மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

கடன் விவகாரத்தில் ஆந்திர தொழிலதிபர் கொலை!

கடன் விவகாரத்தில் ஆந்திர தொழிலதிபர் கொலை!

ஆந்திர தொழிலதிபர் மரணம் தொடர்பான வழக்கில், வாட்ஸ்அப்பில் பெண் பெயரில் தொடர்புகொண்டு வரவழைத்து அவரைக் கொலை செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்திலுள்ள கோஸ்டல் வங்கியின் இயக்குநராகவும், எக்ஸ்பிரஸ் தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகியாகவும் பதவி வகித்தவர் ஜெயராம் சிகுருபதி. வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலதிபர்களில் ஒருவரான ஜெயராம், கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று மரணமடைந்தார். கிருஷ்ணா மாவட்டம் நந்திகாமா மந்தல் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரின் பின்பக்க இருக்கையில் அவரது பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தை ஏற்படுத்திய ஜெயராம் மரணம் தொடர்பாக, கிருஷ்ணா மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜெயராம் காரினுள் கிடந்த மது பாட்டில்களை மையமாகக் கொண்டு விசாரணை முடுக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக ஜெயராம் அலுவலக ஊழியர்கள், உறவினர்கள் போலீசாரால் விசாரிக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 5) ஜெயராமைக் கொலை செய்ததாகச் செய்தியாளர்கள் முன்னிலையில் இரண்டு பேரை அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சர்வஸ்ரேஷ்ட் திரிபாதி. 4 கோடி ரூபாய் கடனுக்காக இடைத்தரகர் ராகேஷ் ரெட்டி மற்றும் அவரது வாகன ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஜெயராமைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டினார்.

சில மாதங்களுக்கு முன்னர் கடனாகக் கொடுத்த 4 கோடி ரூபாயை ராகேஷ் ஜெயராமிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றிய ஜெயராம் அவரது செல்போன் எண்ணை பிளாக் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், ஜெயராமை ஏமாற்றும் வகையில் பெண் பெயரில் வாட்ஸ்அப் கணக்கொன்றைத் தொடங்கித் தொடர்பு கொண்டார். அந்த வாட்ஸ்அப் எண்ணில் இருந்து ஜெயராமை ஜூபிலி ஹில்ஸ் பகுதிக்கு வரவழைத்த ராகேஷ், தனது ஓட்டுநர் ஸ்ரீனிவாஸைக் கொண்டு ஜெயராமைப் பணம் கேட்டு சித்திரவதை செய்தார். அப்போது தலையில் அடிபட்டு அவர் இறந்ததாக, போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

நந்திகாமாவில் உள்ள கடையொன்றில் ஜெயராம் மது பாட்டில்கள் வாங்கியது, ஹைதராபாத்-விஜயவாடா சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் அவரது கார் கடந்துபோனது தொடர்பான சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு கொலையாளிகளைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தார் திரிபாதி.

கொலை நடந்த பிறகு நல்லகுண்டா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு, இப்ராகிம்பட்டணம் துணை ஆணையர் மல்ல ரெட்டி ஆகியோரிடம் ஆலோசனை கேட்டதாகவும், அவர்கள் சொன்னபடியே நந்திகாமாவில் ஜெயராமின் காரை நிறுத்தியதாகவும் ராகேஷ் கூறியதாகத் தெரிவித்தார் திரிபாதி. “இது தொடர்பாக ராகேஷ் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதுவரை அவர்களது பங்கு பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை” என்றார். ஆனால், சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் இதனை மறுத்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கை ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ஜெயராமின் மனைவி பத்மஸ்ரீ. “ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் கொலை நடந்துள்ளதால், இந்த வழக்கை ஹைதராபாத்துக்கு மாற்ற வேண்டும். எங்களது உறவினர் ஷிகா சவுத்ரி எனது வீட்டிலும், வாழ்க்கையிலும் நுழைந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், விலையுயர்ந்த பொருட்கள் காணாமல் போயுள்ளன” என்று புகார் தெரிவித்திருக்கிறார்.

ஷிகா சவுத்ரியின் நண்பர் என்ற வகையிலேயே ஜெயராமுக்கு ராகேஷ் அறிமுகமானதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த கொலையில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடர்வதாகத் தெரிவித்துள்ளார் திரிபாதி.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019