மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

உலகையே மயக்கிய இயக்குநர் ஏன் விலகினார்?

உலகையே மயக்கிய இயக்குநர் ஏன் விலகினார்?

எஸ்கா

"பிடித்த விஷயங்களைச் செய்வதற்காகவும், குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காகவுமே விலகுகிறேன்"

குழந்தைகளை மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் ஈர்த்து, உலக சினிமா ரசிகர்களின் ரசனையையே புரட்டிப் போட்ட அனிமேஷன் திரைப்படங்களான Toy Story 2, Monsters Inc, Finding Nemo ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களின் இணை இயக்குனரும், உலகம் முழுக்க நூறு கோடி டாலர்கள் (கிட்டத்தட்ட 70000 கோடி ரூபாய்) வசூலைத் தாண்டிய Toy Story 3 படத்தின் இயக்குனருமான லீ அன்க்ரிச் சமீபத்தில் சொன்னது இது.

2010இல் வெளியான Toy Story 3 மட்டுமின்றி இரண்டாண்டுகளுக்கு முன் அவரது இயக்கத்தில் வெளியாகிய மற்றொரு அனிமேஷன் படமான Cocoவும் Best Animated Feature பிரிவில் ஆஸ்கர் விருது உட்பட பல உலகளாவிய விருதுகளை வென்றவை என்ற செய்தி அவரது தொப்பியில் ஏறியிருக்கும் மற்றுமோர் சிறகு.

உலக அளவில் வரவேற்பும் கவனமும் பெற்ற Cars, A Bug's Life, Monsters University, The Good Dinosaur போன்ற திரைப்படங்களில் எடிட்டர், கதாசிரியர், நிர்வாக தயாரிப்பாளர் என பலவிதமாக பங்கு வகித்தவர் இவர். இவ்வளவு ஏன்? இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் Toy Story 4 படத்தின் கதையும் இவருடையதே. பிக்ஸார் தயாரிக்கும் அனிமேஷன் படங்களை விர்சுவலாக மிகவும் சிறப்பான நிலைக்கு உயர்த்தியதில் அவரது பங்கு மிகப் பெரியது என்கிறார் பிக்ஸார் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜிம் மோரிஸ்.

தனது 26ஆவது வயதில் பிக்ஸாரில் இணைந்த லீ அதற்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் எடிட்டராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார். 1994ஆம் ஆண்டு பிக்ஸாரின் முதல் அனிமேஷன் படமான டாய் ஸ்டோரியின் கதை செதுக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்தவர் லீ. அப்போது முதல் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கும் Toy Story 4 வரையிலான 21 படங்களிலும் அவரது பங்கு உண்டு. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில், லீ யின் திரைப்பங்களிப்பைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் என அறிவித்து அவருக்குத் ‘தங்க சிங்கம்’ விருது வழங்கப்பட்டது.

தனது விலகல் செய்தியைக் குறிப்பிட்ட பிறகு அவர் “எனக்கு பிக்ஸாரில் வேலை செய்ததில் மோசமான அனுபவம் என்னவென்றால் ஒரு படத்தில் வேலை செய்யாமலோ, அந்தப் படத்தைப் பற்றிய முழுத் தகவல்கள் தெரியாமலோ ஒரு புதிய பிக்ஸார் படத்தை நான் பார்த்ததே இல்லை, வருங்காலத்தில் அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்” என்று வேடிக்கையாக ட்வீட் செய்துள்ளார்.

தான் 25 ஆண்டுகளாகப் பணிபுரிந்த, வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் துணை நிறுவனமான, பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோவிலிருந்து வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி விலகுவதாக லீ அண்மையில் அறிவித்திருக்கிறார்.

அமெரிக்கா போன்ற முதலாளித்துவக் கருத்துள்ள நாட்டில் ஒரு நிறுவனத்தில் மிக நீண்ட காலம் பணிபுரிவது என்பது சாதாரண விஷயம் இல்லை. தான் வேறொரு ஸ்டுடியோவுக்குச் சென்று படங்கள் எடுப்பதற்காக விலகவில்லை என்பதையும், தனக்குப் பிடித்த, நீண்ட காலமாகக் கிடப்பில் போட்டிருந்த தனிப்பட்ட விஷயங்களைச் செய்வதற்காகவும், தன் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காகவுமே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019