மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

அமலாக்கத் துறை ரெய்டு: அகிலேஷுக்கு நெருக்கடி!

அமலாக்கத் துறை ரெய்டு: அகிலேஷுக்கு நெருக்கடி!

கோமதி நதியோர பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விசாரணையில், அமலாக்கத் துறையினர் நேற்று (ஜனவரி 24) பல இடங்களில் சோதனை நடத்தினர். மக்களவைத் தேர்தல் வரும் நேரத்தில் இவ்விவகாரம் தொடர்பான ரெய்டுகளால் சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது 2017ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பு கோமதி நதியோர பகுதிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் தொடர்பான முறைகேடுகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. லக்னோ, நொய்டா, டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ளூர் காவல் துறையின் உதவியுடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் இந்த ரெய்டுகளில் தேடப்படுவதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைமை பொறியாளர்களான குலேஷ் சந்திரா, எஸ்.என்.சர்மா, கஜிம் அலி, கண்காணிப்பு பொறியாளர்களான மங்கல் யாதவ், அகில் ராமன், கமலேஷ்வர் சிங், ரூப் சிங் யாதவ், தலைமை பொறியாளர் சுரேந்திர யாதவ் ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இதில் மங்கல் யாதவ், ரூப் சிங் யாதவ், குலேஷ் சந்திரா ஆகியோர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காக சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. ரெய்டுகள் குறித்து அகிலேஷ் யாதவ் பேசுகையில், “மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமான தொகுதிகளை வெல்வதற்கு சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்து வருகிறது. எங்களைத் தடுக்க நினைப்பவர்களின் கையில் சிபிஐ உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ விசாரித்தபோது என்னிடம் கேள்வியெழுப்பினார்கள். இப்போது பாஜக ஆட்சியில் சிபிஐ என்னிடம் கேள்வியெழுப்பினால் நான் பதிலளிப்பேன். ஆனால், பாஜகவுக்கான பதிலை அளிக்க மக்கள் தயார்நிலையில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019