மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திமுக அணி ஏன் வேண்டாம்? அன்புமணியிடம் விளக்கிய ராமதாஸ்

திமுக அணி ஏன் வேண்டாம்? அன்புமணியிடம் விளக்கிய ராமதாஸ்

வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணிதான் என்ற முடிவை தனது பொதுக்குழுவில் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்ட பாமக, அதற்கு முன்பிருந்தே திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளோடு அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தைகளைத் துவக்கிவிட்டது.

இந்நிலையில் யாரோடு கூட்டணி வைப்பது என்ற அடிப்படையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட உரையாடல்களும் நிகழ்ந்திருக்கின்றன.

திமுகவோடு கூட்டணியே வேண்டாம் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அன்புமணியோ வர இருக்கிற தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணிதான் வெற்றிபெறும் என்ற நிலையில் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டுமா என்ற யோசனையில் இருக்கிறார். இதுபற்றி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் பற்றி பாமக மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசும்போது பல தகவல்கள் கிடைத்தன.

“திமுக எப்போதுமே பாமகவை மதிப்பதில்லை என்பதையும் அதுவும் குறிப்பாக இது கலைஞர் காலமல்ல, ஸ்டாலின் காலம் என்பதையும் சுட்டிக் காட்டி திமுக கூட்டணி வேண்டாம் என்று சொல்லி வருகிறார் டாக்டர் ராமதாஸ்.

‘கலைஞர் மறைந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய முயற்சித்த நிலையில் மெரினா நினைவிடம் தொடர்பாக ஏற்கனவே பாமக வழக்கறிஞர் பாலு தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. அப்போது கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு ஏதுவாக பாலு தனது வழக்கை வாபஸ் வாங்கிவிட்டார். பாலுவை வாபஸ் வாங்கச் சொன்னது நான் தான். ஆனால், ஸ்டாலின் எனக்கு நன்றி சொல்லாமல் பாலுவுக்கு மட்டுமே நன்றி சொன்னார்’ என்ற மனக்குறை ராமதாஸுக்கு இன்னும் இருக்கிறது.

மேலும், ஸ்டாலின் திமுக தலைவர் ஆனபிறகு தனக்கு வாழ்த்து சொன்ன பல தலைவர்களையும் நேராக சென்று சந்தித்து நன்றி கூறினார். ஆனால் வாழ்த்து சொன்ன தன்னைத் தேடி தைலாபுரம் வரவில்லை என்பதையும் அன்புமணியிடம் சுட்டிக் காட்டியிருக்கிறார் ராமதாஸ்.

அதையும் தாண்டி கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கும் கூட பாமகவை உரிய முறையில் அழைக்கவில்லை என்ற வருத்தம் ராமதாஸுக்கு இருக்கிறது. ‘நம்ம ஏ,கே.மூர்த்திக்கு போன் பண்ணி உங்களுக்கு எத்தனை பத்திரிகை வேணும்’ என திமுக தரப்பில் கேட்டிருக்கிறார்கள். அதற்கு மூர்த்தி உங்களுக்கு இஷ்டமிருந்தா டாக்டருக்கு கொடுங்க என சொல்லியிருக்கிறார். அதன் பின் ராமதாஸ் என்று எழுதி ஏ.கே.மூர்த்தியின் ஆபீசில் கலைஞர் சிலை திறப்பு விழா அழைப்பிதழைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்’ என்று திமுக தம்மை நடத்தும் விதம் பற்றி அன்புமணியிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ராமதாஸ்.

இப்படிப்பட்ட நிலையில் திமுகவோடு நம்மால் இணைந்து செயல்பட முடியாது என்று தெரிவித்த டாக்டர், ‘எம்,பி. தேர்தல்ல நாலு சீட்டு ஜெயிச்சா மத்திய அமைச்சர் ஆயிடலாம்னு நினைக்கிறியா? காங்கிரசை லேசா எடைபோடாதே. அன்னிக்கு நீ மத்திய அமைச்சர் ஆனதுக்கு தமிழகக் கூட்டணித் தலைவரா இருந்த கலைஞர் மூலமாக நாம கொடுத்த அழுத்தம்தான் காரணம். இன்னிக்கு அதே பிரஷரை நாம கொடுத்தாலும் ஸ்டாலின் நமக்காக காங்கிரஸ்கிட்ட பேசமாட்டார். அதனால மத்திய அமைச்சர்னு நாம கற்பனை பண்ணிக்கக் கூடாது’ என்று கூறியிருக்கிறார் ராமதாஸ்.

ஆனாலும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பலவீனங்கள் பற்றி அன்புமணி கேள்விகளை எழுப்ப அதை எதிர்கொண்ட ராமதாஸ், ‘நாம சட்டமன்றத் தேர்தல்ல அவங்களோட கூட்டணி வைக்கவில்லையே. நம்ம நோக்கம் சட்டமன்றத் தேர்தல்லதான். இப்ப திமுகவோட கூட்டணி வச்சா ஸ்டாலினை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக உன்னை களமிறக்க முடியுமா?’ என்று கேட்டு திமுக கூட்டணியில் இருக்கும் சிக்கல்களை எடுத்து வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்” என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில்.

கடைசியாக கிடைத்த தகவல்களின்படி அதிமுகவில் பாமகவுக்கு ஆறு எம்பி தொகுதிகள் ஒரு ராஜ்ய சபா மற்றும் தேர்தல் செலவுக்கான நிதி உள்ளிட்ட விஷயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறதாம். ஆனால் திமுக தரப்பில் 5+1 என்ற சீட்டுக்கு முதல் கட்ட அளவில் பேசினாலும் தேர்தல் நிதி என்ற பேச்சுக்கே திமுகவில் இடமில்லையாம்.

அதனால், அதிமுகவோடு கூட்டணி வைக்கலாம் என்பது அப்பாவின் எண்ணம். திமுகவோடு வைத்தால் என்ன என்பது மகனின் எண்ணம். இருவருக்கு இடையேயும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது!

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019