மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

நீ என்னவாகப் போகிறாய்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

நீ என்னவாகப் போகிறாய்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 17

‘எதிர்காலத்தில் நீ என்னவாக வர ஆசைப்படுகிறாய்?’

இந்தக் கேள்வியை ஒரு நபரிடம் அவரது 10 வயது, 15 வயது, 17 வயது, 21 வயது என்ற காலங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியான பதிலைக் கொடுப்பாரா என்பது சந்தேகமே. எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருடைய ஆர்வத்தில் மாற்றம் ஏற்படலாம், திறமை வெளிப்படலாம். அடிப்படையில் நம் திறமையை அஸ்திவாரமாக்கி நமக்கான ஆசை, ஆர்வம், நோக்கம் இவற்றின் மீதான பார்வையை இந்தக் காலகட்டங்களில் நாம் மாற்றிக் கொள்ளலாம். அதற்கான கல்வியும் பயிற்சியும் இன்னபிற வசதிகளும் இன்று நிறையவே உள்ளன.

இத்தனை சுலபமான ஐந்து வார்த்தை கேள்விக்குப் பதில் அத்தனை சுலபமல்ல. ஆனாலும் நம் கண்களில் எதிர்படும் குழந்தைகளிடம் தவறாமல் கேட்கும் கேள்வியும் இதுவே. டாக்டர், இன்ஜினீயர், ஆடிட்டர், வக்கீல், ஓவியர், போலீஸ், ஆசிரியர், நடிகர், நடிகை என விதவிதமான கனவுகளுடன் பதில் சொல்லும் சிறுவர்களைப் பார்க்கும்போது ஆசையாகத்தான் இருக்கும்.

10 வயது வரையுள்ள சிறுவர்கள் தங்களுக்குத் தோன்றியதைச் சொல்வார்கள். பெரும்பாலும் தாங்கள் பார்க்கும் சினிமாவில் வரும் கேரக்டர், தினமும் பள்ளியில் பார்க்கும் ஆசிரியர், தன் அப்பா அம்மா செய்து வரும் பணி இவை சார்ந்தே அவர்களின் பதில் அமையும். ‘டீச்சராகப் போகிறேன்…’ என வீட்டில் கையில் குச்சியுடன் சுவரை கரும்பலகையாக்கி டீச்சர் விளையாட்டு விளையாடும் குழந்தைகளைப் பார்த்திருப்போம்.

ஐடியில் பணிபுரியும் பெற்றோரின் குழந்தை தானும் ஐடியில்தான் வேலைக்குப் போகப் போகிறேன் என்று சொல்லும். டாக்டரின் குழந்தை டாக்டர் என்றும், வக்கீலின் குழந்தை வக்கீல் என்றும், இன்ஜினீயரின் குழந்தை இன்ஜினீயர் என்றும் உடனடியாக பதில் சொல்லும். ஆனால் எதிர்காலத்தில் அது அவர்களின் பணியாக இருக்காது. ஏனெனில் கேட்கப்படும் கேள்வியின் அர்த்தமே புரியாத வயதில் விளையாட்டாகவே பதில் சொல்வார்கள்.

ஓர் உறவினரின் எட்டு வயது மகள் சொன்ன பதிலைக் கேளுங்கள். ‘நான் பெரியவள் ஆனதும் காலையில் எழுந்திருப்பேன். எல்லோருக்கும் காபி போட்டுத் தருவேன். காய்கறி நறுக்கி சமைப்பேன். குழந்தைகளுக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவேன். அவர்களைப் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்வேன். திரும்பி மாலை பள்ளியில் இருந்து அழைத்து வருவேன். இரவுக்கு டின்னர் செய்வேன். அப்புறம் எல்லோரும் தூங்கினதுக்குப் பிறகு தூங்கிடுவேன்…’

இந்தப் பதில் அவள் மனதில் இருந்து வருவதல்ல. அவளுடைய அம்மாவின் நித்திய வேலைகளைப் பார்த்துப் பழகிய கண்கள் படம்பிடித்த பதில். 15 வயதில் பத்தாம் வகுப்பில் இருப்பார்கள். இந்தக் கேள்விக்கான பதிலை ‘ஓரளவுக்காவது’ சரியாகச் சொல்லக்கூடிய அளவுக்கு மாணவர்கள் தங்கள் திறமையைக் கண்டறிந்திருக்க வேண்டும் அல்லது எதில் ஆர்வம் உள்ளது என்பதையாவது உணர்ந்திருக்க வேண்டும்.

அடுத்து வரும் இரண்டு வருடங்கள் 16, 17 வயதில் +1 & +2 வகுப்பில் இருப்பார்கள். இந்த வயதில் மேலே கேட்ட கேள்விக்கான பதிலில் கொஞ்சமாவது தெளிவிருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் திறமை அல்லது ஆர்வத்துக்கு ஏற்ற ஒரு துறையை தேர்ந்தெடுக்க முடியும். அதற்கடுத்து வரும் காலகட்டம்தான் அவர்கள் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கும். +2 முடித்து கல்லூரிக்குள் கனவுகளுடன் நுழையும் வயது.

மேலே கேட்ட கேள்விக்கான பதிலில் ‘நிறையவே தெளிவிருக்க’ வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. அவர்களுக்கு எந்தத் துறை பிடிக்கிறது என யோசித்து அதில் நுழைய வாய்ப்பிருக்கிறது. +2வில் தேர்ந்தெடுத்தத் துறை தங்களுக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்த எத்தனையோ மாணவர்கள் கல்லூரியில் வேறு துறை எடுத்து அதில் ஜெயித்திருக்கிறார்கள். +2-வில் தனக்கு அக்கவுண்ட்ஸ் பிடித்திருக்கிறது என்று நினைத்து அதில் சேர்ந்துவிட்டு தட்டுத்தடுமாறி அதை முடித்திருப்பவர்கள் கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ கூட சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

கற்போம்… கற்பிப்போம்!

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ் டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர். M.Sc., Computer Science, M.B.A பட்டங்கள் பெற்றவர். தொழில்நுட்பம், வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது சாஃப்ட்வேர், அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாக உள்ளன. இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019