மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 பிப் 2019

மனிதனோடு யானைக்கு என்ன சண்டை?

மனிதனோடு யானைக்கு என்ன சண்டை?

யானை - மனித மோதல்கள்: ஒரு பார்வை

கேரளம், தமிழகம், கர்நாடகம் என மூன்று மாநிலங்களில் உள்ள முப்பது மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்குத்தொடர்ச்சி மலையில் அடர்ந்த காடுகளின் உள்ளே ஏராளமான ஊர்கள் உள்ளன.

சங்க காலம் தொட்டே அந்த ஊர்களில் பல லட்சம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இங்குள்ள காடுகளில் விலங்குகளும் மனிதர்களும் இணைந்தே வாழ்ந்துவந்துள்ளனர்.

இப்போதும்கூட அடர்ந்த காடுகளினுள்ளே மனிதர்களும் விலங்குகளும் எந்தவித மோதலும் இல்லாமல் இணைந்து வாழ்ந்துவருகிறார்கள். சில சமயங்களில் நடக்கும் இந்த மோதல், எங்கே எதற்காக நடக்கிறது?

காடுகளை ஒட்டிய நிலப்பகுதியிலும், அடர்ந்த காடுகளுக்குள்ளும் வாழும் மக்களில் இரண்டு வகையினர் உள்ளனர்.

அந்த அடர்ந்த காடுகளிலே பிறந்து, அந்தக் காடுகளிலேயே வளர்ந்து, அந்தக் காடுகளை நம்பியே வாழ்ந்து கொண்டிருக்கும் காடர், குரும்பர், இருளர், சோளகர் எனப் பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள் முதலாவது வகையினர்.

காட்டுக்கு வெளியில் உள்ள ஊர்களில் பிறந்து, பிழைப்புத் தேடியும், விவசாயம், வணிகம் போன்ற காரணங்களுக்குக்காக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குட்பட்ட காலத்தில் அந்தக் காடுகளில் குடியேறி அங்கே வாழ்ந்துவருபவர்கள் இரண்டாவது வகையினர்.

காடுகளில் வாழும் மனிதர்களில் இரண்டு வகைகள் என்பது போலவே யானைகளிலும் இரண்டு வகைகள் உள்ளன.

பெரிய காடுகளை ஒட்டிய சிறிய குன்றுகளிலும், குன்றுகளை ஒட்டிய காடுகளின் ஓரங்களிலும் மூன்று, நான்கு யானைகள் முதல் பத்து யானைகள் வாழும் சிறு குழுக்கள் ஒரு வகை.

கோவை மாவட்டத்தின் வால்பாறை, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தடாகம் பள்ளத்தாக்கு, நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், தேவாலா, சேரம்பாடி, நெல்லியாலம் போன்ற பகுதிகள், ஈரோடு மாவட்டத்தின் தாளவாடி மலைப்பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தேன்கனிக்கோட்டை போன்ற பகுதிகளில் சிறு குழுக்களாக வாழும் இந்த யானைகள் தான் மனிதர்களை தாக்கிக் கொன்றதாகச் செய்திகள் வருகின்றன.

யானை வழித்தடங்கள் அழிப்பு

யானை - மனித மோதல்கள் நடக்கும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எல்லோருமே நாட்டுப் பகுதியிலிருந்து பிழைப்புத் தேடியும், வியாபாரம் செய்வதற்காகவும் அப்பகுதிகளுக்குச் சென்றவர்கள். காடுகளை ஒட்டிய பகுதிகளில் தற்காலிகமாக குடியேறியவர்கள், தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி அதிகாரிகளுக்குக் கையூட்டு கொடுத்தும், மலைவாழ் மக்களை ஏமாற்றியும், ஆசை காட்டியும், அவர்களின் நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.

கோவையை அடுத்துள்ள தடாகம் பள்ளத்தாக்கு, மருதமலை பள்ளத்தாக்கு, இருட்டுப்பள்ளம் பள்ளத்தாக்கு, வெள்ளியங்கிரி மலைப்பகுதி, பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன. இந்தச் சூளைகளுக்கான மண், தண்ணீர், மரம் எல்லாமே இந்தக் காடுகளிலிருந்துதான் சட்ட விரோதமாகக் கொள்ளையடிக்கப்படுகின்றன.

பொள்ளாச்சி அருகிலுள்ள வால்பாறை காடுகளில் இருக்கும் 56 எஸ்டேட்களை உள்ளடக்கிய மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் கேரள மக்கள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள கூடலூர், சேரம்பாடி, நெல்லியாலம் பகுதியில் யானைகளின் வழித் தடத்தில் உள்ள காடுகளை அழித்து அதில் தேயிலை,காப்பிக்கொட்டை, ஏலக்காய், மிளகு போன்ற பணப் பயிர்களைச் சாகுபடி செய்கிறார்கள். இதனால் யானைகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

இடம்பெயரும் பாறைகள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிகோட்டை, பாலக்கோடு போன்ற இடங்களில் காடுகளை ஒட்டிய நிலப்பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் செயல்படுகின்றன.

எம்-சான்ட் என்று சொல்லப்படும் செயற்கை மணலுக்காகவும், ஜல்லிக் கற்களுக்காகவும் யானைகளின் வழித்தடத்தில் உள்ள காடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பாறைகள் தினந்தோறும் உடைத்து வெளியே கொண்டுவரப்படுகின்றன. இதனால்தான் இப்பகுதிகளில் யானைகள் காட்டை விட்டு வெளியே வருகின்றன.

இது எல்லாமே காடுகளை ஒட்டி அமைந்துள்ள காடுகளில் வாழும் சிறு யானைக் குழுவுக்கு ஏற்படும் பிரச்சினைகள். இவை இப்படி வெளியேறி மனிதர்கள் வாழிடங்களுக்கு வருவதால் அங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

கோவை மாவட்டம், சர்க்கர்பதி, பரம்பிக்குளம், ஆழியாறு,டாப்சிலிப், மானாம்பள்ளி, பில்லூர் அணை, ஆனைகட்டி, போன்ற இடங்களிலும், நீலகிரி மாவட்டத்தின், தெங்குமரட்டா, சோலூர்மட்டம், மாயாறு, மசினகுடி, கேரள மாநிலம் சுல்தான் பத்தேரி, கர்நாடக மாநிலம் குண்டல் பேட்டை, கபினி, பிலிகிரி ரங்கன்பெட்டா, பாலாறு பள்ளத்தாக்கு, மாதேஸ்வரன்மலை போன்ற இடங்களில் உள்ள பரந்த காடுகளில் நூறு முதல் முந்நூறு யானைகள் அடங்கிய பெருங்கூட்டமாய் வாழும் மற்றொரு வகை யானைக் கூட்டமும் உண்டு.

பழங்குடிகளும் யானைகளும்

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கூட்டம் கூட்டமாய் யானைகள் சுற்றித் திரியும் இந்தப் பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் உள்ளன. அங்கும் மக்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்காக விவசாயம் செய்துதான் வாழ்ந்துவருகின்றானர்.

நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் இந்தப் பகுதிகளில்தான் யானைக்கும் மனிதனுக்கும் இடையே அதிகமான மோதல்கள் நடக்க வேண்டும். அதிகமான மக்கள் யானையிடம் மிதிபட்டுச் சாக வேண்டும்.

ஆனால், மலைவாழ் மக்கள் மட்டுமே வாழும் இந்த மாதிரியான அடர்ந்த காடுகளில் யானைகள் - மனிதர்கள் மோதல் நடப்பதுமில்லை. இந்தப் பகுதிகளில் மனிதர்கள் உயிரிழப்பு ஏற்படுவதுமில்லை.

தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பிலிகிரிரங்கன் பெட்டா பகுதிகளிலும், பாலாறு பள்ளத்தாக்கிலும், தமிழக - கேரள எல்லையில் உள்ள பில்லூர், குந்தா, ஆனைகட்டி காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் தங்கள் வீடுகளில் முன்பாக உள்ள நிலங்களில் ராகி, மொச்சை, அவரை, சோயா பீன்ஸ் போன்ற தானியங்களைப் பயிரிடுகிறார்கள்.

இந்த விளைநிலங்களை ஒட்டிய காடுகளிலிருந்து மான், எருமை, பன்றி, யானை போன்ற வன விலங்குகள் பழங்குடி மக்கள் பயிரிட்டுள்ள நிலங்களில் புகுந்து மேய்வதும் உண்டு.

இதைத் தடுக்க ஊரைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களை ஒட்டியுள்ள பெரிய மரங்களின் கிளைகளில் பரண் அமைத்து இரவு நேரங்களில் அந்தப் பரணிலேயே படுத்துக்கொள்ளும் அம்மக்கள் யானை, எருமை போன்ற விலங்குகளின் உயிருக்கும், உடலுக்கும் சேதம் இல்லாத வகையில் பழைய இசைக்கருவிகள் மூலம் சத்தம் ஏற்படுத்தி விலங்குகளை விரட்டுகிறார்கள்.

மலைவாழ் மக்கள் மட்டுமே வாழும் இந்தப் பகுதியில் உள்ள ஊர்களுக்குச் சென்றால் அங்குள்ள மரங்களில் மேலே அமைக்கப்பட்டுள்ள பரண் வீடுகளைக் காண முடியும்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் வி.பி.குணசேகரனிடம் பேசும்போது, “இந்தக் காட்டிலுள்ள படிப்பறிவில்லாத பழங்குடிகளிடம் உங்க காட்டுக்கு யானை வருதான்னு கேட்டா ‘ஆமாம் சாமி, இப்பவெல்லாம் பெரியசாமி அடிக்கடி காட்டுக்கு வருதுங்க... பாவம் காடு காஞ்சுபோச்சு வயித்துப் பசிக்காக வந்து திங்குது. நாலுவாய் தின்ன பின்னாலே தப்பட்டையை அடுச்சா பயந்துகிட்டு வேகமா காட்டுக்குள்ளே ஓடிப்போயிரும்’ன்னு சொல்கிறார்கள். அந்த மக்களுக்கு உணவு தேடி வரும் காட்டு விலங்குகள் மீது பரிதாப உணர்வுதான் வருகிறது.

ஆனால், கரும்பு வாழை பயிரிட்டிருக்கும் படித்த விவசாயிகள், ‘அந்தச் சனியனுக்கு இங்கென்ன வேலை? காட்டிலிருக்கும் ஒரு யானைய விடாம சுட்டுக் கொல்லணு’முன்னு சொல்றாங்க. இந்தச் சுயநலத்தால்தான் காடுகள் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன” என்று இங்குள்ள நிலவரத்தைச் சுருக்கமாகக் கூறுகிறார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் நடைபெற்றுவரும் மாற்றங்களையும் அவற்றின் விளைவுகளையும் அவர் விளக்குகிறார்.

மனிதர்களின் அத்துமீறல்கள்

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மலைப்பகுதியை நோக்கிக் குடியேறும் பழங்குடிகள் அல்லாதவர்கள்தான் இந்தக் காடுகளை நாசம் செய்கிறார்கள். முன் காலத்தில், தாளவாடி மலைப்பகுதியில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்காக வெட்டியுள்ள சில கிணறுகள் தவிர வேறு எங்குமே கிணறுகள் கிடையாது. காடுகளில் நிலத்தடி நீர் குறைவில்லாமல் இருந்தது. வனம் செழித்து வளர்ந்தது.

அங்கிருந்த பழங்குடி மக்கள் எல்லோருமே ராகி, கம்பு, சோளம், திணை, சாமை போன்ற உணவுப் பயிர்களை மானாவாரியாகத்தான் பயிரிட்டுவந்தனர். இது தவிர குளம், குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரைப் பயன்படுத்திதான் காய்கறி, கிழங்கு வகைகளுக்கான விவசாயம் செய்துவந்தனர்.

தற்போது கீழ் நிலப்பகுதியிலிருந்து குடியேறியுள்ள மக்கள் 1000 அடி ஆழத்துக்கு போர்வெல் போடுகிறார்கள். இலவச மின்சாரம் மூலமாக ஐந்து குதிரைத் திறன் கொண்ட மோட்டாருக்காக மின் இணைப்பு வாங்கிவிட்டு அதில் பத்து குதிரைத் திறன் கொண்ட மோட்டாரை வைத்து இரவு பகல் பாராமல் தண்ணீரை எடுத்துக் கரும்பு, வாழை, கேரட், பீட்ரூட், உருளை, முள்ளங்கி போன்ற பணப்பயிர்களைப் பயிரிடுகிறார்கள்.

ஆழ்குழாய்க் கிணறுகள் அதிகமாக வந்ததால், மலைப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாகக் குறைகிறது. இருபது அடி முதல் அறுபது அடிவரை வேர்களைக் கொண்டுள்ள மரங்கள் எல்லாமே கருகிச் சாகின்றன. காடுகளில் உள்ள ஏரி, குளம், குட்டை,சிற்றோடைகளில் இருந்த தண்ணீர் எல்லாம் வறண்டுவிடுகின்றன.

விலங்குகளுக்காக உள்ள இந்தக் காட்டிலிருந்து நாளொன்றுக்கு ஆயிரம் லாரிகளில் காய்கறிகளைக் கொண்டுபோய் மனிதர்கள் தின்கிறார்கள். காட்டுக்குள் தமது உணவை இழந்த விலங்குகள் நாட்டுக்குள் புகுந்து நாசம் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும்?

மின் வாரியம், பொதுப்பணித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை என நான்கு துறைகளும் ஒன்றோடு ஒன்று சுமுகமான உறவில்லாமல் தனித்து நிற்பதால்தான் காடுகள் அழிவை நோக்கிச் செல்கின்றன.

காடுகளின் காவலர்கள் யார்?

நம்முடைய காடுகளின் காவலர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பழங்குடி மக்கள்தான். வனத் துறை தனித்து நின்று காடுகளை வளர்க்கவும் முடியாது, காப்பாற்றவும் முடியாது. மூன்று ஆண்டுக்கு ஒரு இடத்துக்கு பையைத் தூக்கிக்கொண்டு போகும் ஒரு வனத் துறை அதிகாரியால் பெரிய அளவில் காடுகள் வளர சாத்தியமில்லை. ஆனால், அந்த மண்ணில் நிரந்தரமாக வாழும் மக்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் உள்ள காடுகள் பற்றிய பாரம்பரியப் பட்டறிவைப் பெற்று அவர்கள் வழியிலேயே காடுகளைக் கண்காணித்து வளர்த்தால் மட்டும்தான் காடுகள் அழியாமல் காப்பாற்ற முடியும்.

நம்முடைய பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், கணக்கு என பல பாடங்கள் உள்ளது போல காடுகள் குறித்த ஒரு பாடம் இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் இந்த மலைப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மட்டுமாவது காடுகள் குறித்த பாடத்தைச் சேர்க்க வேண்டும்.

காட்டுக்குள் உணவும் தண்ணீரும் இல்லை என்றால் விலங்குகள் அவற்றைத் தேடி ஊருக்குள் வராமல் வேறு எங்கே போகும்? நாங்களும் கடந்த இருபது வருடமாக மலைவாழ் மக்கள் தவிர மலைப்பகுதியில் உள்ள வேறு சமூக மக்களைக் கீழே அனுப்புங்கள் என்று போராடிவருகிறோம். யாருமே கண்டுகொள்வதில்லை.

மலையும் காடுகளும் மலைவாழ் மக்களுக்கான சொத்து, அதைப் பிறர் பறித்துக்கொண்டு போவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், இப்போது விலங்குகள் உணவுக்காக அலைவது போல நாளை நம்முடைய எதிர்கால சமுதாயமும் உணவுக்காகத் தெருவில் அலைய வேண்டிய நிலை வரும் என்று எச்சரிக்கிறார் குணசேகரன்.

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

4 நிமிட வாசிப்பு

6-8 வாரங்களில் மூன்றாவது அலை: எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை!

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: நெஞ்செரிச்சல், அஜீரணம்... தீர்வு என்ன?

வியாழன் 7 பிப் 2019