மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

தினகரனின் குக்கர் தேர்தல் ஆணையத்தின் கையில்!

தினகரனின் குக்கர் தேர்தல் ஆணையத்தின் கையில்!

வழக்கின் வரலாறு

டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிடலாமா முடியாதா என்பதைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தினகரன் கட்சி பதிவு செய்யப்படாத நிலையில் அந்தக் கட்சிக்குப் பொது சின்னம் வழங்கமுடியாது என்று வழக்கின் இடையே தெரிவித்திருந்த தேர்தல் ஆணையம், தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்குமா என்பது இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பைப் புரிந்துகொள்ள இந்த வழக்கின் ஃபிளாஷ் பேக்கை கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மின்னம்பலம் வாசகர்களுக்கு இந்த வழக்கு பற்றிய விவரங்களை வழக்கு விசாரணைகள், இடைக்காலத் தீர்ப்புகளின் போது கொடுத்து வந்திருக்கிறோம். அவற்றை இலேசாகத் திரும்பிப் பார்ப்போம்.

தொப்பியைப் பறித்து குக்கர்

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னம் கடந்த 2017 ஏப்ரல் மாதம் முடக்கப்பட்ட நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் தொப்பி சின்னத்திலும், இரட்டை மின் விளக்கு சின்னத்தில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனும் போட்டியிட்டார்கள். ஆனால் பணப்பட்டுவாடா கடுமையாக இருப்பதாகச் சொல்லி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். இது நடந்த சில மாதங்களில் தினகரன் அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

2017 ஆகஸ்டு மாதம் எடப்பாடி பழனிசாமி அணியோடு பன்னீர் அணி இணைய, நான்காவதுமாதம் 2017 டிசம்பர் மாதம் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்தது தேர்தல் ஆணையம். இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்த கையோடு உடனடியாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தவும் அறிவிக்கை வெளியிட்டது. ஆக இரட்டை இலையைக் கொடுத்ததும் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதும் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சத்தைக் காட்டுவதாக அப்போது அரசியல் வட்டாரங்களில் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு வலுத்தது.

இந்த நிலையில் தினகரன் சுயேச்சையாக ஆர்.கே.நகர் வேட்பாளராகக் களமிறங்கினார். அவர் தான் முன்பு போட்டியிட்ட தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்டார். ஆனால் அதுவும் தினகரனுக்கு மறுக்கப்பட்டு, திடீரென பிரஷர் குக்கர் சின்னத்தைக் கொடுத்தது தேர்தல் ஆணையம்.“தொப்பி சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. பிரஷர் குக்கர் சின்னத்தை வைத்து எதிரிகள், துரோகிகளின் பிரஷரை ஏற்றுவேன்” என்று அறிவித்து ஒருவார கால அவகாசத்தில் அளிக்கப்பட்ட குக்கர் சின்னத்தில் தேர்தலை சந்தித்தார் தினகரன். அதில் 41 ஆயிரம்வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

பிரதான வழக்கும் துணை வழக்கும்!

இதற்கிடையில் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு அளிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் தினகரன்.

‘’ஆள் மாறாட்டம், போலி பிரமாணப் பத்திரங்களை பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டது தவறு’’ என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வர இருப்பதால் தன் அணிக்கு ஒரு பெயரையும், தான் ஏற்கனவே ஆர்.கே.நகரில் நின்ற குக்கர் சின்னத்தையும் வழங்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு இடைக்கால மனு ஒன்றை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் தினகரன்.

மெயின் கேஸ் எனப்படும் பிரதான வழக்கு இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு அளித்ததை எதிர்த்து தொடுத்த வழக்கு. அதன் துணை வழக்காக இடைக்கால சின்னம் கேட்டார் தினகரன். ஆனால்; இதை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் ஆகியோர் எதிர்த்தனர். பிரதான வழக்கு இன்னும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான், தங்களுக்கு பொது பெயர், பொது சின்னம் குக்கர் கேட்டு தினகரன் தொடர்ந்த வழக்கில் 2018 மார்ச் 9 ஆம் தேதி தீர்ப்பளித்தார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி.

டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பு

“டிடிவி தினகரனின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அவரது அணிக்கு பொதுவான ஓர் பெயரும், பொதுச் சின்னமும் குறிப்பாக பிரஷர் குக்கர் சின்னமும் வழங்கிட வேண்டும்’’ என்று தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்த நீதிபதி, “டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான ஒரு பெயரும், பொதுவான சின்னமும் கொடுக்கக் கூடாது என்று எடப்பாடி, பன்னீர் அணியினர் ஏன் கூறுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு ஓர் அரசியல் கட்சி, சின்னம் எல்லாம் உள்ளது. இந்நிலையில் அவர்கள் ஏன் தினகரனுக்கு பொது சின்னம் வழங்கப்படக் கூடாது என்று சொல்கிறார்கள். அரசியல் சமநிலையின்படி இது சரியானதல்ல’’ என்று குறிப்பிட்டார்.

“.1997-ல் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு தேர்தல் ஆணையம் எப்படி பொது சின்னம் ஒதுக்கியது? தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக போன்ற கட்சிகளுக்கு பொது சின்னம் ஒதுக்கியது நீதிமன்றம். எனவே தினகரனின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைக் கருதி அவர் கேட்ட மூன்று பெயர்களில் ஒரு பெயரையும், சின்னத்தையும் குறிப்பாக குக்கர் சின்னத்தையும் மூன்று வாரங்களில் அவருக்கு ஒதுக்கித் தர வேண்டும்’’ என்று தன் தீர்ப்பில் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருக்கிறார் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி. இதையடுத்துதான் 2018 மார்ச் 16 ஆம் தேதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் தினகரன். இந்தத் தீர்ப்பு இனி வரும் சட்டவெற்றியாக இருக்கும் என்று அப்போது நம்மிடம் குறிப்பிட்டார் தினகரனின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன்.

உச்ச நீதிமன்றத்தில் குக்கர்

தினகரன் அணிக்கு கிடைத்த முதல் சட்ட வெற்றியாக வர்ணிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றனர் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும்.

கட்சி தொடங்குவதற்கு முன்னரே தினகரன் தரப்புக்கு சின்னம் ஒதுக்க உத்தரவிட்டது தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிரானது என்று அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கில் மார்ச் 28 ஆம் தேதி குக்கர் சின்னம் ஒதுக்கி டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம். மேலும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இரட்டை இலை சின்னம் தொடர்பான பிரதான வழக்கை 3 வாரத்துக்குள் தில்லி உயர் நீதிமன்றம் விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும், தினகரனின் வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

.இந்த நிலையில்தான் திருவாரூர் இடைத்தேர்தலை ஒட்டி தினகரன் தனது குக்கர் சின்னத்துக்கு கொடுக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கி மீண்டும் வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தை நாடினார்.

தேர்தல் ஆணையத்தின் ‘முடிவு’!

இவ்வழக்கு கடந்த ஜனவரி 24ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர், “தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்படி பதிவு செய்யப்படாத அல்லது அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிக்கு நிரந்தரமாக ஒரு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்குவது கிடையாது. தினகரனின் அமமுக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இல்லை என்பதால், குக்கர் சின்னத்தை அக்கட்சிக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. பொதுப் பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது” என்று பதிலளித்தார். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்கக் கூடாது என்று நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து வாதாடி வருகிறார்கள்.

வழக்கின் போது தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளித்த தினகரன் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “எங்களைப் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே கருத வேண்டும். இரட்டை இலை சின்ன வழக்கை விசாரித்த தேர்தல் ஆணையம், சின்னத்தை ஒரு அணிக்கு ஒதுக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து நாங்கள் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட சூழலில் எங்களையும் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவே கருத வேண்டும். 2017 மார்ச்சில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியபோது அதிமுகவின் இரு அணிகளுக்கும் இரட்டை மின் விளக்கு, தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் பதிவு பெற்றவையா? இல்லையே? இரட்டை இலை வழக்கு முடிவு தெரியும் வரை எங்களைப் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகவே கருத வேண்டும்” என்று வாதாடினார்.

குக்கரை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த உச்ச நீதிமன்றம்!

இந்நிலையில்தான் இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில் இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

“இரட்டை இலை சின்னம் தொடர்பான டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் பிரதான வழக்கை 4 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். அப்படி முடிக்கவில்லை எனில் தேர்தல் அறிவிக்கை வெளியான ஒரு வாரத்துக்குள் தினகரன் அணிக்கு பொதுச் சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என்று பந்தினை தேர்தல் ஆணையத்தின் பக்கம் திருப்பிவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால் தேர்தல் ஆணையம் தனது முடிவைதான் கடந்த 24 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்துவிட்டது.

எனவே தினகரன் முதல் முறை தொப்பி சின்னத்தில் நின்று, மீண்டும் தொப்பியைக் கேட்டபோது தொப்பி மறுக்கப்பட்டதுபோல, இப்போது குக்கர் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் அவருக்கு மறுக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி குக்கர் சின்னம் தினகரனுக்கு மறுக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக இருக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் பொதுவான புகார்கள் உண்மையாகிவிடும் அபாயம் இருக்கிறது.

தினகரன் கருத்து

இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி பிற்பகல் கள்ளக்குறிச்சியில் பேட்டியளித்தார் தினகரன்.

“எங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அறிவுரையோ ஆலோசனையோ வழங்கவில்லை. உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே குக்கர் எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்படி ஒருவேளை குக்கர் எங்களுக்கு மறுக்கப்பட்டால் கூட வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல மக்கள் விரும்பும் நாங்கள் எந்த சின்னத்திலும் ஜெயிப்போம்.

ஆர்.கே.நகர் தேர்தலில் சில நாட்கள் அவகாசத்தில் குக்கர் சின்னத்தைக் கொடுத்துவிட்டு என் பெயரை 33 ஆவது இடத்தில் வைத்திருந்தார்கள். அதில் தினகரன் என்ற நான்கு பெயர்களை சேர்த்து ஐந்தாவது தினகரனாகவே என்னை இடம்பெற வைத்தார்கள். ஆனால் மக்கள் என்னைத் தேடிக் கண்டுபிடித்து வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள். இப்போது சின்னம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துவிட்டது எனவே எங்களுக்கு குக்கர் சின்னம் கிடைப்பது உறுதி. வேறு சின்னம் கிடைத்தாலும் நாங்கள் வெற்றிபெறப் போவது உறுதி” என்றார் ரிலாக்சாய்.

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம். “டெல்லி உயர் நீதிமன்றம் எங்களுக்கு குக்கர் பொதுச் சின்னத்தை அளிக்குமாறு உத்தரவிட்டதை அடுத்து உடனடியாக தேர்தல் ஆணையத்தை அணுகி அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் முறையிட்டிருக்கிறோம். ஆனால் இடையில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர் உச்ச நீதிமன்றம் சென்று இப்போது தேர்தல் எதுவும் வரவில்லை, என்ன அவசரம் என்று கேட்டதால் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கவில்லை. எனவே இப்போது உச்ச நீதிமன்ற உத்தரவும் எங்களுக்கு குக்கரை வழங்கச் சொல்லிதான் வந்திருக்கிறது. உறுதியாக குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கும்” என்றார்.

ஆக, தினகரனின் குக்கர் இப்போது தேர்தல் ஆணையத்தின் கையில் இருக்கிறது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019