மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

இளையராஜா 75: சர்ச்சைப் பேச்சால் வந்த சிக்கல்!

இளையராஜா 75: சர்ச்சைப் பேச்சால் வந்த சிக்கல்!

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் முயற்சியாக ‘இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கு ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தைத் தரக் கூடாது எனக் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின் சங்கத்திற்குக் கட்டிடம் கட்டுவேன், நிதியை அதிகரிப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் பதவிக் காலம் முடிவை நெருங்கிவிட்டபோதிலும் இன்னும் சங்கத்திற்கான கட்டிடம் கட்டப்படவில்லை, நிதியை அதிகரிப்பதற்கு மாறாக ஏழு கோடி ரூபாயைச் செலவழித்துள்ளனர். இந்நிலையில் இளையராஜாவைக் கொண்டு ‘இளையராஜா 75’ என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 2,3 ஆகிய தேதிகளில் இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. விஷாலுக்கு எதிராக உள்ள தயாரிப்பாளர்கள், பாடல்களுக்கான ராயல்டி தொகையைத் தயாரிப்பாளர்களுக்கு அல்லாமல் தனக்கே சொந்தம் என இளையராஜா கூறியதைக் காரணம் காட்டி நிகழ்ச்சியை ஒத்திவைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொரு புறம் இளையராஜா கடந்த ஆண்டு பேசிய சர்ச்சை பேச்சாலும் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சென்றிருந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், “ உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப்படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும்தான் உயிர்த்தெழுதல் நடந்துள்ளது” என்றார். இளையராஜாவின் இந்தப் பேச்சு கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையை அவமதிப்பதாக அப்போது சர்ச்சை உருவானது.

மார்ச் 27ஆம் தேதி இளையராஜாவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜா வருத்தம் தெரிவிக்கவில்லை.

(கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ்)

இந்நிலையில் இனிகோ இருதயராஜை தலைவராகக் கொண்டு செயல்படும் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தைச் சேர்ந்த நிக்சன் என்பவர் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கிறிஸ்தவர்களின் மத நம்பிக்கையைப் புண்படுத்திய இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்குக் கிறிஸ்தவ இயக்கமான ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகம் எப்படி அனுமதியளித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019