர் மதுரை சீனிவாசன் பெயரும் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் இருக்கிறது.

சீனிவாசன் பாஜகவில் நீண்ட காலம் இருப்பவர். நயினார் நாகேந்திரன் இப்போதுதான் வந்தவர். அவருக்கு பாஜக தலைவர் பதவி கொடுக்கலாமா என்றும் சில குரல்கள் எழுகின்றன.

ஆனால், ஆந்திராவைப் போலவே தமிழகத்திலும் பின்பற்றுவார்கள் என்றே தெரிகிறது. ஆந்திராவில் பழுத்த காங்கிரஸ்காரரும், கிரண்குமார் ரெட்டி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான கண்ணா லட்சுமி நாராயணா 2014இல் பாஜகவில் சேர்ந்தார். இதையடுத்து 2018இல் அவர் ஆந்திர பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

அதேபோல தமிழகத்தில் அதிமுகவிலிருந்துவந்த நயினாரை பாஜக தலைவர் ஆக்கினாலும் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் பாஜக டாப் சோர்ஸுகள்.

அதேநேரம் இன்னொரு குரலும் கமலாலயத்தில் எதிரொலிக்கிறது. “ஒருவேளை ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றிபெற்று மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையுமானால் நயினாருக்கு மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பிருக்கிறது. அதைத் தடுக்கவே சிலர் இப்போதே நயினார் பாஜக தலைவர் என்ற விஷயத்தைப் பேச வைக்கிறார்கள்” என்பதுதான் அந்தக் குரல்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழக பாஜக தலைவர் மாற்றம் என்பது உறுதி. புதிய தலைவர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

- ஆரா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019