மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 3 மே 2019

மருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்!

மருத்துவச் சுற்றுலாவின் மற்றொரு முகம்!

நயன்தாரா நாராயணன்

கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று நைஜீரியா நாட்டைச் சேர்ந்த தோபி அஜிசெக்பெடெ என்பவர் தனது அன்னையின் மரணம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது அன்னை பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவாலும், மருத்துவமனையின் தவறான நடவடிக்கைகளாலும் தனது அன்னை இறந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். முடிந்த அளவுக்கு சிகிச்சை அளித்தும், நீண்ட காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், நோய் காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மணிபால் மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில், வெளிநாட்டு நோயாளிகளுக்கு இந்தியாவில் போதிய ஆதரவு வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. உலகளவில் மருத்துவச் சுற்றுலாவுக்காக அதிகம் விரும்பப்படும் நாடாக இந்தியா இருந்தாலும், இங்கு தனியார் மருத்துவத் துறை இன்னும் ஒழுங்குபடுத்தப்படவில்லை.

அஜிசெக்பெடெவின் அன்னைக்கு 58 வயதாகிறது. அவர் degenerative lumbar canal stenosis நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தப் பிரச்சினை ஏற்படும்போது முதுகெலும்பின் கால்வாய் சுருங்கி முதுகெலும்பு நரம்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும். இதனால் முதுகிலும், கால்களிலும் அதீத வலி ஏற்பட்டு நடப்பது மிகவும் கடினமாகும். பொதுவாக இந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முதுகெலும்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

அஜிசெக்பெடெவின் அன்னைக்கு நைஜீரியாவின் லாகோஸ் நகரிலுள்ள வேதிக் லைஃப்கேர் மருத்துவமனையில் மணிபால் ஹெல்த் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்படி பரிந்துரைக்கப்பட்டது. சிகிச்சைக்கு சுமார் ரூ.7 லட்சம் செலவாகும் என்று அஜிசெக்பெடெவிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் ரூ.14 லட்சம் செலவாகும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்குப் பின் தனது அன்னைக்கு நிறைய தொற்றுகளும், சிக்கல்களும் ஏற்பட்டதாக அஜிசெக்பெடெ தெரிவித்துள்ளார். பிறகு தொடர்ச்சியாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை அவரது அன்னையை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தொற்றுகளால் பல உறுப்புகள் செயலிழந்து இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்.

தனது அன்னைக்குச் சிக்கல்கள் அதிகரித்தபோது அஜிசெக்பெடெ வேதிக் லைஃப்கேர் மருத்துவமனையுடன் தொடர்ந்து ஆதரவு கோரியும் அவர்களிடத்திலிருந்து எவ்வித பதிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உலகளவில் மருத்துவச் சுற்றுலாவில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. அடுத்தபடியாக தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் உள்ளன. மேம்பட்ட மருத்துவ வசதிகள், தேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலம் பேசக்கூடிய மருத்துவப் பணியாளர்கள், மேற்கு நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த செலவுகள் போன்ற காரணங்களால் மருத்துவச் சுற்றுலாவுக்கு இந்தியா அதிகம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மருத்துவச் சுற்றுலாவால் இந்தியாவுக்குக் கணிசமான வருவாயும், அந்நிய செலாவணியும் கிடைப்பதாக நிதி ஆயோக் மற்றும் தொழிற்துறை, வர்த்தக அமைப்புகள் கூறுகின்றன.

2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, மருத்துவ, ஆரோக்கிய தேவைகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளிலிருந்து ஐந்து லட்சம் பேர் இந்தியாவுக்கு வருவதாகத் தெரிகிறது. இவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையே இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. மருத்துவச் சுற்றுலாவால் 25 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியாகக் கிடைக்கிறது.

இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது. மருத்துவமனைகளுக்குச் சந்தைப்படுத்துதல் உதவிகளை வழங்குதல், மருத்துவ விசாக்களை அனுமதிப்பது, முக்கிய விமான நிலையங்களில் மருத்துவச் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவது, நாட்டில் மருத்துவச் சுற்றுலா பற்றிய தகவல்களைக் காட்டுவதற்குத் தனி இணையதளம், தேசிய மருத்துவ மற்றும் ஆரோக்கிய வாரியம் அமைத்தது என மத்திய அரசின் முயற்சிகள் ஏராளம்.

ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மருத்துவத் துறைக்குத்தான் பெரும்பாலான வெளிநாட்டு நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தனியார் மருத்துவத் துறை இன்றளவிலும் ஒழுங்குபடுத்தப்படாமலே உள்ளது.

அஜிசெக்பெடெவுக்கு நடந்த கொடுமை ஒன்றும் புதிதல்ல. மருத்துவ சிகிச்சைகளில் முறைகேடு, கவனக்குறைவு, சிக்கல்கள் என எந்தச் சீர்குலைவுகளும் இல்லாவிட்டாலும் மருத்துவமனைகள் கட்டணத்தை அளவுக்கு மீறி வசூலிப்பது வழக்கம்தான். இதுகுறித்து மும்பையைச் சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர் சஞ்சய் நக்ரல் பேசுகையில், “உடல்நிலை சரியில்லாமல் உள்ளூர் நோயாளிகள் வரும்போதுகூட இதபோல பலமுறை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். மருத்துவச் சுற்றுலாவைப் பொறுத்தவரையில், வெளிநாடுகளிலிருந்து வரும் நோயாளிகள் பணக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனக் கருதுகிறேன். பெரும்பாலான மருத்துவமனைகள் உள்ளூர் நோயாளிகளைவிட வெளிநாட்டவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றன” என்று கூறினார்.

சில சமயங்களில் கட்டண உயர்வைத் தடுக்க முடியாது. ஏதேனும் நோயாளிக்குக் கட்டண நிவாரணம் அளிக்க வேண்டும் என்றால் அது மருத்துவர் அல்லது மருத்துவமனையின் உதவி மனப்பான்மையைப் பொறுத்தே உள்ளது. “வெளிநாட்டு நோயாளிகளைப் பொறுத்தவரையில் அவர்களைத் திருப்பி அனுப்ப முடியாது என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது. உள்ளூர் நோயாளிகளுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும்போது சிறிய மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுவோம் அல்லது மருத்துவச் செலவுகளுக்காக உதவ தொண்டு நிறுவனங்களின் ஆதரவை நாட உதவியளிப்போம். எல்லா போராட்டங்களையும் மேற்கொள்ள முயல்வோம். ஆனால், இவையெல்லாம் வெளிநாட்டு நோயாளிகளுக்கு சாத்தியமல்ல” என்கிறார் சஞ்சய் நக்ரல்.

சென்னை செயின்ட் இசபெல் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ஜார்ஜ் தாமஸ் பேசுகையில், “ஏற்கெனவே இருக்கும் ஒழுங்குமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே முக்கிய பிரச்சினை. கட்டணம் குறித்து அரசின் ஒழுங்குமுறைகள் இல்லாவிட்டால், மருத்துவமனையும், நோயாளியும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர். கட்டணம் எவ்வளவும் என்று மருத்துவமனை தெரிவித்தால், அதை ஏற்றுக்கொள்வதும், தவிர்ப்பதும், சிகிச்சையைத் தவிர்ப்பதும் நோயாளிகளின் விருப்பம்” என்று கூறினார்.

நோயாளிகள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கவும், இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தவும் மத்திய அரசு விரும்பினால், ஏற்கெனவே இருக்கும் ஒழுங்குமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். “இந்தியாவில் மருத்துவமனைகளில் தொற்று விகிதங்களை யாருமே வெளியிடுவதில்லை. ஸ்வீடன் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்படுகின்றன. நம் நாட்டில் நமக்குப் பல தகவல்கள் தெரியாது. ஏனெனில் அவை சேகரிக்கப்படவில்லை. அத்தகைய தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என இந்தியாவில் ஒழுங்குமுறைகள் இல்லை. இதனால், நோயாளிகள் தெரிந்துகொள்ள போதிய தகவல்கள் இல்லாமல் போய்விட்டது” என்கிறார் ஜார்ஜ் தாமஸ்.

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 3 மே 2019