மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

தமிழ் ராக்கர்ஸ் விவகாரம்: விஷாலிடம் விசாரணை நடத்த மனு!

தமிழ் ராக்கர்ஸ் விவகாரம்: விஷாலிடம் விசாரணை நடத்த மனு!

தமிழ் சினிமாவின் தலையாய பிரச்சினைகளில் முக்கியமானது பைரஸி பிரச்சினை தான். தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மூலம் படம் வெளியான அன்றே இணையத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியாகி வருகின்றன. இந்த இணையதளத்தை முடக்குவேன் என்ற வாக்குறுதியை அளித்தே தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவரானார். ஆனால் அதன் பின் அவர் அது தொடர்பான செயல்பாட்டில் ஆர்வம் காட்டவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

துப்பறிவாளன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது செய்தியாளர்களைச் சந்தித்த விஷால் தமிழ்ராக்கர்ஸ் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டோம், விரைவில் ஒரு நிகழ்ச்சியில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். ஆனால் அதன்பின் அவர் அதுகுறித்து பேசவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பைரஸி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிவா (எ) பிரபாகரனை விஷால் நியமித்துள்ளார். அவருக்குச் சம்பளம் தயாரிப்பாளர்கள் சங்க நிதியிலிருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் சிவா தலைமையிலான குழு கண்டறிந்தது என்ன என்ற விவரங்களை வெளியிடவில்லை. இந்த இரு பிரச்சினைகளும் விஷாலுக்கு எதிராக தற்போது கிளம்பியுள்ளது.

ராஜா ரங்குஸ்கி படத்தின் தயாரிப்பாளர் சக்தி வாசன், தனது படத்தை திருட்டுத்தனமாகப் பதிவு செய்யக் காரணமாக இருந்த கரூர் கவிதாலயா தியேட்டர் உரிமையாளர் மீது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உரிய ஆவணங்களுடன் வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கூறிவருகிறார். இது தொடர்பாக நமது மின்னம்பலத்தில் பைரஸி: கண்டுகொள்ளாத தயாரிப்பாளர் சங்கம் என்ற தலைப்பில் நவம்பர் மாதமே செய்தி வெளியிட்டோம்.

இன்று (பிப்ரவரி 6) சக்தி வாசன், சென்னை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழ் சினிமாக்களை திருட்டுத்தனமாகப் பதிவிறக்கம் செய்து திருட்டு இணையதளங்களில் வெளியிட்டு தமிழக சினிமாத் துறையை அழித்து வரும் தமிழ்ராக்கர்ஸ்.காம் இணையதளத்தைப் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்களைத் தான் அடையாளம் கண்டுபிடித்து விட்டதாக ஊடகத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் அறிவிப்பு செய்த விஷாலை எனது வழக்கிலும், மற்ற வழக்குகளிலும் சாட்சியாக தாங்கள் முன் ஆஜராகி சாட்சி வாக்குமூலம் அளிக்க அவருக்கு உரிய சம்மன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்துள்ளார்.

“விஷால் திருட்டு இணையதளத்தின் பின்னணியில் உள்ள நபர்களோடு கைகோர்த்து செயல்படுகிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்ராக்கர்ஸ்.காம் பின்னணியில் இருந்து இயக்கும் நபர்கள் யார் என்ற விவரத்தை எங்களுக்குத் தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இதுகுறித்து புலனாய்வு செய்து வரும் காவல் துறை அதிகாரிகளிடம் ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்கவேண்டிய சட்டப்பூர்வ கடமை விஷாலுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தாங்கள் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் முன்பு விஷால் ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக்கேட்டு அவருக்கு எழுத்துப் பூர்வமான கோரிக்கை மனு ஒன்றையும் நாங்கள் அளித்தோம். ஆனால் அதனைப் பெற்றுக்கொண்டு இது நாள் வரையில் விஷால் தாங்கள் உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் முன்பு ஆஜராகி அந்த விவரங்களைத் தெரிவிக்க முன்வரவில்லை. இதனால் அவரை கு.வி.மு.ச பிரிவு 90,91 மற்றும் 160 இன் கீழ் உள்ள தங்களுக்கான சட்டப்பூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019