மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

உதயமானது திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்!

உதயமானது திரைப்பட பைனான்சியர்கள் சங்கம்!

தமிழ் சினிமா 365: பகுதி - 34

இராமானுஜம்

திரைப்படத் துறையில், அதிகமாக முதலீடு செய்பவர்களான சினிமா பைனான்சியர்களுக்காக முறைப்படிபதிவு செய்யப்பட சங்கம் தொடங்கப்பட்டுள்ளதாக சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அதன் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தார்.

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association – SIFFA) என்று பெயரிடப்பட்ட இந்த சங்கம் திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர பாடுபடும் என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறினார்.

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவராக -திருப்பூர் சுப்ரமணியம், துணை தலைவராக சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளராக மதுரைஅன்பு செழியன், செயலாளராக நடிகர்அருண் பாண்டியன் என அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் R.B.சௌத்ரி, ஜெஸ்வந்த் பண்டாரி, பங்கஜ் மேத்தா, தமிழ் திரைப்பட வர்த்தகசபை தலைவர் அபிராமி ராமநாதன், விநியோகஸ்தர் அழகர் ஆகியோர் சங்கத்தின் செயற்குழுஉறுப்பினர்களாகவும், ராம், அபினேஷ் இளங்கோவன், D.C.இளங்கோவன், பதாம், விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமான வேலூர் சீனு ஆகியோர் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

தென்னிந்தியத் திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக தற்போது 20 சினிமா பைனான்சியர்கள் உள்ளனர். தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கியம்சங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

1. இன்று வரை பைனான்ஸ் செய்து படப்பிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவற்றை வெளியே கொண்டுவர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து இந்த சங்கம் மூலம் தீர்வு காணப்படும்.

2. திரைப்பட நடிகர்கள் இயக்குநர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர். அதனால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. தயாரிப்பாளர்களுக்கு அதிக வட்டி நஷ்டம் ஏற்படுகின்றது.

இனிமேல் முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்கவேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியை கொடுக்கும் நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களுக்கு பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்த நடிகர் நடிகைகள் நடிக்கும் மற்ற திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும்.

3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படம் தயாரிக்கும் போது அவர் விருப்பப்படும் பைனான்சியரை அணுகி திரைப்படத்தின் லெட்டர் மூலம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டபின் மேலும் பைனான்ஸ் பெற மற்ற பைனான்சியரை அணுகும்போது சம்பந்தப்பட்ட முந்தைய பைனான்சியர்கள் அனுமதியின் பெயரில் மட்டுமே மற்றவர்கள் முதலீடு செய்வார்கள் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது,.

4. முதல் பைனான்ஸியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேப்க்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

5. சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்துக்கு பைனான்ஸ் வாங்கி அந்த படத்தை பாதியில் நிறுத்திவிடுவது அல்லது ரிலீஸ் செய்யாமல் அடுத்த படத்தை ஆரம்பித்தால் அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

6. சில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணங்களை திருப்பி கொடுக்க முடியாத பட்சத்தில், பைனான்சியரை குற்றம் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு கொடுப்பதை பற்றியும் பேசி முடிவு எடுக்கப்படும். குற்றம் குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

7.திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

மேற்கண்ட சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்பட துறையில் அனைத்துப் பிரிவுகளுக்கும் தனித்தனி சங்கங்கள் இருக்கின்றன. படத்தயாரிப்புக்கு பைனான்ஸ் செய்பவர்கள் படவெளியீட்டுக்கு முன்பு கடனை வசூல் செய்வதற்கு உரிய பாதுகப்பு உள்ளது.

இருப்பினும் பைனான்சியர்களுக்கு என்று தனி சங்கம் தொடங்கப்பட்டுள்ளது அவர்கள் நலன் சார்ந்த தனிப்பட்ட உரிமை.

அதே நேரம் அச்சங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் இச்சங்கத்தின் அறிவிப்புகள் கடும் அதிருப்தியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை எந்த விதமான கருத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

“படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை மட்டும் தொழிலாக கொண்டவர்கள் இப்படியொரு அமைப்பை தொடங்கியிருந்தால் ஆரோக்கியமான செயலாகக் கருதலாம். ஆனால் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்கள் இரண்டு பைனான்சியர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டு சங்கம் தொடங்கியிருப்பது சந்தேகத்துக்குரியது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத தயாரிப்பாளர் ஒருவர்.

“தயாரிப்பாளர்கள் சங்கத் தலைமை பலவீனமாகவும், தலைமைக்குரிய ஆளுமை இல்லாததன் விளைவு தடி எடுப்பவரெல்லாம் தண்டல்காரனாக மாறுகிற வித்தை தமிழ் சினிமாவில் மட்டுமே நடக்க கூடியது” என்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள்.

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் என்ன மாதிரியான பின்விளைவுகளை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தப் போகிறது. இதில் இடம்பெற்றிருக்கும் பைனான்சியர்களின் பின்புலம் என்ன? கடந்த காலங்களில் இவர்களால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? அடாவடிகள், அத்துமீறல்கள் என்ன? பைனான்சியர்கள் சங்கம் தயாரிப்பாளர்களுக்கு வரமா சாபமா என்பதை உள்ளது உள்ளபடி பதிவு செய்யவிருக்கிறோம்.

தமிழ்த் திரைப்படத் துறையில் 48 நாட்கள்நடைபெற்ற வேலை நிறுத்தத்தின் போது இது போன்ற தொடரை வெளியிட்டோம், அப்போது அத்தொடர் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரைப்படத் துறை நலன் சார்ந்து வெளிவரும் இத் தொடர் திரைத்துறை சார்ந்த ஜாம்பவான்கள் முதல் சாமான்யர்களிடம் வரை நிகழ்த்தப்பட்ட உரையாடலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்படவிருக்கிறது,

நாளை: பைனான்சியர்கள் சங்கம் தமிழ் சினிமாவுக்கு வரமா சாபமா?

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விபரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான " தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்" மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்,

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019