மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

இளைய நிலா: உங்களுக்கென்று யாருமே இல்லையா?

இளைய நிலா: உங்களுக்கென்று யாருமே இல்லையா?

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 12

ஆசிஃபா

நான் இளங்கலை படித்துக்கொண்டிருக்கும்போதும் சரி, இப்போதும் சரி எப்போதும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். இப்போது பல காரணங்களுக்காக வாசித்தாலும், ஆரம்பத்தில் என் தனிமையைப் போக்கிக்கொள்ளவும், நிஜ உலகத்தில் இருந்து தப்பிக்கவுமே புத்தகங்களை வாசித்தேன்.

சில நாட்களாகவே தோழி ஒருத்தி புலம்பிக்கொண்டே இருந்தாள். “எனக்கு யாருமே இல்லன்னு தோணுது. யார்கிட்டையும் பேசப் பிடிக்கல. ஃபிரண்டு அப்டின்னே தோண மாட்டேங்குது. என்ன சுத்தி நிறைய பேர் இருந்தாலும் தனியா இருக்க மாதிரி இருக்கு. ஒரு பிடிப்பு இல்லாம இருக்கு. செத்துப் போய்டலாமான்னு இருக்கு!”

அவளுக்கு என்ன சொல்வதென்று யோசித்துக்கொண்டேதான் இதை எழுதுகிறேன். பலரும் இந்த மனநிலையைக் கடந்திருக்கலாம். ஒரு வாரம் முன்பு, அமெரிக்காவில் பிரபல ஊட்டச்சத்து நிபுணரின் தற்கொலைக் குறிப்பிலும் இதேதான் எழுதப்பட்டிருந்தது. அதை வாசிக்கும்போது, சில இடங்களில் நானே எழுதியது போலக்கூட தோன்றியது. என்னைச் சுற்றி இருக்கும் நண்பர்கள் பலரின் பேச்சிலும்கூட சில நேரங்களில் என் வார்த்தைகளை உணர்ந்திருக்கிறேன்.

இங்கு சிக்கல் என்னவென்றால், நாம் ஒவ்வொரு உணர்விற்குள் ஆட்படும்போதும், நாம் மட்டுமே தனியாக இருப்பதாக உணர்கிறோம். நம்மைச் சுற்றிலும் உள்ள பலரும் இதையேதான் உணர்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளத் தவறுகிறோம். இதில் நம் சமுதாயமும், வளர்ப்புமுறையும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. சிறு வயதிலிருந்தே, நாம் சோகமாக இருப்பது வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளப் பழக்கப்படுத்தப்படுகிறோம். குறிப்பிட்ட வயதில், ‘முகத்த அப்டி வைக்காத. என்ன கப்பலா கவுந்துச்சு?’ என்று சொல்வார்களே தவிர, ஏன் இப்படி இருக்கிறாய் என்று பெரும்பாலும் கேட்பதில்லை. பதின் பருவங்களில் அப்படிக் கேட்கும் நெருக்கமும் வாய்ப்பும் நம்மிடையே இல்லாமலேயே போய்விடுகிறது.

நாம் நம்முடைய குழப்பமான சிந்தனையை, அல்லது வருத்தத்தை, பிரச்சினையை நாமே பார்த்துக்கொள்வது பெருமை என்ற கற்பிதமும் இருக்கிறது. அது மிக மிக தவறான ஒன்று! நம் பிரச்சினைகளை நமக்குள் போட்டுப் போட்டு ஒரு அழுத்தத்தை உருவாக்கிவிடுகிறோம். எப்போது நடக்கிறது என்றே தெரியாமல், திடீரென்று மன அழுத்தத்தில் இருக்கிறோம்.

மாறாக, ஒரு பிரச்சினை இருக்கிறதா, அதை வெளிப்படையாக யாராவது ஒருவரிடமாவது பேசலாம். அது நண்பராக, காதலராக, பெற்றோராக, ஏன் முகம் தெரியாதவராகக்கூட இருக்கலாம். அப்படிச் செய்யும்போது நமக்கு ஒரு நம்பிக்கையும், நமக்கே தெரியாமல் மற்றவர் மனதில் ஒரு நம்பிக்கையையும் விதைக்கிறோம்.

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்.

அன்றைய நாள் எனக்கு மிக மிக மோசமானதாக இருந்தது. இனி ஏன் வாழ வேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எழுந்தது. அது மன அழுத்தம்தான். யாருக்கும் தெரியாத ஒரு முகமாக மறைந்து போக விரும்பி, கூட்டமான பேருந்து நிலையத்தில் ஓரமாக அமர்ந்திருந்தேன்.

சிறிது நேரத்தில், ஒரு முதியவர் அருகில் வந்து அமர்ந்தார். அவரை அங்கு நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். சில நேரம் பணமாகவும், உணவாகவும் என்னால் முடிந்ததைக் கொடுப்பேன். “என்னம்மா ஒரு மாதிரி இருக்க?’ என்று கேட்க, நான் நீண்ட நேரம் பேசினேன். அப்போது நான் கடைசியாகச் சொன்னது “செத்துப் போய்டலாமான்னு இருக்கு தாத்தா!”

அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். இறுதியில் அவர் சொன்னது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.

“பாப்பா, வாழ்க்கைல இன்னும் எவ்ளவோ இருக்கு. நான் அந்தக் காலத்துல ஜமீன் குடும்பம். இப்போ பாரு? சாப்பாட்டுக்கு வழி இல்லாம இருக்கேன். ஆனாலும், சாகணும்னு நினைக்கவே மாட்டேன். ஏன் தெரியுமா? இந்த வாழ்க்கை உன்ன மாதிரி, என்ன மாதிரி, குழந்தையோட அலையுதே அந்த அம்மு மாதிரி நிறைய பேர சேத்து வைக்கும். ஒரு நிமிஷம்னாலும், அந்த நிமிஷம் உலகத்துல அற்புதமானது. நாம வாழப்போற காலமெல்லாம் அந்த நிமிஷத்த நினைச்சே வாழலாம். நீ இனிமேதான் நிறைய பாக்கப் போற. அது எல்லாம் சந்தோஷமா இருக்கும்னு மட்டும் நினைக்காத. ஆனா, அழகானதா இருக்கும். உனக்கு சாகணும்னு தோணும் போது, என்ன மாதிரி எத்தன கிழவன இன்னும் பாக்கணும்னு மட்டும் நினைச்சுக்கோ. சாக மாட்ட!”

இன்று வரை இந்த வார்த்தைகள் எனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை அளிக்கின்றன. யோசித்துப் பார்த்தால், நம் அனைவர் வாழ்விலும் இப்படியான தருணங்கள் இருக்கவே செய்யும். அவை சாதாரணமானவை என்று கடந்துவிடுகிறோமோ என்னவோ!

இத்தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள், ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே வாழ்கிறார்கள். தங்களுக்கான சின்ன வட்டத்தைப் போட்டுக்கொண்டு, அதற்குள்ளேயே வாழ முயல்கிறார்கள். அதுதான் நமக்கு இருக்கும் சிக்கல்.

வாழ்க்கை முழுவதும் அவசரமாக ஓடிக்கொண்டே இருக்கப் பழகிவிட்டோம். பள்ளி முடிந்தால், கல்லூரி, கல்லூரி முடிந்தால் வேலை என்று தொடர்ந்து ஒரு ஓட்டப் பந்தயத்திலேயே இருக்கிறோம். சற்று நிதானமாக நின்று யோசித்துப் பார்த்தால், நாம் தனியாக இல்லை என்பது புரியும்.

கண்ணைத் திறந்து பார்த்தால், நமக்கான ஆயிரம் உறவுகள் இருப்பதைப் பார்க்க முடியும்!

பிரேக்-அப் என்னும் பேராசான்!

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019