மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை: கமல்ஹாசன்

வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அதனை வளர்த்தெடுக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மக்களவை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார். மேலும் பிரதான கட்சிகள் கூட்டணிக்கு அழைத்துள்ளன என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் இன்று (பிப்ரவரி 6) கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூட்டணி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதனை கேள்வி-பதில் வடிவில் பின்வருமாறு காண்போம்.

மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா?

நாங்கள் தனித்தே போட்டியிடுவோம். அதில் உறுதியாகவும் உள்ளோம்.

உங்களால் தனித்துப் போட்டியிட முடியுமா?

இது சாத்தியம்தான். ஆனாலும் நாங்கள் கூட்டணிக்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய்ந்துதான் வருகிறோம். கூட்டணி அமைப்பதால் எங்களின் வலிமை பெருகுமானால் வெற்றிபெறுவதற்கு உறுதியான வாய்ப்பிருந்தால் சரியான கூட்டணியை அமைப்போம். ஆனால், நாங்கள் யாரையும் தூக்கிச் சுமக்க விரும்பவில்லை. கூட்டணியால் எங்களுக்கு கறை படியக் கூடாது.

காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பேசுகிறீர்களா?

நாங்கள் எங்களுடைய சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளோம். திமுக மற்றும் அதிமுகவுடனும் கூட்டணி சேர மாட்டீர்களா என்று நீங்கள் கேட்கலாம். உறுதியாக சேரமாட்டோம்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உங்களை இணையச் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

இது எனது மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு. தமிழ்நாடுதான் எங்கள் கவனமாக உள்ளது. தொகுதிப் பங்கீடு போன்ற விஷயங்களுக்காக அதை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.

திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்காமல் தனித்துப் போட்டியிடுவீர்கள் அப்படித்தானே?

தனித்துப் போட்டியிடவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள மாட்டோம். நாங்கள் பொய் சொல்ல விரும்பவில்லை. அதற்குப் பின் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்று பயப்படுகிறோம்.

மக்கள் நீதி மய்யம் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுமா?

ஆம், அதற்கான பணிகளை மேற்கொண்டுவருகிறோம்.

எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கணித்துள்ளீர்களா?

எங்களிடம் வெற்றிப் பட்டியல் இல்லை, செயல்திட்டம் இருக்கிறது. அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் தூய்மையானவர் என்று அக்கட்சியினர் கூறுகின்றனர். அதனை நான் ஒப்புக்கொள்ளவில்லை. இவர்களுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. நேரில் பார்க்கும்போது இருவரும் கைகுலுக்கி நலன் விசாரித்துக்கொள்வோம்.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019