மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜன 2019

சம்பளம் எப்போது வரும்?: அதிகாரிகள் கவலை!

சம்பளம் எப்போது வரும்?: அதிகாரிகள் கவலை!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சார்நிலைக் கருவூல ஊழியர்களும் ஈடுபட்டிருப்பதால், பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதில் தமிழக அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி 22ஆம் தேதி தொடங்கிய ஜாக்டோ ஜியோ போராட்டம், கடந்த எட்டு நாட்களாகத் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, மத்திய அரசின் கல்வித் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு, நேற்று (ஜனவரி 29) ஜாமீன் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று 9வது நாளாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

நேற்று மாஜிஸ்திரேட் முன்பு ஆஜரான ஜாக்டோஜியோவினர், அரசு தங்கள் மீது பொய் வழக்குப் போடுவதாகத் தெரிவித்தனர். வழக்கமாக, ஒருவரைக் கைது செய்யும்போது அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து அடைப்புக் காவல் படிவத்தில் கையெழுத்து வாங்க வேண்டும். இம்முறை அந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை. சம்பந்தப்பட்டவரின் உறவினர் கையெழுத்திடும் இடத்தில், அந்த உறவினரது கைப்பேசி எண் மட்டும் நிரப்பப்பட்டிருந்தது. அதைப் பார்த்த சில மாஜிஸ்திரேட்கள், ரிமாண்ட் செய்ய அழைத்து வந்த காவல் துறை அதிகாரிகளிடம் கடுமையாகப் பேசினர் என்கிறார் அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன்.

தற்போது சார்நிலைக் கருவூல ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்து வரும் அதிகாரிகளுக்கே சம்பளம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக என்ஜிஒ சங்கம், கு.ப. சங்கம், நீதித் துறைப் பணியாளர் சங்கம், மருத்துவ ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலகம் ஊழியர்கள் சங்கம் ஆகியன போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதனைத் தன் பேச்சில் குறிப்பிட்டார் சுப்பிரமணியன்.

“அரசு ஊழியர்கள் அநியாயமாகப் போராடவில்லை. அப்படிப்பட்டவர்களை அழைத்துப் பேசுவதில் ஆட்சியாளர்கள் என்ன பிரச்சினை? போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெறும். அரசு ஊழியர்களைச் சிறையில் அடைத்துவரும் சிறை ஊழியர்களே போராட்டத்தில் இறங்குவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று மாலை 3 மணியளவில் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு கூடவுள்ளது. இதில், இந்த போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

புதன் 30 ஜன 2019