மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

இஸ்லாமியர் - கிறிஸ்துவர்: உடன்பிறப்புகளாக்கும் வரலாற்று ஒப்பந்தம்!

இஸ்லாமியர் - கிறிஸ்துவர்:  உடன்பிறப்புகளாக்கும்  வரலாற்று ஒப்பந்தம்!

வாடிகன் வரலாற்றிலும் வளைகுடா வரலாற்றிலும் போப் ஒருவர் அபுதாபிக்குப் பயணம் செய்திருப்பது இதுவே முதன்முறை. பிப்ரவரி 3ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபிக்குச் சென்றார் போப் பிரான்சிஸ். இந்தப் பயணத்தில் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கையெழுத்தாகியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பிறப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி அபுதாபியின் பெரிய மசூதியையும் அம்மசூதியிலுள்ள, அமீரகத் தந்தை என அழைக்கப்படும் ஷேக் சயத் சமாதியையும் பார்வையிட்டார் போப். அங்கே பேசிய போப், “மதம், வன்முறை மற்றும் போரை எதிர்க்க வேண்டும். கல்வியும், நீதியும் அமைதிக்கு இரு இறக்கைகள். குடிமக்களுக்கு இடையே நிலவும் சமத்துவம், சமய உரிமைக்கு உறுதியளிக்கும். அமைதி, மதங்களுக்கிடையே உரையாடல் மற்றும் சமய சுதந்திரத்துக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில்தான் கிறிஸ்துவர்களின் உலகத் தலைவர் போப்பும் எகிப்தில் அல் அசார் பல்கலைக்கழகத்தின் தலைமை முஸ்லிம் குருவான பேராசிரியர் ஷேக் அஹ்மத் இல் தாயேப்பும் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். உலக அமைதிக்கும், ஒன்றிணைந்து வாழ்வதற்கும், மனித உடன்பிறந்த நிலை என்ற தலைப்பில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணம் ஒன்றில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இதுபற்றி போப் பிரான்சிஸ் தனது ட்விட்டரில், “இந்நாளில் எனது சகோதரரும் இஸ்லாமிய குருவுமான அல் தாயேப்பு உடன் இன்று நான் கையெழுத்திட்டுள்ள மனித உடன்பிறந்த நிலை ஆவணம், கடவுளிலும் மனித உடன்பிறந்த நிலையிலும் நம்பிக்கை வைத்துள்ள அனைவரையும், ஒன்றிணைப்புக்கும், ஒன்றுசேர்ந்து பணியாற்றுவதற்கும் அழைப்பு விடுக்கிறது. ஜெபம், இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறது. இதயத்தின் ஜெபம், மனித உடன்பிறந்த நிலையைக் காக்கிறது” என்று கூறியுள்ளார் போப் பிரான்சிஸ்.

உலகத்தின் அமெரிக்க உள்ளிட்ட பல கிறிஸ்துவ நாடுகள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதான போரில் அப்பாவி இஸ்லாமியர்களைக் கொலை செய்து வரும் வேளையில் இந்த ஒப்பந்தமானது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் பணியாற்றும் கிறிஸ்துவ ஆயர் ஜியார்ஜஸ் கூறும்போது, “அடிப்படைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் விலக்கி வாழ, இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது. போர்களுக்கும், வன்முறைக்கும், கிறிஸ்தவமும், இஸ்லாமும் துணை போகாது என்பதை, போப் பிரான்சிஸும், இஸ்லாமிய தலைமை குரு அல் தாயேப்பும், இந்த ஒப்பந்தத்தின் வழியே, உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மேலும், அரேபிய நாடுகளில் முதன்முறையாக பொதுவான ஓரிடத்தில் கத்தோலிக்க வழிபாட்டு முறையில் திருப்பலி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது, மத வழிபாட்டுக்கு இவ்வுலகம் வழங்க வேண்டிய உரிமையை நிலைநாட்டுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். போப் பிரான்சிஸின் இந்தப் பயணம் சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் பற்றி வாடிகன் வெளியிட்டிருக்கும் செய்தியில், “கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே நிலவும் உறவுகளை வெளிப்படுத்துவதாக மட்டுமல்லாமல், இஸ்லாமிய உலகத்துக்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ள ஆவணமாக இந்த ஒப்பந்தம் அமைந்திருக்கிறது.

உரையாடலின் முக்கியத்துவம், கடவுளின் பெயரால் ஆற்றப்படும் பயங்கரவாதம் மற்றும் அனைத்துவிதமான வன்முறைகளைப் புறக்கணித்தல், பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கு ஆதரவு, இயற்கையை மதித்தல் உட்பட பல கொள்கைகளுக்கு, இந்த ஆவணத்தில் இவ்விரு தலைவர்களும் இசைவு தெரிவித்துள்ளனர். மத நம்பிக்கை பற்றிச் சொல்லப்பட்டுள்ள இந்த ஆவணப் பகுதியில், ஒரு மத நம்பிக்கையாளர், மற்ற நம்பிக்கையாளரை, சகோதரர் அல்லது சகோதரியாக நோக்கி, ஒருவர் ஒருவருக்கு ஆதரவும் அன்பும் காட்டுவதற்கு, சமய நம்பிக்கை இட்டுச் செல்கின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், போரை, காழ்ப்புணர்வு எண்ணங்களை, வெறுப்பை, தீவிரவாதத்தை, மதம், ஒருபோதும் தூண்டக் கூடாது. வன்முறை அல்லது ரத்தம் சிந்துதலையும் மதம் தூண்டக் கூடாது. மேலும், சுதந்திரம் ஒவ்வொரு மனிதரின் உரிமையாகும். அதேநேரம், ஒரு மதத்தினர், மற்றொரு மதத்தை அல்லது கலாச்சாரத்தைத் தழுவ வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படக் கூடாது. கல்வி, மற்றும் வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு பெண்களுக்குரிய உரிமை, தங்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் செயல்படுத்துவதற்குரிய உரிமையை அங்கீகரித்தல் ஆகியவை முக்கியம் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

ஓர் உலகப் போர் துண்டு துண்டாக இடம்பெற்று வருகிறது என ஏற்கனவே கூறியுள்ள போப், இந்தப் பயணம் மற்றும் இந்த ஆவணத்தில் கையெழுத்திட்டதன் வழியாக, தனக்கு முந்தைய போப்புகள் அமைத்துள்ள பாதையில் ஓர் அடி முன்னோக்கி எடுத்து வைத்துள்ளார்.

1986ஆம் ஆண்டில் அசிசி நகரில், அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் தலைமையேற்று நடத்திய, பன்னாட்டு பல்சமய கூட்டத்தில், அமைதி, நல்லிணக்கம், உடன்பிறந்த நிலை ஆகியவற்றை ஊக்குவிப்பதில் மதங்களுக்குள்ள முக்கிய பங்கு வலியுறுத்தப்பட்டது. இதே பாதையை முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட்டும் எடுத்தார். வன்முறை, பயங்கரவாதம் மற்றும் மனிதர்களைக் கொலை செய்வதற்கு, கடவுளின் பெயர் பயன்படுத்தப்படுவதையும், அவற்றுக்கு மதம் சார்ந்த நியாயங்கள் சொல்லப்படுவதையும் அகற்றுவதற்கு போப்புகள் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019