மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

ஆட்டோ சங்கர்: வயதுக்கு வரும் தமிழ் வெப் சீரிஸ்

ஆட்டோ சங்கர்: வயதுக்கு வரும் தமிழ் வெப் சீரிஸ்

கேபிள் சங்கர்

இந்தியாவில் அமேசான், நெட்ஃப்ளிக்ஸ் ஆகியவை வெப் சீரிஸ் களத்தில் காலடி எடுத்த வைத்த பிறகு பல பெரும் மீடியா முதலைகள் போட்டிக்குக் களமிறங்கியிருக்கின்றன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஓடீடீ பிளாட்பாரங்கள் இயங்கிக்கொண்டிருக்க, பெரும் நிறுவனங்கள் நெட்ஃப்ளிக்ஸிலிருந்து வெளியேறி (உதாரணமாக, இந்தியாவில் ஜியோ, வெளிநாடுகளில் டிஸ்னி) தங்களுக்கான தனி பிளாட்பாரம் தொடங்கும் அளவுக்கு டிமாண்ட் ஏறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் இந்த சேனல்களுக்கான கண்டெண்ட் கிராக்கியும் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

முதல் எபிசோடிலேயே உட்கார வைக்கவில்லையென்றால் அதன் பிறகு இதன் பார்வையாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் அத்தனை வெப் சீரிஸ்கள் வரிசைகட்டி நின்றுகொண்டிருக்கின்றன. என்னதான் கண்டெண்டுகள் வரிசை கட்டினாலும் இந்தியில் வருவதுபோல தரமான ஒரு வெப் சீரிஸாவது தமிழில் வந்திருக்கிறதா என்றால் ரொம்பவும் யோசித்துத்தான் விரலை மடித்து எண்ண வேண்டும். இப்படியான நேரத்தில் புதியதாய் வெளிவந்திருக்கும் ஆட்டோ சங்கர் மூலம் தமிழ் வெப் சீரிஸ் உலகம் வயதுக்கு வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஆட்டோ சங்கர் கொலைகாரன், சாராயம் விற்றவன், ப்ராத்தல் எனச் சட்ட விரோதமான தொழில் அனைத்தையும் செய்தவன். ஒன்பது கொலைகள் செய்ததற்காகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவன். சிறையிலிருந்து தப்பியவன். பிறகு பிடிக்கப்பட்டு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டவன். ஒரு காலத்தில் தமிழக பத்திரிகைகளின் வைரல் இவன்தான். இவனைப் பற்றிய வெப் சீரிஸ் எனும்போது, இச்செய்திகளுடன் வளர்ந்தவர்களுக்கு நாஸ்டால்ஜிக்காகவும், கேள்வியேபடாத இந்தத் தலைமுறையினருக்கு அப்படியாப்பட்டவனா என்கிற சுவாரஸ்யமும் ஏற்படாமல் இருக்காது. அதைத் தக்கவைத்திருக்கிறார்களா என்றால் நிச்சயம் ஆம் என்பேன்.

ஆரம்பக் காட்சியில் தூக்குக் கயிற்றோடு உள்ளே நுழைகிறவனை ஃபாலோ செய்து டம்மி பாடியைத் தூக்கிலிட லீவரைத் தூக்கும்போது, ஃப்ளாஷ்பேக் மோடில் ஆட்டோ சங்கர் தன் ஆட்டோவின் ஸ்டார்டிங் லீவரைத் தூக்குகிறான். அங்கிருந்து அவனது கதை ஆரம்பிக்கிறது. முதலில் கொஞ்சம் நான் லீனியராய் ஆரம்பித்தாலும், மெல்ல திரைக்கதை தனக்கான காலக் கிரமத்துக்குள் வந்துவிடுகிறது.

குறிப்பிட வேண்டிய முக்கிய விஷயம் மணிஜியின் எழுத்து. வெப் சீரிஸ்களைப் பொறுத்தவரை எழுத்தாளர்கள்தான் கிங். அதை மணிஜி பொட்டில் அடித்தாற்போல நிரூபித்திருக்கிறார். சின்னச் சின்ன வசனங்கள். ஆனால் படு கூர்மை.

ஜெயிலர்: குளிக்க சுடு தண்ணி வச்சுத்தர சொல்லவா சங்கரு?

சங்கர்: வேணாம் சார்... எப்படியும் இன்னும் கொஞ்சம் நேரம்... இந்த உடம்பே ஜில்லுனு ஆவப்போகுது. இப்ப இன்னும் கொஞ்சம் சூடு இருக்கு உடம்புல தொட்டுப்பாருங்க... (பீடியைப் பற்ற வைத்தபடி) முன்னல்லாம் உடம்புல சூடு ரொம்ப ஜாஸ்தி. அதான் ஆட்டமா ஆடியாச்சு…

“அவளே ஒரு தேவடியா. அவளுக்காக ஏண்டா இப்படி அடி வாங்கி சாகுற?”

“அவ குழந்தை மாதிரிண்ணே. அழகா இருக்குற குழந்தைய நாலு பேர் கொஞ்சக் கூப்டா போகத்தானே செய்யும் அது போலத்தான் என் ஆளு.”

“மனசை ஏமாத்திடலாம். உடம்ப ஏமாத்த முடியுமா?”

“வாழ்க்கை வெளிய எக்ஸாம் எழுத வெச்சிட்டு நாலு சுவத்துக்குள்ள இப்ப பாடம் எடுக்குது.”

என சீரிஸ் பூராவும் நச் நச்செனச் சொல்லி அடித்திருக்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும், கூர்மையான வசனங்களை, படு ‘ரா’வான சம்பவங்களை, அதே அளவு ‘ரா’வான விஷுவலுடன் அளித்திருக்கிறார்கள் மனோஜ் பரஹம்சா, மணிகண்டன், வெங்கடேஷ் ஆகியோர்.

ஆட்டோ சங்கராக நடித்திருக்கும் சரத், சந்திரிகாவாக வரும் சயா, அமைச்சராய் வரும் பவன், சுடலை என நடிகர்கள் கச்சிதம். சரத்தின் சின்னச் சின்ன ரியாக்‌ஷன்கள் ஆரம்பத்தில் ஒட்டாமல் இருந்தாலும் போகப்போக ஆட்டோ சங்கராகவே உருமாறிவிடுகிறார். அரோல் கரோலியின் பின்னணியிசை ஒரு சில எபிசோடுகளில் அதகளம். ஒரு சிலதில் மெத்தனம்.

பீரியட் எனும்போது ஆர்ட் டிபார்ட்மென்ட்டில் இருந்து அனைத்து டிபார்மென்டுகளிலும் பெரும் பிரயத்தனம் வேண்டும். ஓரிரு குறைகள் பீரியட் விஷயங்களில் இருந்தாலும் மொத்தமாகப் பார்க்கும்போது மெச்சத்தகுந்த வேலை.

இம்மாதிரியான கதைகளை எடுக்க நல்ல மெச்சூரிட்டி தேவை. ஆட்டோ சங்கரின் கதை தொடராக நக்கீரனில் வந்தபோது பல பெரும் தலைகளின் பெயர்கள் அடிபட்டன. அதனால் தொடரைத் தடை செய்தார்கள். இவ்வளவு சர்ச்சைக்குரிய மனிதனைப் பற்றி, பலருக்கும் தெரிந்த கதையைக் கற்பனை கலந்து கொடுக்க மெச்சூரிட்டி வேண்டும். அதைத் திறமையான டெக்னீஷயன்களோடு, சிறப்பாய்க் கையாண்டு குறிப்பிடத்தக்க சீரிஸாய் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரங்கா.

சீரிஸில் நிறைய கெட்ட வார்த்தைகள் வருகின்றன. அது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். என்னைப் பொறுத்தவரை, ஆட்டோ சங்கர் என்னும் மனிதனையும் அவன் வாழ்ந்த சூழலையும் நடந்த சம்பவங்களையும் நிஜ மனிதர்களையும் சரியாகப் புரிந்துகொள்ள அந்த வசனங்கள் தேவை என்றே தோன்றுகிறது.

சம்பவங்களின் கோர்வையாய் இருக்கும் தொடரில் இன்னும் கொஞ்சம் உணர்வு ரீதியான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். கேரக்டர்களை இன்னும் ஆழமாகக் கையாண்டு இருந்திருக்கலாம். ஆங்காங்கே சில காட்சிகள் இட நிரப்பிகளாய் இருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

சங்கரின் நிஜ வாழ்க்கையுடன் இந்த சீரிஸை ஒப்பிட்டுப் பார்த்தால் பல கேள்விகள் எழத்தான் செய்யும். ஆனால், வாழ்க்கை வரலாறு என்று இல்லாமல் புனைகதையின் வடிவில் இதைச் சொல்கிறோம் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார்கள்.

இப்படிச் சில உறுத்தல்கள் இருப்பினும், ஏற்கனவே சொன்னதுபோல தமிழ் வெப் சீரிஸ் இப்போதுதான் வயதுக்கு வந்திருக்கிறது. இனி தமிழ் வெப் சீரிஸ்களை ஆட்டோ சங்கருக்கு முன்/ பின் என்றுதான் பார்க்க வேண்டும்.

“பய”பிக்குகளான பயோபிக்குகள் - கேபிள் சங்கர்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019