மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

கடலூரில் கே.எஸ். அழகிரியா? கலக்கத்தில் திமுகவினர்!

கடலூரில் கே.எஸ். அழகிரியா? கலக்கத்தில் திமுகவினர்!

தமிழக காங்கிரஸ் தலைவராக பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு நியமிக்கப்பட்ட கே.எஸ். அழகிரி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து திமுக கூட்டணி சார்பாக வெற்றிபெற்றவர், இந்தப் பின்னணியில், நேற்று பிப்ரவரி 5 ஆம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார் அழகிரி. அதற்குள், கடலூர் திமுக நிர்வாகிகளிடையே ஒரு தகவல் மெல்லப் பரவியது. அதாவது, ”கடலூர் தொகுதியில் இம்முறை கே.எஸ். அழகிரிதான் போட்டியிடப் போகிறார், கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் இதுபற்றிக் கேட்டால் ஸ்டாலினால் மறுக்க முடியாது. எனவே இம்முறையும் கடலூர் திமுகவுக்குக் கிடைக்காது போல” என்ற தகவல்தான் அது.

இதுபற்றி கடலூர் திமுகவினரிடம் பேசினோம். “கடந்த 20 ஆண்டுகளாக 99 முதல் கடலூரில் மண்ணின் மைந்தர்களான திமுகவினர் தேர்தலில் நிற்க முடியவில்லை. 99ஆம் ஆண்டு ஆதிசங்கர் எம்.பி.யானார், 2004 ஆம் ஆண்டு வேங்கடபதி எம்.பி. ஆனார். இவர்கள் திமுகதான் என்றாலும் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள்.

அதன் பின் 2009 இல் கே.எஸ். அழகிரி எம்பியாக ஜெயித்தார். 2014 ஆம் ஆண்டு திமுகவின் டாக்டர் நந்தகோபால கிருஷ்ணன் போட்டியிட்டு அதிமுகவின் அருண்மொழித் தேவனிடம் தோற்றுப் போனார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின் கடலூரில் திமுக போட்டியிட வாய்ப்பு வந்திருக்கிறது என்று மகிழ்ந்திருந்தோம்.

திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தன் மகனுக்கு சீட்கேட்கிறார். தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொருளாளரான ராதாகிருஷ்ணன் சீட்கேட்டு காய் நகர்த்தி வருகிறார். திமுகவில் அவருக்குதான் சீட் என்றும் பேச்சு உலவுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.எஸ். அழகிரி காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டதால், ஒருவேளை கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் அழகிரிக்கு எம்பி சீட்டை காங்கிரஸ் கேட்கலாம். அதுவும் அவர் ஏற்கனவே நின்று வெற்றி பெற்ற தொகுதி. அப்படிக் கொடுக்கப்பட்டால் மறுபடியும் திமுகவினரின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்” என்றனர்,

இதுபற்றி நாம் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோது, “அழகிரி வரும் மக்களவைத் தேர்தலில் பெரும்பாலும் போட்டியிடமாட்டார். அந்த ஒப்பந்தத்தின் படியே அவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

வியாழன் 7 பிப் 2019