மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர விரும்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 6) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து கே.எஸ்.அழகிரி வாழ்த்து பெற்றார். இவருடன் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களும் வாழ்த்து பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தொகுதி பங்கீடு, எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது உள்ளிட்டவை முடிவு செய்யப்படும். தமிழகத்தில் இந்த மாதம் ராகுல் காந்தி இரண்டு கூட்டங்களில் கலந்துகொள்கிறார். ஒரு கூட்டத்தில் பிரியங்கா காந்தியும் பங்கேற்கிறார்” என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் பாமகவையோ, கமல்ஹாசன் கட்சியையோ அழைத்துவரும் திட்டம் காங்கிரஸுக்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு, “எங்களுடைய கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேர விரும்புகின்றன. இதுதொடர்பாக திமுக தலைமையும் எங்களுடைய கட்சித் தலைமையும் கூடி முடிவெடுக்கும். எத்தனை பேர் மக்களவை உறுப்பினர்கள், எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை விட மத்திய அரசை தூக்கி ஏறிய வேண்டும் என்பதுதான் எங்கள் கூட்டணியின் நோக்கம். ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்காக வருத்தம் வரக்கூடிய அளவுக்கு கூட்டணி கட்சிகள் நடந்துகொள்ளாது” என்று பதிலளித்தார்.

காங்கிரஸ் சார்பில் யாருக்கு வாய்ப்புள்ளதோ அவர்கள் போட்டியிடுவர் என்று குறிப்பிட்ட அழகிரி, “பாஜக-அதிமுக கூட்டணியே அல்ல, எனவே அதனைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதனை ஆணவத்தில் நான் சொல்லவில்லை. பாஜக கூட்டணியை தம்பிதுரை கடுமையாக எதிர்த்துவருகிறார். தமிழகத்திற்கு எதுவும் செய்யாத பாஜகவுடன் கூட்டணியா என்று நாங்கள் கேட்கவில்லை, அதிமுகவினரே கேட்கிறார்கள். எனவே அந்தக் கூட்டணி அமைந்தாலும் மேலெழும்பாது. எங்களுக்குப் போட்டி அதிமுகதான்” என்றும் தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லீம் லீக் ஆகியவை இடம்பெறவுள்ள நிலையில், மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர விரும்புவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019