மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

புத்தகக் காட்சி 2019: யாரை இழுக்க இந்தக் கணக்கு?

புத்தகக் காட்சி 2019: யாரை இழுக்க இந்தக் கணக்கு?

புத்தகக் காட்சி முடிந்தாலும் அது குறித்த சர்ச்சைகள் ஓயவில்லை…

இனியன், பியர்சன் லினேக்கர். ச.ரே

புத்தகக் காட்சி 2019இன் முடிவில் அந்நிகழ்வை நடத்திய பபாசி ஒரு செய்தியை வெளியிட்டது. அந்தச் செய்தி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், அறிஞர்கள், வாசகர்கள் என அனைத்து தரப்பினரிடமும் சந்தேகத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

புத்தகக் காட்சியில் புத்தகங்கள் மட்டும் ரூ.18 கோடிக்கு விற்கப்பட்டது என்பதுதான் அந்தத் தகவல். இது சென்ற ஆண்டைவிடக் கூடுதலான தொகை என்றும், மொத்தம் 75 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் பபாசி அமைப்பு கூறியது. இந்தக் கணக்குதான் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

புத்தகக் காட்சி முடிந்ததும், மொத்த விற்பனை 21 கோடி என முதலில் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அப்படியானால் ஒரு புத்தகம் சுமார் 30 ரூபாய் என்பதைச் சுட்டிக்காட்டி, இது எப்படிச் சாத்தியம் என்று எழுத்தாளர் ராஜன் குறை மின்னம்பலத்தில் எழுதிய கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தார். தற்போது 75 லட்சம் புத்தகங்கள், 18 கோடி என அதிகாரபூர்வமான அறிவிப்பு வந்திருக்கிறது. அப்படியானால் ஒரு நூலின் விலை 24 ரூபாய். இது எப்படிச் சாத்தியம் என்னும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

கடைசி நாளில் பதிப்பகங்களிடம் பபாசியின் சார்பில் ஒரு படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர்கள் நிரப்பிக் கொடுத்த தொகையை வைத்துத்தான் இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது என்று தெரிகிறது.

“கொடுக்கப்பட்ட படிவத்தில் எங்கள் வியாபாரம் தொடர்பான கணக்குகளை கொடுத்தோம். ஒருவேளை அதைவைத்து தோராயமாக தொகை ஒன்றை வெளியிட்டிருக்கலாம்” என்கிறார் அடையாளம் பதிப்பகத்தின் சாதிக். “ஒரு வகையில் அதிகமான தொகை காட்டுவது நல்லதுதான். அதன் மூலம் மக்கள் புத்தகம் அதிகம் வாங்குகிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கலாம். அது ஒரு வகையான சமூக உரையாடலை நடத்தும்” என்று சொல்லும் அவர், வணிகத்தில் கணக்குகளைக் கூட்டியும் குறைத்தும் சொல்வது வழக்கமானதுதான் என்கிறார்.

"கடைசி நாளன்று, சுமார் 5 மணியளவில், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட படிவத்தில் வியாபாரமான தொகை விவரங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தோம். 800 அரங்குகளுக்கு மேல் இருப்பதால் 18 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்க வாய்ப்பிருப்பதாகத்தான் நினைக்கிறேன்” என்று ப்யூர் சினிமாவின் அருண் சொல்கிறார். “ஆறுநாள்கள் விடுமுறை இருந்ததால் பெரும் கூட்டமெல்லாம் இல்லை. ஆனாலும் கடைசி இரண்டு நாட்களில்கூட்டம் வந்ததால் வியாபாரம் நன்றாகவே இருந்தது. எனக்குத் தெரிந்து யாருக்கும் நஷ்டமாகவில்லை என்றுதான் நினைக்கிறேன்" என்றும் அவர் தெரிவிக்கிறார்.

உடனடியாகக் கணக்கைத் தெரிவிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்கிறார் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன். "பெரும்பாலும் முந்தைய ஆண்டுத் தொகையை விட, சற்று கூட்டிச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட அரங்குகள், அதில் ஒவ்வொரு அரங்கின் வருமானத்தை ஒருங்கிணைத்து கணக்கிடுவதற்குக் குறைந்தது ஒரு வாரமாவது ஆகும். இரண்டு அரங்குகள் வைத்திருந்த எங்களின் கணக்குகளைப் பார்ப்பதற்கே குறைந்தது ஓரிரு நாட்களாவது ஆகும். அவர்கள் கூறுவது தோராயமான கணக்குகள் என்றாலும் அதைக் கணக்கிட எந்த வகைமுறைகளைக் கையாண்டார்கள் என்பது தெரியவில்லை” என்கிறார்.

இப்படி ஒரு கணக்கைக் கூறுவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பும் கண்ணன், “இதுபோன்ற தவறான தகவல்களை வெளியிடுவது சரியில்லை. இது தவறான கலாசாரத்தை வளர்த்தெடுக்கும். வழக்கமாக புத்தககண்காட்சி நடக்கும் நாட்களை கூட்டியதாலேயே வருமானமும் கூடியிருக்கும் என்று கூறிவிட முடியாது"என்கிறார்.

"கடைசி நாள் முடிவதற்கு ஒரு மணிநேரம் முன்பு ஒரு படிவத்தில் எவ்வளவு விற்பனையானது என்று கேட்கப்பட்டது. மொத்த விற்பனை 18 கோடி என்னும் பபாசியின் புள்ளிவிவரத்தைப் பொறுத்தவரை ஏதாவது ஒரு கணக்கின் அடிப்படையில்தான் அந்த முடிவுக்கு வந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்" என்பது எழுத்தாளரும் தேசாந்திரி பதிப்பகத்தின் பதிப்பாளருமான எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து.

கொடுத்த கணக்கு சரிதானா?

800க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்ததால் அவ்வளவு தொகை வந்திருக்க வாய்ப்புள்ளது என்றே விடியல் பதிப்பகத்தின் ராமச்சந்திரனும் கருதுகிறார். படிவங்களில் பதிப்பாளர்கள் தந்த தகவல்கள்தான் பபாசியின் கணக்குக்கு அடிப்படையாக இருந்திருக்கும் என்றாலும் அதிலுள்ள சிக்கலை விடியல் பதிப்பகத்தின் ராமச்சந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

"பபாசி கொடுத்தபடிவத்தில் 1இலிருந்து 3 லட்சம், 3இலிருந்து 5 லட்சம், 5இலிருந்து 7 லட்சம் போன்ற பிரிவுகளில் தோராயமாக நம் பதிப்பக விற்பனைக்கேற்ப டிக் செய்ய வேண்டும். 3 லட்சம் விற்பனையான பதிப்பாளரும் 5 லட்சம் விற்பனையான பதிப்பாளரும் ஒரே பிரிவில் வரும்பொழுது இவர்களின் மிகப் பெரிய வித்தியாசங்கள் கணக்கிடப்படுவதில்லை" என்று விளக்கும் ராமச்சந்திரன், கடைசி நாளில் வெளியிடப்பட்ட கணக்கு உண்மை நிலையைப் பிரதிபலிக்காது என்று கருதுகிறார்.

எல்லோரும் இந்தக் கணக்கைக் கொடுத்தார்களா என்பதிலும் ஐயம் உள்ளது. "எவ்வளவு விற்பனையானதுஎன்பது பற்றியெல்லாம் எங்களிடம் கேட்கவில்லை. நாங்களும் எங்கள் தரப்பிலிருந்து எந்தக் கணக்கையும் ஒப்படைக்கவும் இல்லை” என்கிறார் கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி. “பதிப்பாளர்கள் முழுமையானவிற்பனை விவரங்களை தராமல் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில், குறைவான விற்பனை உடையவர்கள் வெளியில் தெரிவிக்க விரும்பாமல் இருக்கலாம், அதிகமாக விற்பனை உடையவர்கள் பிறர்பொறாமைப்படுவார்களே என்பதாலும் தெரிவிக்காமல் இருக்கலாம். பபாசி எந்த முறையில் கணக்கிட்டார்கள் என்பது தெரியவில்லை" என்றும் அவர் கூறுகிறார்.

"18 கோடி எனும் தொகை சரியானது என்று சொல்ல முடியாது. அந்த அளவிற்கான விற்பனை நடந்திருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றுதான் நினைக்கிறேன். வார இறுதி நாட்களைத் தவிர பார்வையாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருந்தது" என்கிறார் உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்.

"புள்ளிவிவரக் கணக்கெல்லாம் யாரும் எப்போதும் சொல்வதில்லை, நடைமுறைச் சாத்தியமும் இல்லை” என்றார் அலைகள் பதிப்பகத்தின் சிவம். “புத்தகச் சந்தைகளுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது. புத்தகங்கள் பெரிய அளவில் விற்பனையாகவில்லை என்று பொது வெளியில் சொல்ல விரும்புவதில்லை. பெருமையாகச் சொல்லிக்கொள்வதற்கும் மக்களைப் புத்தகக் காட்சி நோக்கி வரவைப்பதற்கும் ஊக்கப்படுத்தும்விஷயமாகத்தான் ஒவ்வொரு வருடமும் இந்தக் கணக்கு சொல்லப்படுகிறது" என்கிறார் அவர்.

இது குறித்துக் கேட்டபோது சற்றே ஆவேசமடைந்த பாரதி புத்தகாலயத்தின் நாகராஜன், "யாரும் ஒழுங்கான கணக்கு கொடுப்பதில்லை. 750 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இருந்தன. மொத்தமாக எவ்வளவு வந்தது எனதோராயமாக கணக்கிட்டிருப்பார்கள். அது எந்த அடிப்படையில் என்றெல்லாம் அவர்களிடம் தான் கேட்கவேண்டும்” என்கிறார். எந்தப் புத்தகக் காட்சியிலும் சரியான கணக்கைச் சொன்னதே கிடையாது,தோராயமாகத்தான் சொல்ல முடியும் என்று சொல்லும் அவர், இந்தக் கணக்கு பொய்யென்று சொல்வதால்என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்புகிறார்.

வாசகர்களை ஈர்ப்பதற்கு உதவுமா?

எந்த முறையைப் பின்பற்றி இந்தக் கணக்கை வெளியிடுகிறீர்கள் என்று பபாசியின் தலைவர் வைரவனிடம்கேட்டபோது, "எந்த முறைப்படி கணக்கிட்டோம் என்பது பற்றியெல்லாம் சொல்ல முடியாது. இது தோராயமானதுதான். புள்ளிவிவரக் கணக்கெல்லாம் வருமான வரித் துறைக்குத்தான். இருந்த 800 அரங்குகளில்450 பங்கேற்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு விற்றார்கள் என்று அவர்களுக்குத்தான் தெரியும்.எங்களுக்குத் தெரியாது. போன வருடத்தை விட அதிகமாகத்தான் விற்றது. ரூ.18 கோடி தோராயமான கணக்குதான். கூடவோ குறைச்சலோ இருக்கும்" என்றார்.

வாசகர்களையும் பதிப்பாளர்களையும் ஊக்கப்படுத்துவதுதான் சொல்லப்பட்ட இந்தத் தொகைக்கு உண்மைக் காரணம் என்றால் அந்த நோக்கத்தில் பிழை இருப்பதாகக் கருத முடியாது. ஆனால், இதுபோன்ற எண்ணிக்கையைக் காட்டி வாசகர்களை ஈர்த்துவிட முடியுமா என்பதையும் பபாசியினர் யோசிக்க வேண்டும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத பதிப்பாளர் ஒருவர் கூறுகிறார். “இந்தக் கணக்கு வாசகர்களை இழுப்பதற்கான விளம்பர உத்தி என்பதைவிட, பபாசி நிர்வாகத்தினர் சுய தம்பட்டம் அடித்துக்கொள்வதற்கான உத்தி என்றுதான் தோன்றுகிறது” என்கிறார் அவர்.

புத்தகங்களை வாங்குபவர்களை விட வெளியே இருந்த விலை அதிகமுள்ள பெரிய உணவகங்களில் வாங்குபவர்கள்தான் அதிகம் என்று பேசப்படுவதையும் அடுத்த வருடம் இன்னும் பல பெரிய நிறுவனங்களின் கவனத்தை சந்தை ரீதியாக ஈர்க்க இந்தப் பெரிய கணக்குகள் பயன்படலாம் என்னும் ஊகங்களையும் முற்றாகப் புறந்தள்ளிவிட முடியாதுதான்.

“விற்பனைக் கணக்கைத் துல்லியமாக அளிக்க முடியாது என்பதுதான் உண்மை” எனக் கூறும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தின் வேடியப்பன், தங்கள் விற்பனைக் கணக்கைக் கொடுப்பதற்குத் தாமதமாகியதை ஒப்புக்கொள்கிறார். “வாசகர்களை ஈர்க்க இதுபோன்ற கணக்கு எதுவும் தேவையில்லை. கண்காட்சியின் கழிவறை வசதிகள், ஓய்வெடுக்கும் வசதிகள் முதலான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலே போதும்” என்று வேடியப்பன் கருதுகிறார்.

பல எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் கண்காட்சியின் போதாமைகள் பற்றிப் பல கருத்துகளைச் சொல்லிவருகிறார்கள். அவற்றைப் பரிசீலித்து அமல்படுத்தினாலே வாசகர்கள் அதிகம் வரும் வாய்ப்பு உருவாகும் என்று வேடியப்பன் சொல்வது வாசகர்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்களின் குரலாக ஒலிக்கிறது.

புத்தகக் காட்சி 2019 பார்வைகள்:

புத்தகங்களின் கடலுக்குள்! - எஸ்.ராமகிருஷ்ணன்

புத்தகம்: (கண்)காட்சி, சந்தை, திருவிழா! - ராஜன் குறை

எழுத்தாளர்களுக்கு இடம் உண்டா? – ஜி.குப்புசாமி

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019