மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கதவைத் தட்டும் பேரழிவு: பாங்காக் முதல் பலி?

கதவைத் தட்டும் பேரழிவு: பாங்காக் முதல் பலி?

நவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது

நரேஷ்

போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து ரத்தம் சிந்த இறந்த மனிதர்களின் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா..? இப்படிக் கற்பனை செய்து பாருங்கள், போபாலில் நடந்ததைப் போல ஒரே இரவில் விஷவாயு சிலிண்டர்கள் வெடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக விஷக்காற்று கசிந்தால்? அதை சுவாசிக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதைப்பட்டு இறப்பார்கள் அல்லவா? அதுதான் இன்றைய பாங்காக்.

பாங்காக்கில் உள்ள மக்களின் கண்களில் ரத்தம் கசிகிறது. நாசி தூசிகளால் நிறைந்திருக்கிறது. சிலரின் நுரையீரல் கனம் தாங்காமல் கொதிக்கிறது. மக்கள் ரத்த வாந்தி எடுக்கின்றினர். கண்கள் ரத்தச் சிவப்பாக இருக்கின்றன. பூனை, முயல் போன்ற வீட்டு விலங்குகள்கூட மூச்சுவிடும்போது ரத்தம் கக்குகின்றன. காரணம், காற்று மாசுபாடு!

பாங்காக் நகரத்தை அடர்த்தியான புகை சூழ்ந்திருக்கிறது. அந்தப் புகையை சுவாசிக்கும் மக்கள் நிறுத்தாமல் இருமிவருகின்றனர்.

“இது சாதாரணப் புகை அல்ல. விஷப்புகை! அதுவும் PM 2.5 (Atmospheric particulate matter) கொண்ட புகை. மக்கள் மாஸ்க் அணிந்துகொண்டு வெளியே செல்லுங்கள். தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுங்கள்” என்கிறது பாங்காக் அரசு.

அந்நகரத்தில் 439 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. டீசல் கார்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர எல்லைக்குள் எதையும் எரிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊதுபத்திகூட கொளுத்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சிறிய வகை பறக்கும் விமானங்கள் மூலம் நீர் தெளித்துப் புகையைக் கட்டுப்படுத்தவெல்லாம் அரசு முயற்சி செய்துவிட்டது. எந்த முயற்சிக்கும் பயனில்லை. உலகில் முதலில் அழியப்போகும் நகரம் இதுவாகத்தான் இருக்கும். இந்நகரம் 2030க்குள் மூழ்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

PM 2.5 என்றால் மிக மிக நுண்ணிய அளவில் காற்றில் கலந்திருக்கும் நச்சுகள். இந்த நச்சுத் துகள்கள் நுரையீரல்களின் செல்களுக்குள் நுழையும் அளவிற்குச் சிறியவை. இவை நுரையீரலை அடைத்து அதன் செயல்பாடுகளைத் தடுக்கும்போது நாசி, வாய் ஆகிய பகுதிகளில் ரத்தம் கசியும். அதுதான் அம்மக்களுக்கு நடந்ததுள்ளது.

“நீங்கள் என்னதான் ஆரோக்கியமாக இருந்தும் பயனில்லை. இந்த மோசமான சூழல் உங்களை எப்படியும் பாதித்துவிடும்” என்கிறார் அந்நகரவாசி சைய்னி (Seine).

பாங்காக்கின் கவர்னர் அஸ்வின் க்வான்மங், “எனக்கு எல்லாம் தெரியாது. எனவே, அனைவரையும் உதவி செய்யுமாறு அழைக்கிறேன்” என்கிறார்.

மனிதர்கள் மட்டுமல்லாமல், வீட்டு விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. விலங்குகள் மருத்துவர் ஒருவர் தனது முயல் குறித்துத் தன் வலைதளப் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார், “எனது முயல் ஜுப்புவால் தும்முவதை நிறுத்த முடியவில்லை. அதற்கு ‘டஸ்ட் அலெர்ஜி’ இருக்கிறது. அதன் நாசியை மைக்ரோஸ்கோப்பில் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அதன் நாசிக்குழி வீங்கிச் சிவந்திருந்தது.”

விலங்குகள் மருத்துவமனைக்கு ஒரு நாய் கொண்டுவரப்பட்டது. அது குரைக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அதன் தொண்டை, நுரையீரல் மற்றும் உட்பகுதி முழுவதும் தூசிகளால் அடைத்திருக்கிறது என்று. “என் நாயை நான் வெளியிலேயே விட்டதில்லை. வீட்டுக்குள்ளேயேதான் வளர்த்தேன். இருந்தும் ஜன்னல் கதவுகள் வழி வந்த தூசித் துகள்கள் அதனைக் கடுமையாக பாதித்துவிட்டன. இந்நகரத்தில் அவ்வளவு மாசு இருக்கிறது. என் நாய் எப்போது இறக்கும் என்று தெரியவில்லை. நாம் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் நம்மையும் நம் அன்பானவர்களையும் காப்பாற்றுவதுதான்” என்கிறார் நாயின் உரிமையாளர்.

மிக முக்கிய விஷயம், இந்த நச்சுப் புகை எந்த தொழிற்சாலை சிலிண்டர்களிலிருந்தும் கசிந்ததல்ல. மக்களின் அன்றாட நடவடிக்கைகளிலிருந்து கசிந்தது. அவை என்ன நடவடிக்கைகள் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது அதிர்ச்சியாக இருந்தது. அந்நகரின் ஆய்வாளர்கள் இந்நிலைக்கான காரணங்களாக முன்வைத்தவை இதோ:

1) வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை.

2) கட்டுமானப் பணிகளால் ஏற்படும் மாசு.

3) ஹோட்டல்கள், வீதி உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளினால் ஏற்படும் புகை.

4) அறுவடைப் பயிர்களை எரிப்பதனால் ஏற்படும் மாசு.

இவையெல்லாம் பாங்காக்கிற்கு மட்டுமே உரியவை அல்ல. எல்லா நகரங்களிலும் நாம் பார்க்கக்கூடிய அன்றாட நிகழ்வுகள். நமது ஊர்களில் நாமும் இவற்றையெல்லாம் பார்த்திருக்கிறோம். ‘நவீனம்’, ‘வளர்ச்சி’ ஆகிய பெயர்களால் நடக்கும் இவற்றைக் கண்டுகொள்ளாமலும் கடந்து சென்றிருப்போம்.

அந்த நவீனமும் வளர்ச்சியும் நம்மையும் காப்பாற்றாது என்பதைத் தெரிந்துகொண்டு நம் அன்றாட நவீன நகரச் சீரழிவுகளில் ஈடுபடுவோமாக..!

ஆதாரம்

உலகம் ஊழிக்குத் தயாராகிவிட்டது. நீங்கள்?

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019