மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

ஊழல் கண்காணிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

ஊழல் கண்காணிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து!

சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவைக் கூண்டோடு கலைக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஷெனாய்நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார். தனது வீட்டின் முன்புறம் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் வைத்திருந்த ஜெனரேட்டரை அகற்றக் கோரி சென்னை மாநகராட்சியில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்றும், அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பு வழங்கினார். அதில், சென்னை மாநகராட்சியில் ஊழல் கண்காணிப்புப் பிரிவைக் கூண்டோடு கலைத்துவிட்டு, அதற்குப் பதிலாக டிஜிபியுடன் கலந்தாலோசித்து புதிய அதிகாரிகளைக் கொண்டு ஊழல் கண்காணிப்புப் பிரிவு அமைக்க வேண்டும் என்பது உட்பட 15 வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்புப் பிரிவைக் கலைத்த உத்தரவையும், புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற உத்தரவையும் மட்டும் ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற வழிகாட்டுதல்களைப் படிப்படியாக நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிசன் பெஞ்ச், கடந்த நவம்பர் மாதம் தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்ட இரண்டு உத்தரவுகளுக்கு மட்டும் தடை விதித்தது. அது மட்டுமல்லாமல், மற்ற உத்தரவுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டது.

இன்று (பிப்ரவரி 6) இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் ஆஜரானார். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி ஜெனரேட்டர் இடமாற்றம் செய்துவிட்டதாகவும், அது தவிர 15 வழிகாட்டுதல் உத்தரவுகளில் 12 உத்தரவுகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார். மாநகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குக் கூடுதல் காவலர்களை ஒதுக்கக் கோரி டிஜிபிக்கு மாநகராட்சி ஆணையர் கடிதம் அனுப்பியுள்ளார் என்றும் கூறினார்.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “மாநகராட்சியில் எத்தனைப் பணியாளர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன? பணியாளர்கள் எப்படித் தேர்வு செய்யப்படுகின்றனர்?” என்ற கேள்விகளை எழுப்பினர். அதற்கு விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், “முதல் மற்றும் இரண்டாம் நிலை ஊழியர்களாக 650 பேரும், மூன்றாம் நிலையில் 499 பேரும், நான்காம் நிலையில் 11,970 ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து நிலைகளிலும் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 6,590” என்று தெரிவித்தார். இவை மாநகராட்சியால் நேரடியாக நியமனம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மாநகராட்சிப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறையை நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் நடத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்குப் பரிந்துரைத்தனர் நீதிபதிகள். காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கோரிக்கையில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் இரண்டு மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும், இதற்குத் தேர்தல் நடைமுறை எவ்விதத்திலும் தடையாக இருக்காது என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

“தமிழகத்தைப் பொறுத்தவரை ஊழல் கண்காணிப்பு அமைப்புகள் முறையாக செயல்படத் தொடங்கினால் 80 சதவிகிதப் பிரச்சினைகள் தீர்ந்து விடும். தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளின் ஊழல் கண்காணிப்புப் பிரிவுகளில் பணிபுரிபவர்களைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அந்தந்த துறை சார்ந்த தலைவர்கள், முறையாக அதனைக் கண்காணிக்க வேண்டும். அந்தப் பிரிவில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் கண்காணிப்புப் பிரிவினரைக் கண்காணிப்பதற்கு இந்த நடைமுறை மட்டுமே போதுமானது” என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019