மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திடீரென பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி

திடீரென பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி

உத்திரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதி பொறுப்பாளராகவும் காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி இன்று பிப்ரவரி 6 டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் எளிமையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

உத்திரப்பிரதேச மேற்குப் பகுதியின் பொறுப்பாளராகவும் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்ட ஜ்யோதிர் ஆதித்ய சிந்தியா இன்றும், பிரியங்கா நாளையும் பொறுப்பேற்பதாகத்தான் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இதுபற்றி ராகுல் காந்தி, பிரியங்கா, சிந்தியா மூவரும் நேற்று டெல்லியில் இரண்டு மணி நேரம் ஆலோசித்தனர்.

இந்நிலையில் இன்று பிப்ரவரி 6 மாலை பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ரா பண மோசடி வழக்கு ஒன்றுக்காக அமலாக்கப் பிரிவு அலுவலகத்தால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ராபர்ட் வத்ரா தன் மீதான வழக்குகளுக்காக அரசின் விசாரணை அமைப்பின் முன் ஆஜராவது இதுவே முதல் முறை. அவரை தன் காரிலேயே கூட்டி வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.47 க்கு டிராப் செய்தார் பிரியங்கா காந்தி.

ராபர்ட் வத்ரா விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் தகவல் ஊடகங்களிடம் தீயாகப் பரவ, உடனடியாக அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு திடீரென வந்தார் பிரியங்கா.

அங்கு ஏற்கனவே ராகுல் காந்தி துணைத் தலைவராக இருந்தபோது அவருக்கான அலுவலகம் பிரியங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அலுவலகத்தில் சென்று தனது இருக்கையில் அமர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார் பிரியங்கா காந்தி.

”வத்ரா முதன் முறையாக விசாரணைக்கு ஆஜராகியிருக்கும் செய்தி முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என்பதால்தான் நாளை பதவியேற்க இருந்த பிரியங்கா இன்றே திடீரென பொதுச் செயலாளர் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்பதிலேயே நன்றாக அரசியல் செய்திருக்கிறார் பிரியங்கா” என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

லக்னோவில் இருக்கும் உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான நேரு பவனில் இந்திரா காந்தி பயன்படுத்திய அறை இப்போது பிரியங்கா காந்திக்காகப் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி உத்திரப்பிரதேசம் செல்லும் பிரியங்கா காந்தி கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு, உடனடியாக தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் என்கிறார்கள் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

புதன் 6 பிப் 2019