மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

படிக்காவிட்டால் என்ன நடக்கும்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

படிக்காவிட்டால் என்ன நடக்கும்? - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? பகுதி - 12

உங்கள் மகன் படிப்பில் ஈடுபாடில்லாமல் இருக்கிறானா? அட்வைஸ் செய்யும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.

சமீபத்தில் நான் ஓட்டி வந்த கார் நடுவழியில் பிரேக் டவுன் ஆகி நிற்க, அதை ‘டோ’ செய்து எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்துவிட்டு, ஒரு தனியார் நிறுவன கால் டாக்ஸிக்கு ஆப் மூலம் புக் செய்தேன்.

சென்னையில் வழியும் தெரியாமல், மொழியும் புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன். முப்பது வயது. திருமணம் ஆகி ஒரு குழந்தை. மதுரையை அடுத்த கிராமத்தில் குடும்பத்தை விட்டுவிட்டு இவர் இங்கே சென்னையில்.

‘என்ன படித்திருக்கிறீர்கள்?’

‘மூணாம் வகுப்பு…’

‘அதுக்கப்புறம் என்ன செய்தீங்க…’

‘படிக்கல...’

‘ஏன் உங்க வீட்ல வசதி இல்லையா?’

‘அதெல்லாம் இருந்தது… அப்பா விவசாயம். ஓர் அக்கா, ஓர் அண்ணன் எனச் சின்ன குடும்பம்தான்…’

‘அப்புறம் என்ன? படிப்பு ஏறலையா?’

‘அதெல்லாம் இல்லம்மா… கொழுப்புதான்… எங்க அப்பா என்னை படிக்கச் சொல்லுவார். நான் நாள் தவறாம பள்ளிக்கூடம் போவதற்காகத் தினமும் பத்து ரூபாய் கொடுப்பார். ஆனால் நான்தான் அப்பாவுக்குத் தெரியாமல் பையைத் தூக்கி ஓரமா வீசிட்டு, ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தேன். என்னோடு படித்தவர்கள் எல்லாம் நல்ல வேலையில் இருக்காங்க…. நானும் இன்னொரு நண்பனும் மட்டும்தான் இப்படி வீணாயிட்டோம்… படிக்க வேண்டிய நாட்களில் படிக்காமல் விட்டதற்கு சரியான தண்டனை இப்போது இரவு பகல் பார்க்காம கால் நோக வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறேன்…’

‘ஏன் ஸ்கூல்ல, வீட்ல அக்கா, அண்ணா யாரும் படிக்க ஊக்கப்படுத்தலையா?’

‘ம்… படிச்சா நல்ல வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம் அப்படின்னு சொல்லி சொல்லி அப்பாதான் என்னை படிடா படிடான்னு சொல்லிக்கிட்டே இருப்பார்… அப்பப்ப தலைல குட்டி குட்டி படிக்கச் சொல்லுவார்…’

‘அப்புறம் என்ன படிக்க வேண்டியதுதானே?’

‘எல்லோரும் படிச்சா வேலைக்குப் போகலாம், சம்பாதிக்கலாம் அப்படின்னு சொன்னாங்களே தவிர, படிக்கலைன்னா இப்படி நாயாட்டம் ராப்பகலா அலையணும், சாப்பாட்டுக்குக்கூட வழி இருக்காது, கைகட்டி நின்னு திட்டு வாங்கணும், குடும்பத்தோடகூட வாழ வழி இருக்காது அப்படின்னு யாருமே சொல்லலை… என்னுடன் படிச்சவங்க பலர் போலீஸ் வேலைல இருக்காங்க… அவங்களப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கு… படிச்சா இப்படி நல்ல கவுரவமான வேலைக்கு போகலாம், வசதியா இருக்கலாம் அப்படின்னு இப்படின்னு யாராவது எதையாவது உதாரணம் காட்டிச் சொல்லி இருந்தால் என் மனசுல அது கனவா ஆயிருக்குமோ என்னவோ… இப்போத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு…’

‘ம்…’

‘இப்போ நான் எங்கூர்ல ஊரைச் சுத்தும் பசங்களப் பார்த்தா நல்லா படிங்கடா… இல்லாட்டா என்னப்போல கஷ்டப்படணும்டான்னு அறிவுரை சொல்றேன்… படிச்சா ஆபீசர் ஆகலாம், கவர்மெண்ட் வேலைக்குப் போகலாம் அப்படின்னும் சொல்றேன்… என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாதும்மா…’

இந்த டிரைவர் படிக்கவில்லை என்றாலும், இவரது வாழ்க்கை மிகப் பெரிய பாடத்தைச் சொல்லிக்கொடுத்துள்ளதை கவனிக்கவும்.

குழந்தைகளை டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும், ஐடில பெரிய பொசிஷனுக்கு வரணும் என்று சொல்லி சொல்லி பாசிடிவாக வளர்க்கும் அதே நேரத்தில், படிக்கவில்லை என்றால் என்ன மாதிரியான மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை சற்று மிகைப்படுத்தி உதாரணங்களுடன், அந்தச் சூழலை அவர்கள் கற்பனை செய்து பார்க்கும் அளவுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த உதாரணங்கள் நம் கற்பனையாக இருந்தாலும் பரவாயில்லை. அதில் உண்மை மட்டும் இருக்குமாறு பார்த்துக்கொள்வோம்.

‘நல்லா படி, படி என்று சொன்னாங்களே தவிர, படிக்காவிட்டால் எப்படிப்பட்ட மோசமான நிலை ஏற்படும் என்று எனக்கு யாருமே சொல்லலை’ என்று புலம்பிய டிரைவரின் நிலை யாருக்கும் வரக் கூடாது பிற்காலத்தில்.

கற்போம்… கற்பிப்போம்!

(அடுத்த பகுதி வரும் திங்களன்று...)

(கட்டுரையாளர் : காம்கேர் கே.புவனேஸ்வரி - காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் என்னும் ஐடி நிறுவனத்தின் CEO. நிர்வாகி, தொழில்நுட்ப வல்லுநர், கிரியேடிவ்டைரக்டர், எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாளர், தன்னம்பிக்கைப் பேச்சாளர் என பன்முகம் கொண்ட இவர் M.Sc., Computer Science மற்றும் M.B.A பட்டங்கள் பெற்றவர். Compcare Software Private Limited என்ற சாஃப்ட்வேர் தயாரிப்பு நிறுவனத்தின் CEO & MDஆகக் கடந்த 25 ஆண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறார். தொழில்நுட்பம் மற்றும் வாழ்வியல் குறித்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ள இவரது சாஃப்ட்வேர் மற்றும் அனிமேஷன் தயாரிப்புகளும் தொழில்நுட்பப் புத்தகங்களும் பல கல்லூரிகளில் பாடத் திட்டமாகஉள்ளன. இவரைத் தொடர்புகொள்ள:[email protected])

முந்தைய பகுதிகள் :

பகுதி - 1 : உங்கள் திறமை எது என்று அறிவீர்களா?

பகுதி - 2 : கடமையும் விருப்பமும்!

பகுதி - 3 : ஹாபியே வேலையானால்…!

பகுதி - 4 : கடலை வற்றச் செய்த குருவிகள்!

பகுதி - 5 : நீங்கள் மட்டுமே காரணம் அல்ல!

பகுதி - 6 : விண்ணைத் தாண்டிக் கனவு காணுங்கள்!

பகுதி - 7 : சீக்கிரமா ஜெயிக்க, ரிலாக்ஸ்டா இருங்க!

பகுதி - 8 : கைதியாலேயே முடியும் என்றால்...?

பகுதி - 9 : நீங்கள் மட்டுமே காரணம் அல்ல!

பகுதி - 10 : இல்லாததைத் தேட வேண்டாமே!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019