மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 6 பிப் 2019

திருநங்கைகள் பற்றிய பிம்பத்தை உடைத்த ‘பேரன்பு’

திருநங்கைகள் பற்றிய பிம்பத்தை உடைத்த ‘பேரன்பு’

ராம் இயக்கத்தில் மம்முட்டி, சாதனா, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள பேரன்பு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றியும் அவர்களைப் பராமரிப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் பேரன்பு படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் படக்குழுவினருக்கு கூகை திரைப்பட இயக்கம் சார்பில் பாராட்டு விழா பிப்ரவரி 4ஆம் தேதி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ராம், பா.இரஞ்சித், லெனின் பாரதி, மீரா கதிரவன், ஸ்ரீ கணேஷ், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராம் பேசுகையில், “பேரன்பு திரைப்படத்தை ஒரு மாற்று சினிமாவாக நினைத்து நான் எடுக்கவில்லை. அதை ஒரு 'மெயின்ஸ்ட்ரீம்' சினிமாவாகத் தான் எடுத்தேன். நான் மட்டுமல்ல, இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் அப்படி நினைத்துத்தான் தயாரித்தார். நல்ல படங்களை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகி இருக்கிறது. பேரன்பு திரைப்படத்தைக் கொண்டாடுவதற்காக என்னுடைய மற்ற மூன்று படங்களுடன் ஒப்பிடுவதை நான் விரும்பவில்லை. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. கேரளாவில் கொச்சி நகரில் 1,200 சீட்டுகள் வசதி கொண்ட ஈவிஎம் கவிதா திரையரங்கில் பல வருடங்களுக்குப்பின் பேரன்பு மூலம் 'ஹவுஸ்ஃபுல்' போர்டு வைத்திருக்கிறார்கள்.

அதேபோல கோயம்புத்தூரில் நான் சென்ற இடங்களில் எல்லாம் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். கற்றது தமிழ் படம் முதலாகவே விமர்சகர்கள் என் படங்களை புரிந்து கொள்வதைவிட, மக்கள் நன்றாகவே புரிந்து கொள்கிறார்கள். எல்லோரும் ராம் பத்து வருடத்தில் நான்கு படங்களை மட்டுமே எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகப் பேசுகிறார்கள், உண்மையில் நான் கஷ்டப்படவே இல்லை. நான் பிறக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன்.

இந்த சினிமாவுக்காக நான் எதையுமே இழக்கவில்லை. என் மகிழ்ச்சியை, என் கொண்டாட்டத்தை இழக்காமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கேரளாவில் 'பேரன்பு' திரைப்படத்தைப் பற்றி பெரிதாகப் பேசுகிறார்கள் என்றால், அங்கு மெகா ஸ்டார் மம்முட்டி இருக்கிறார். அவரால் படம் குறித்த தகவல் வேகமாகப் பரவுகிறது, மக்கள் வருகிறார்கள். கற்றது தமிழ் இப்போது வரை மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. அதைப் போல பேரன்பு திரைப்படமும் மக்களைச் சென்று சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இயக்குநர் பா.இரஞ்சித் பேசும் போது, “ஒரு திரைப்படம் வெளியான மூன்றாவது நாளில் இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரே மேடையில் இருப்பது செம சூப்பரான ஒரு விஷயம். அதுவும் பி.எல்.தேனப்பன் மாதிரியான கமர்ஷியலாக யோசிக்கக் கூடிய ஒரு தயாரிப்பாளர் பேரன்பு திரைப்படத்தை தயாரித்தது உண்மையிலேயே பெரிய விஷயம். ராம் சார், பி.எல்.தேனப்பன் இந்த காம்பினேஷன் எப்படி அமைந்தது என்றே யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ராம் சார் கமர்ஷியலாக பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்கிற ஆசை இருந்தது. அந்த ஆசையை தரமணி திரைப்படம் நிறைவேற்றியது. இப்போது பேரன்பு திரைப்படமும் கமர்ஷியலாக பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

பேரன்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெளியே வந்து ராம் சாரை கட்டிப் பிடித்துக் கொண்டேன். உண்மையிலேயே பேரன்பு திரைப்படம் சரியாகத் திட்டமிடப்பட்டு, சரியாக எடுக்கப்பட்டு, சரியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இந்தப் படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சாதனாவின் நடிப்பு மிக அற்புதமாக இருந்தது. எந்த இடத்திலுமே நடிப்பு என்பது அல்லாமல் மிக இயல்பாக இருந்தது அவருடைய நடிப்பு. மம்முட்டி சாரும் மிக இயல்பாக நடித்து, அசத்தி இருக்கிறார். பேரன்பு திரைப்படத்தின் முக்கியமான பலமாக நான் பார்ப்பது ஒளிப்பதிவைத் தான்.

நம் வாழ்வின் மிக அற்புதமான தருணங்கள் எந்தப் பூச்சும் இல்லாமல் மிக எளிமையானவையாகத் தான் கடந்து போயிருக்கும். இதுவரையில் அப்படியான தருணங்களை யாரும் படம்பிடித்து நான் பார்த்ததே இல்லை. ஆனால், அந்த அற்புமான தருணங்களை அதன் எளிமையான தன்மையோடு படம் பிடித்து காட்சிப் படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவருக்கு மிகப்பெரிய பாராட்டுகளும், வாழ்த்துகளும். அடுத்தது யுவன் சங்கர் ராஜா. பேரன்புவின் பாடல்களும், பின்னணி இசையும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. ராம் சாருக்கும், யுவனுக்கும் நிறையச் சண்டைகள் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். இல்லை என்றால் இவ்வளவு அற்புதமான ஓர் இசை முழுமையாக வெளிவந்திருக்க முடியுமா என்று யோசிக்கிறேன்.

எடிட்டிங் மற்றும் கலை இயக்கம் இரண்டுமே மிக அருமையாக இருக்கிறது. எந்த இடத்திலும் எந்தக் காட்சியிலும் உறுத்தலே இல்லாமல் இரண்டு பேரும் உழைத்திருக்கிறார்கள்.

படத்தில் எனக்குப் பிடித்த முக்கியமான கேரக்டர் மீரா பாத்திரம்தான். பொதுவாகத் தமிழ் சூழலில் திருநங்கைகள் மீது இருக்கக் கூடிய பார்வையை முற்றிலுமாக உடைத்திருக்கிறது அஞ்சலி அமீருடைய நடிப்பு. அவருக்கு எனது வாழ்த்துகள். மொத்தத்தில் பேரன்பு திரைப்படத்தைக் கூகையின் மூலமாக வாழ்த்துவதில் நான் பெரிதும் மகிழ்கிறேன். இப்போது சமூகப் பிரச்சினை பற்றி பேசாமல் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகியிருப்பது வரவேற்கத்தக்கது, அதைப் பேரன்பும் உறுதி செய்திருக்கிறது” என்றார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

5 நிமிட வாசிப்பு

யானைகளின் வழித்தடம்: சர்வதேச நிபுணர்களுடன் ஆய்வு!

புதன் 6 பிப் 2019