மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

தன்னாட்சி முழக்கம் காலத்தின் எதிரொலியா?

தன்னாட்சி முழக்கம் காலத்தின் எதிரொலியா?

தன்னாட்சி மாநாடு எழுப்பும் கேள்விகளும் முன்வைக்கும் கோரிக்கைகளும்

பியர்சன் லினேக்கர். ச.ரே

இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் மாநிலங்கள் இன்றைய சூழலில் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பது சாத்தியமா? அதற்காகப் போராட வேண்டிய தேவை இருக்கிறதா?

தன்னாட்சித் தமிழகம் என்னும் அமைப்பின் சார்பில் ‘தமிழ்த் தேசியத் தன்னாட்சியை வென்றெடுப்போம்’ என்ற முழக்கத்துடன் தன்னாட்சி மாநாடு நடைபெறும் என்னும் அறிவிப்பைக் கண்டதும் பலரது மனதில் எழுந்திருக்கக்கூடிய கேள்விகள் இவை.

சென்னை அண்ணா அரங்கத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியன்று முழு நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந்த மாநாடு இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வழங்கியதுடன், இவை தொடர்பான மேலும் பல சிந்தனைகளையும் கேள்விகளையும் அழுத்தமாக முன்வைத்தது.

அறிஞர் அண்ணாவின் 50ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்னும் அவரது கொள்கையை முன்னிறுத்தி, தற்காலச் சூழலில் அதன் தேவை குறித்தும், அதையொட்டிய தலைப்புகளின்கீழும் பேசத் தமிழகத்தின் பல்வேறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் அமைப்புகளும் மொழிப்போர்த் தியாகிகளும் மொழியுரிமை மாநில உரிமை சார்ந்து செயல்படும் வங்காளம், பஞ்சாப், மராட்டியம், கர்நாடகம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

மொழிப்போர் வீரர் இரா.இராமசாமி மாநாட்டின் கொடியேற்ற ஈகியர் நினைவுச் சுடரை எல்லைப் போராட்ட வீரர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஏற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருச்சி கே.சௌந்தரராஜன் அறிஞர் அண்ணாவின் படத்தைத் திறந்து வைத்து, அவரைப் போற்றும் முழக்கங்களுடன் மாநாட்டைத் தொடங்கி வைத்தார்கள்.

அரசியலமைப்பை மீளாய்வு செய்ய வேண்டிய தேவை

“அண்மையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ‘அரசியலமைப்பைக் காப்போம்’ என்ற மாநாடு, விசிக நடத்திய ‘தேசம் காப்போம்’ மாநாடு போன்றவை முடிந்திருக்கும் இந்தச் சூழலில் ‘தன்னாட்சித் தமிழகம்’ என்ற முழக்கத்துடன் கூடிய மாநாடு எதைச் சுட்டுகிறது, அது முரணா போன்ற கேள்விகள் நம்மில் எழுவது இயல்பு. அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கிற அடிப்படை உரிமைகளை நோக்கிப் போராடுகிற நோக்கத்தில் அமைந்துள்ள அவ்விரு மாநாடுகள் நடத்தப்பட வேண்டிய தேவையை, இன்றைய சூழல் நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதே நேரத்தில் அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு எவ்வளவு தூரம் சுயமாகச் செயல்படும் அளவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது என்ற கேள்வியை முன்வைப்போமாயின், அரசியலமைப்பை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய தேவையையும் அக்கேள்வி ஏற்படுத்துகிறது” என்று திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளரான ஆ.ராசா தெரிவித்தார்.

“இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் ரயில்வேயிலிருந்து வருமானவரித் துறைவரை அனைத்துத் துறைகளிலும், உயர் அதிகாரிகளிலிருந்து சிடி பிரிவுவரை தமிழர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு வடநாட்டவர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மத்திய அரசு. அண்மையில் நடந்த வருமானவரித் துறைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களில் ஒரு சதவிகிதம் மட்டுமே தென்னிந்தியர்களாக உள்ளனர். ஆனால் இங்கிருக்கும் மண்ணின் மைந்தர்கள் தொழிற்சங்கங்கள் அமைத்து தங்கள் உரிமைக்காகப் போராடும்போது அவர்களுக்கான உரிமையை மறுக்கிறது” என்று தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த வேல்முருகன்.

“இந்தியாவில் நடைபெறும் பெரும்பான்மையான தேர்வுகள் ஆங்கிலத்திலோ, இந்தியிலோதான் நடைபெறுகிறது. இந்தியையும் ஆங்கிலத்தையும் அறியாத தனது தாய்மொழியில் நல்ல அறிவு பெற்ற எந்த மாநில மக்களுக்கும் அது எதிராகத்தான் இருக்கும். ஆனால், எந்த மாநில நீதிமன்றமும் இந்த விஷயத்தில் தலையிடாது. பிற மாநிலங்களில் இது போன்ற குரல்களைப் பிரிவினைவாதிகள் என்றும், இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்றும் அடையாளப்படுத்தி ஒடுக்குமுறைக்குள்ளாக்குவார்கள். ஆனால், பிற மாநிலங்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்தைச் சார்ந்தவர்களும் இணைந்து தங்களுக்கான உரிமைக்குரலைப் பதிவு செய்வதற்கான பரந்த வெளியை இம்மாநாடு உருவாக்கியுள்ளது” என்று பதிவுசெய்தார் வழக்கறிஞர் அருள்மொழி.

“கல்வியிலிருந்து மருத்துவம்வரை நீரிலிருந்து காற்றுவரை அனைத்தும் வர்த்தகமயமாக்கப்பட்டுவிட்டது. அவர்கள் வெறும் லாப நோக்கத்துடன் மட்டுமே செயல்படுகின்றனர். மக்கள் வாக்கின் மூலமாக அரசுக்கு அளித்த இறையாண்மையை, வேலைவாய்ப்பு உற்பத்திப் பெருக்கம் என்ற பெயரில் பெரும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு தாரைவார்த்துக் கொடுக்கிறது. இயற்கை மக்களுக்கானது, மக்கள் வாழ்வதற்கானது. இயற்கையின் அமைப்பைக் காப்பாற்றி அதனோடு இசைந்து வாழ்வது. இயற்கையைக் காப்பதற்கான அனைத்து சட்டங்களையும் இயற்றி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்” என்றார் தமிழர் தேசிய முன்னணியைச் சார்ந்த க.அய்யநாதன்.

‘தமிழகப் பொருளாதாரம்: பார்வைகள்’ என்ற தலைப்பில் மதுரையில் தொழில் நிறுவனம் நடத்தும் இரா.சிவராஜா கூறியதாவது: “நாம் எவ்வளவுக்கெவ்வளவு அரசியல் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் பேசுகிறோமோ அதே அளவு பொருளாதார முன்னேற்றம் பற்றியும் பேச வேண்டும். ஒரு பெரும் தனியார் நிறுவனத்தால் அனைவருக்குமான வேலையை உறுதிபடுத்திவிட முடியாது. அதுபோல அரசாலும் அனைவருக்குமான வேலையை உறுதிப்படுத்த முடியாது. இதற்கு ஒரே தீர்வு, சிறு குறு தொழில்முனைவோர்களை உருவாக்கி அவர்களது வளர்ச்சிக்குப் பங்காற்றுவதுதான்” என்று தனது பார்வையை முன்வைத்தார்.

“மருத்துவம், ஆரம்பக் கல்வி, உயர்கல்வி, தொழிற்சாலைகள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல் நிலையில் உள்ளது. இந்திய அரசாங்கத்தின் புள்ளியில் துறையிலிருந்துதான் இந்தத் தரவுகள் எடுக்கப்பட்டன. இதற்குக் காரணம் இங்கு பேசப்பட்ட இட ஒதுக்கீடும் மாநில சுயாட்சியும்தான். அதற்கு முக்கியக் காரணகர்த்தா அண்ணாதான்” என்றார் தொழில்நிறுவனரான சுரேஷ் சம்பந்தம்.

உலக அரங்கில் தமிழ்

உலக அரங்கில் தமிழர்கள் என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் விஜய் அசோகன், பல முக்கியமான தகவல்களை முன்வைத்தார்.

“நார்வே நாட்டின் மேல்நிலைப் பள்ளிகளில் அங்கு பயிலும் மாணவர்கள் ஒரு சர்வதேச மொழியைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். அதில் தமிழும் ஒன்று. தமிழ் மொழியில் எடுக்கும் மதிப்பெண்ணை அவர்களது மருத்துவக் கூட்டுத் தொகையில் சேர்த்துக்கொள்ளலாம். ஸ்வீடனில் இன்னும் ஒரு படி மேலே – அங்கு தமிழர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தாலும், அவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே ஆறிலிருந்து பத்தாம் வகுப்புவரை பயிலலாம். அதிலெடுக்கும் மதிப்பெண்ணைக் கொண்டு உயர்நிலைக் கல்வியைப் பயிலும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது” என்று சொன்னவர் தமிழகத்தில் தமிழ் படிக்காமல் பள்ளிக் கல்வியையும் தாண்ட முடியும், உயர் கல்வியையும் தாண்ட முடியும் என்னும் நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

“தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும். காரணம், புவியியல் ரீதியாக நாம் இந்தியப் பெருங்கடலோடு தொடர்பு கொண்டிருப்பதால் இந்தியா வெளியுறவுக் கொள்கையில் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தமிழகத்தைப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் எடுக்கப்படும் வெளியுறவுக் கொள்கை முடிவுகளுடன் முரண்பட மைய நாடுகளிலுள்ள மாகாணங்களுக்குத் தனியுரிமை உண்டு. பாதுகாப்பு தொடர்பாகத் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரமும் அம்மாகாணங்களுக்கு உண்டு. ஜனநாயகமற்ற நாடாகக் கருதப்படும் சீனாவிலும்கூட மாகாணங்களுக்கான உரிமை அதிகம்” என்று விஜய் அசோகன் கூறினார்.

இதே தலைப்பின்கீழ் மேலும் பல தகவல்களை வழங்கினார் நாம் தமிழர் கட்சியின் ஐநா ஒருங்கிணைப்பாளர் ஜீவா.

மாநில உரிமைகளை மீட்டெடுக்க…

பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் கூட்டாட்சி அரங்கு என்ற தலைப்பில் பேசினார்கள். “பாஜகவுக்கு முன்னதாகவே மாநில கூட்டாட்சியை நசுக்கியதில் காங்கிரஸுக்கு முக்கியப் பங்குள்ளது. மகாராஷ்டிரத்தில் சிவசேனாவாக இருந்தாலும் பஞ்சாபில் அகாலி தளமாக இருந்தாலும் தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவாக இருந்தாலும் மாநில உரிமைகள் சார்ந்த பார்வையில் இவர்களுடன் மட்டுமே நின்றுவிட முடியாது. இவர்களைத் தாண்டிய பார்வையும் தேவை. ஒருபோதும் இவர்களுக்குக் காலாட் படையாக மாறிவிடக் கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட மாநிலக் கட்சிகளோடு பரந்த கூட்டணியை உருவாக்கி அதனடிப்படையில் செயல்பட வேண்டும்” என்றார் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த முனைவர் தீபக் பவார்.

வங்காளத்தைச் சேர்ந்த முனைவர் கோர்கோ சாட்டர்ஜி, பஞ்சாபைச் சார்ந்த முனைவர் ஜோகா சிங், கர்நாடகத்தைச் சார்ந்த மொழியுரிமையாளர் ஆனந்த்.ஜி ஆகியோரும் இது குறித்த தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அண்ணாவின் நாடகமான ‘நீதிதேவன் மயக்கம்’ அரங்கேற்றப்பட்டு, பலரது பாராட்டுகளையும் பெற்றது. தங்களது மாணவப் பருவத்திலும் இளைஞர் பருவத்திலும் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடிய மொழிப்போர் தியாகிகளுக்கு இரட்டைமலை சீனிவாசனின் பெயர்த்தியான ரேவதி நாகராஜனும் ஆனைமுத்து பெயர்த்தியான ஆசுபள் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சார்ந்த கே.பாலகிருஷ்ணன், கே.எம்.சரீப் தமிழ்த் தேசியக் கருத்தியலின் மிக முக்கிய முகமான தோழர் தியாகு ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் இறுதியாக உரை நிகழ்த்திய விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் “இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆழி செந்தில்நாதன் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர். தன்னாட்சித் தமிழகம் என்ற கருத்தியலில் விசிகவும் உடன்படுகிறது. தமிழ்த் தேசிய விடுதலை என்ற கருத்துக்கு முன் நிபந்தனையாக சனாதன ஒழிப்பே அடிப்படையாக இருத்தல் வேண்டும். மாநில உரிமைகளைக் குறைத்து பாசிசப் போக்கை மத்தியில் ஆளும் பாஜக கையாள்கிறது. மாநில சுயாட்சியைப் பேசும் பிதாமகனான அண்ணாவின் நினைவு நாளன்று இக்கூட்டம் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது” என்றார்.

இந்த மாநாட்டில் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள், முன்வைக்கப்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடைய கருத்துகள் ஆகியவற்றைக் கேட்கும்போது, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை மாநிலத்துக்கான உரிமைகள், அதிகாரங்கள் படிப்படியாக குறைக்கப்பட்டே வந்துள்ளதை அறிய முடிகிறது. இந்திய ஒன்றியம் உருவானதே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில்தான் என்றும், மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பதென்பது இந்தக் கோட்பாட்டுக்கே எதிரானது என்றும் மாநாட்டில் குரல் எழுப்பப்பட்டது. இதற்கு எதிராக மாநிலங்கள் அனைத்துமே குரலெழுப்ப வேண்டிய காலம் இது என்ற கோரிக்கையே மாநாட்டின் ஆதார சுருதியாக ஒலித்தது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

புதன் 6 பிப் 2019