மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்துகொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற தினகரன், வரும் தேர்தல்களில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கின் வாதங்கள் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 7) வழங்கப்பட்டது. நீதிபதி கான்வீல்கர், அஜய் ரஸ்தோகி அமர்வு வழங்கிய தீர்ப்பில், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இரட்டை இலை தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும் வழக்கை இன்னும் 4 வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு வழக்கை முடிக்கவில்லையெனில், குக்கர் சின்னத்தை தினகரன் தரப்புக்கு வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், இடைப்பட்ட காலத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால், தினகரன் கோரும் குக்கர் சின்னத்தை ஒதுக்குவது குறித்து ஒரு வாரத்திற்குள் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது, “பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத எந்தக் கட்சிக்கும் குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது. அந்த வகையில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து வாதம் எடுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்தத் தீர்ப்பு தினகரன் தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019