மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது எப்படி, முடிந்தது எப்படி?

ஜாக்டோ ஜியோ போராட்டம் நடந்தது எப்படி, முடிந்தது எப்படி?

இனியன்

காலை நேரம், ரவி வழக்கம்போல தரையில் இருந்த கல்லைக் கால் பந்து போல எத்தி எத்தித் தன்னுடனே கல்லையும் பள்ளிக்குக் கூட்டிவந்துவிட்டான். தாமதமாக வந்துவிட்டோம் என்று தெரிந்ததும் தன் கல்லை மண்ணோடு விட்டுவிட்டு வேகமாக வகுப்பறைக்குள் நுழைய, போராட்டத்துக்குச் சென்றிருந்த தன் ஆசிரியர், அவரின் மேசையிலிருந்த பொருட்கள் அனைத்தையும் பைக்குள் போட்டுக்கொண்டு கிளம்புவதைப் பார்த்ததும் பதறிப்போனான். ஓடிப்போய் தன் வகுப்பில், “சுரேஷ் சார் ஸ்கூலை விட்டுப் போறார்” என்று கத்திவிட்டான்.

கொஞ்ச நேரத்திற்குள் 6, 7, 8 என சுரேஷ் சார் கணித வகுப்பெடுத்த அத்தனை வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டனர். “போகாதீங்க சார்!!” என்று சொல்லி அழத் தொடங்கிவிட்டனர். வந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நிலையைப் பார்த்து போராடத் தொடங்கினர். கலெக்டரிடம் சென்று சுரேஷ் சார் அந்தப் பள்ளியிலேயே தான் இருக்க வேண்டும் என்று மனுவும் அளித்தனர்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி திருப்பூர் வெள்ளியங்காடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பிப்ரவரி 6 அன்று நடந்தது. ஆசிரியர் சுரேஷ் (34) ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்றவர். அதனால் பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்து சோழம்பட்டி, விருதுநகர் மாவட்டத்து நரிக்குடி, திருவண்ணாமலையில் செங்கம் எனப் பல்வேறு இடங்களில் மாணவ மாணவியர் கல்வி அலுவலரின் காலில் விழுந்து தங்கள் ஆசிரியரைத் தங்களிடமிருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கண்ணீர் விட்ட நிகழ்ச்சிகள் அரங்கேறின. தமிழகம் முழுவதும் பல பள்ளிகளில் இதேபோன்ற காட்சிகளைக் காண முடிகிறது.

பணியிடை மாற்றம் இப்படி இருக்க, தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3,500 ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளின் சூழல் சோகமயமானதாக இருக்கிறது. ஆசிரியர்கள் இல்லாத அந்தப் பள்ளிகளின் பிள்ளைகள் கண்களில் ஏக்கமும் பயமும் தெரிகின்றன.

யார் இதற்குப் பொறுப்பு?

இந்தப் பிள்ளைகளின் அழுகைக்கும் ஏக்கத்துக்கும் யார் பொறுப்பு? ஜனவரி 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்த ஆசிரியர்களா? 40 நாட்கள் (2018, டிசம்பர் 4) முன்கூட்டியே அறிவித்தும் அவர்களை அழைத்துப் பேசாத அரசா?

'ஜாக்டோ ஜியோ' ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் என்பது கடந்த வாரங்களில் தமிழகத்தை அசைத்துப் பார்த்த ஒரு போராட்டமாக வளர்ந்து பின்னர் அரசின் நெருக்குதல்களாலும் வேறு சில காரணங்களுக்காகவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இது பற்றி 'ஜாக்டோ ஜியோ'வின் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் ஜெயராமனிடம் கேட்டபோது, "நியாயமான கோரிக்கைகளுக்காக 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு வந்தார்கள். 5,000 பள்ளிகளை இணைக்கும் முடிவையும் 3,500 சத்துணவுக் கூடங்கள் மூடப்படுவதையும், படித்த இளைஞர்கள் வேலைக்குப் போகத் தடையாக இருக்கக்கூடிய அரசாணை எண் 56ஐ எதிர்த்தும்தான் நாங்கள் போராடினோம். இவையே எங்கள் பிரதான கோரிக்கைகள். ஆனால், மக்கள் மத்தியில் ஏதோ ஊதியம் கேட்டுப் போராடுகிறோம் என்று எங்களைச் சுருக்கிவிட்டார்கள்” என்றார்.

அரசிடமிருந்து எதை எதிர்பார்த்து இந்தப் போராட்டத்தில் இறங்கினீர்கள் என்றதற்கு, "போராடும் அரசு ஊழியர்களை முதல்வர் அழைத்துப் பேசுவார் என்று எதிர்பார்த்தோம். இப்போது முடியாது இரண்டு மூன்று மாதங்கள் கழித்து பார்ப்போம் என்று சொல்லியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், பேசவே முடியாது என்ற நிலைப்பாடு எடுத்து எங்களைப் புறந்தள்ளும் வகையிலேயே அரசு நடந்து கொண்டது” என்றார்.

நடந்த போராட்டத்தில் ஏதும் குறைகள் உண்டா என்றதற்கு, "தலைமைச் செயலகப் பணியாளர்கள் மற்றும் வேறு அரசு ஊழியர் சங்கங்கள் முன்கூட்டியே ஆசிரியர்கள் போராட்டத்துடன் களமிறங்கியிருந்தால் இந்தச் சூழல் பெரிய அளவில் மாற்றமடைந்திருக்கும் என்று தோன்றுகிறது" என்றார்.

ஜாக்டோ இருந்தது, ஜியோவைக் காணோம்!

போராட்டக் களத்தில் இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பெற்ற ஆசிரியர் ஒருவர் பேசுகையில்: “ஜாக்டோ ஜியோ என்பதில் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ இருந்தது. ஜியோ - அரசு ஊழியர்கள் பெருமளவில் இல்லை. போராட்டத்துக்கான சரியான திட்டமிடுதல் இல்லை. ஆசிரியர்களைப் போல அரசு ஊழியர்கள் போராட்டத்தில் முன் நிற்கவில்லை. முழுமையாகத் திட்டமிடாத சூழலில் ஆசிரியர்களை முன்னுக்குத் தள்ளியது, சங்கத்தை நம்பிப் போராட வந்த ஆசிரியர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. கைது, பணியிடை நீக்கம் போன்ற சூழல்களில் என்ன செய்வது என்னும் வழிமுறைகள் சங்கத்தால் அளிக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதே, தினமும் சாலை மறியல் என்பது அவ்வளவு சரியான போராட்ட முறையில்லை” என்கிறார். இவர் தன் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

ஆசிரியர்கள் அதிகமாகச் சம்பளம் வாங்குகிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுகிறதே என்று கேட்டதற்கு அரசுப் பள்ளி ஆசிரியர் செந்தில், “அரசு ஊழியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில் தான் சேர வேண்டும் என்று நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டுவந்தாலே இந்தச் சூழலை மாற்றிவிடலாம். அதை நாங்கள் வரவேற்போம். ஆசிரியர்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்குவதுபோன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவது வருத்தமளிக்கிறது. ஒரு ஆசிரியர் காலை வகுப்பு, மாலை வகுப்பு, 8.30; 5.30, சனிக்கிழமை வகுப்பு, காலாண்டு விடுமுறை வகுப்பு, அரையாண்டு விடுமுறை வகுப்பு, மே மாத விடைத்தாள் திருத்தம், நுழைவுச் சேர்க்கை, டி.சி. கொடுப்பது, தேர்தல் பணி, மாணவர்களுக்கு மூவ் அவே சான்றிதழ், கல்வி உதவித்தொகைக்கான வேலை, எப்போதெல்லாம் புள்ளி விவரங்கள் எடுக்க வேண்டுமோ அப்போதெல்லாம் அந்த வேலை என்று தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆசிரியர்களின் பணிச்சுமையைப் பல மடங்கு பெருக்கிவிட்டு அவர்களின் பணித்தரம் பாதிக்கிறது என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?” என்று ஆதங்கத்தோடு கேட்டார்.

2003, 2007, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் மேற்கொண்ட போராட்டங்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த முழு வேலைநிறுத்தம், ஒன்பது நாட்கள் தொடர் சாலை மறியல் என்று ஜாக்டோ ஜியோவின் போராட்டம் நீண்டுகொண்டே செல்கிறது.

பழிவாங்கும் நடவடிக்கை

“பேச்சுவார்த்தை கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு கடுமையாக இருந்தது. போராடும் ஆசிரியர்களை ஆங்காங்கே வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும், எந்த ஆட்சியிலும் இல்லாத போக்காகப் பணியிடை மாற்றம் செய்தது, போராடுபவர்களின் இடங்களைக் காலிப்பணியிடங்களாக அறிவித்து, புதிய தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணையிட்டது ஆகியவை போராட்டத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றன” என்று சொல்கிறார் திருச்சி அரசுப் பள்ளியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர்.

“திருச்சியில் ஆறு பேர் போராட்டம் காரணமாகக் கைது செய்யப்பட்டனர். கைதுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லி நீதிபதி தன் சொந்த ஜாமீனில் அவர்களை விடுவித்தார். வெளியே வந்தவர்கள் அடுத்த நாளே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அரசு ஊழியர்களின் நடத்தை விதிகளில் 48 மணி நேரம் சிறையில் இருந்தால்தான் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்றுள்ளது. நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் சென்றால் இந்த நடவடிக்கைகள் செல்லாது. ஆனால், தமிழ்நாடு முழுக்க நடக்கும் பழிவாங்கல் நடவடிக்கைகளில் இப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலையே உள்ளது” என்றும் அந்த ஆசிரியர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

போராடியவர்களின் பிடிவாதம் தளர்ந்து, தங்களைத் தண்டிக்காமல் விட்டால் போதும் என்னும் அளவுக்கு அவர்களுடைய உறுதி குலைந்திருக்கிறது. ஒன்பது கோரிக்கைகள் ஒற்றைக் கோரிக்கையாய்ச் சிதைந்துவிட்ட இந்தச் சூழலில் 'ஜாக்டோ ஜியோ'வின் பொறுப்பாளர்களைச் சந்திக்க ஒப்புதல் அளித்துச் சந்தித்திருக்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

போராட்டத்தை அரசு கையாண்ட விதம் பற்றிப் பரவலாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் தெரிவித்திருந்தாலும் , உண்மையில் 'ஜாக்டோ ஜியோ'வின் கோரிக்கைகள் என்ன? அவர்களின் பக்கம் நியாயம் உள்ளதா? அரசின் பக்கம் உள்ள வாதம் என்ன?

நாளை…

(கட்டுரையாளர் காயிதேமில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியில் பயிலும் மாணவர்)

ஜாக்டோ ஜியோ: நிர்வாகிகளைச் சிறைக்கு அனுப்பத் திட்டம்?

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது?

ஜாக்டோ ஜியோ: வீடு தேடிச் சென்று கைது!

ஜாக்டோ ஜியோ: இன்றும் தொடரும் கைது நடவடிக்கை?

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஒன்று சேரும் ஊழியர்கள்!

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019