மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

[email protected]புத்தகக் காட்சி!

Login@புத்தகக் காட்சி!

சந்தோஷ் நாராயணன்

புத்தகக் காட்சி 2019 குறித்த பார்வை!

கல்லூரிக் காலத்தில் புது வசந்தம் படத்தில் வரும் கதாநாயகர்கள் போல தேனாம்பேட்டையில் ஒரு மொட்டை மாடி குடிசைதான் எங்கள் வாசஸ்தலம். எழும்பூரில் இருக்கும் ஓவியக் கல்லூரி வரை சென்று வர இலவச பஸ் பாஸ் இருக்கும். ஸ்பென்சர் பிளாசாவில் இறங்கி காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் புத்தகக் காட்சிக்குப் போவது திருவிழா பார்க்கும் ஒரு குழந்தையின் மனநிலையில்தான். வாசிப்பு மற்றும் கலை மீதான தீரா மோகத்திற்கு எப்போதும் வறுமை இருந்ததில்லை. ஆனால், அறையில் பொருளாதார வறுமை இருந்தது. அதனால் புத்தகங்கள் வாங்கக் காசில்லை.

இருந்தாலும் என்ன, புத்தகங்கள் வெறுமனே வாசிப்பதற்கானது மட்டும்தானா? தொட்டுப் பார்க்கவும் வாசனையை நுகரவும் அதன் பக்கங்களைப் புரட்டும் பரவசத்தை அடையவும் புத்தகக் காட்சி பெரும் வாய்ப்பாக இருக்கும். திரும்பும் பக்கமெல்லாம் புத்தகங்கள் என்பது ஒரு வாசகனாக என்னை அப்போது திக்குமுக்காடச் செய்யும் ஒன்று.

பிறகொரு காலத்தில் நான் புத்தகங்களின் முக வடிவமைப்பாளனாக மாறியபோது புத்தகக் காட்சியின் பரவசம் இரட்டிப்பானது. மைதானத்தில் கால்பந்தாடும் குழந்தைகளில் நம் குழந்தை எப்படி ஆடுகிறது என்று பார்க்க ஆர்வமாக இருக்கும் தகப்பனைப்போல நான் எனது வடிவமைப்பில் வந்த புத்தகங்களைக் கடைகளில் கண்களால் துழாவித் திரிவேன்.

இந்த வருடம் ஓர் எழுத்தாளனாகவும் என் பரவசத்தை மும்மடங்காக்கியது இந்தப் புத்தகக் காட்சி. விகடனில் ‘கலைடாஸ்கோப்’, உயிர்மையில் ‘அஞ்ஞானச் சிறுகதைகள்’ மின்னம்பலத்தில் ‘மினிமலிசம்’ என்று எனது புத்தகங்கள் வந்திருந்தன. அடிப்படையில் ஓவியனான எனக்கு எழுத்தாளன் என்னும் அங்கீகாரம் ஒரு போனஸ். அது தவிர, இந்த வருடம் மட்டும் கிட்டத்தட்ட முப்பது புத்தகங்களுக்கு மேல் அட்டைகள் வடிவமைப்பு செய்திருக்கிறேன்.

வருடம் முழுக்க முகநூலில் லைக்ஸ் கொட்டிக்கொண்டிருக்கும் சென்னைவாழ் வாசகர்களுக்கு நூல்களின் முகமான புத்தகக் காட்சி முக்கியமானதொரு நிகழ்ச்சி தான். எதிர் வெளியீட்டிற்கு நான் டிசைன் செய்து கொடுத்த புத்தகப் பையில் ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் இருந்து வெளியேறும் ஒருவன் புத்தகங்களின் உலகத்திற்குள் நுழைவது போல படம் போட்டிருந்தேன். கூட்டத்தில் யாரேனும் அதைக் கவனித்தார்களா என்று தெரியவில்லை.

18 நாட்கள் நீண்டு நின்ற இந்தக் காட்சியில் நான் சென்று வந்தது இரண்டு நாட்கள்தான். நான் சென்ற இரண்டு நாட்களும் நன்றாகச் சுற்றிப் பார்க்கவும் பொறுமையாகப் புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கவும் முடிகிற அளவுக்குக் கூட்டமே இல்லாமல் ஃப்ரீயாக இருந்தது என்று சொன்னால் பதிப்பாளர்கள் வருத்தப்படக்கூடும். விற்பனை குறைவு என்று பதிப்பாள நண்பர்கள் சொன்னபோது எனக்குமே வருத்தம்தான். அட்டை வடிவமைப்புகள் செய்ததற்கு இன்னும் பில் வேறு நான் அனுப்பியிருக்கவில்லை. ஆனால் கடைசி இரண்டு நாட்கள் நல்ல கூட்டம், நல்ல விற்பனை என்கிற தகவல்கள் ‘டிசைனராக’ எனக்கு ஆசுவாசமளித்தன.

வழக்கமாகப் புத்தகக் காட்சி நடக்கிறதென்றால் சென்னையின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரங்கள் களை கட்டும். இம்முறை அப்படி ஏதும் என் கண்களுக்குப்படவில்லை. ‘அஞ்ஞானச்சிறுகதைகள்’ புத்தகத்திற்கு நானே முகநூலில் செய்த விளம்பர அட்ராசிட்டிகளைப் பார்த்து நண்பர்கள் வியந்தார்கள். அப்புறம் எப்போது நிறுத்துவான் என்று பயந்தார்கள். ஜீரோ பட்ஜெட்டில் விளம்பரங்கள் செய்ய முடிகிற இந்த சோசியல் மீடியா யுகத்தில் ஏன் புத்தகக் காட்சி பற்றி சுவாரஸ்யமாக விளம்பரங்கள் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்கவில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும். பபாசிக்கு ஆளாளுக்கு அறிவுரை சொல்வதால் அணில் போல என் பங்கிற்கு நான் மேலே உள்ளதைச் சொல்லி வைக்கிறேன்.

ரோபோடிக்ஸ், சைல்ட் டெவலப்மென்ட், யூ கேன் வின் முதலான சமாச்சாரங்களுக்கு இடையிலும் தும்பி, இயல்வாகை போன்ற பதிப்பகக் கடைகள் இயற்கையின் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருந்தது புத்தகக் காட்சியின் பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டு. எப்போதும் கலை உணர்வுடன் மிளிரும் காலச்சுவடு பதிப்பகக் கடை இம்முறை “எட்டு ஸ்டால்” பிரச்சினையினால் ‘கலை’யிழந்து காணப்பட்டது வருத்தமே.

அஞ்ஞானச் சிறுகதைகள் புத்தகத்தை டிஸ்பிளேவில் வைக்க ஒரு குட்டி ‘டைம் மிஷின்’ ஸ்டேண்டை தம்பி சத்யாவிடம் செய்து வாங்கினேன். அஞ்ஞானச் சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சொல்லும் விதமாக அதில் கடிகாரமும் காலமும் கொஞ்சம் அட்வான்ஸாக ஓடும்படி செய்திருந்தேன். இதைச் சொல்லக் காரணம், புத்தகக் காட்சி என்பது வெறும் சந்தை அல்ல; அது கலை இலக்கியம் சார்ந்த புதுமைகளை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு பண்பாட்டு வெளி என்று நம்புவதால்.

வகைக்கு ஒரு வரிசை

என்னென்னவோ பெயரில் இருக்கும் உதிரி பதிப்பகங்கள் எல்லாம் புத்தகக் காட்சியை வெறும் “டிரேட் எக்ஸ்போ” வாக மட்டுமே பார்க்கும் என்பதால், கலை, வாசிப்பு சார்ந்து புதுமைகளை அவை யோசிக்க வாய்ப்பில்லை. பொதுவுடமையாக்கப்பட்ட புத்தகங்களைப் போட்டு கல்லா கட்டுவதில் மட்டும் கவனமாக இருப்பவை அவை. இம்மாதிரியான பதிப்பகங்கள் இன்று பல்கிப் பெருகிப் புத்தகக் காட்சியைப் போர்க்களமாக்கிவிட்டதுபோல இருந்தது. வாசகர்கள் திக்குத் தெரியாமல் கூட்டத்தில் திணறிக்கொண்டிருப்பது போலவும் பட்டது. நல்லதாக நாலு புத்தகங்கள் வாங்க இடைப்பட்ட இருபத்தைந்து மொக்கை கடைகளைக் கடக்க வேண்டி இருக்கிறது. ஜனநாயகபூர்வமாக எல்லோருக்கும் எல்லாவற்றிலும் பங்கெடுக்க உரிமை உள்ளது என்பதை ஒப்புக்கொண்டாலும், குழந்தைகளுக்கான புத்தகக் கடைகளின் வரிசை, நவீன இலக்கியங்களுக்கான புத்தக வரிசை, ஆத்மிக, சுயமுன்னேற்ற சமையல் வகையறாக்களுக்கான வரிசை என்று எதிர்காலத்தில் யோசித்தால் வாசகர்களின் முட்டி தேய்வதும் மூச்சு வாங்குவதும் கொஞ்சம் குறையும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற முன்னோடிகள் எப்போதும் தாங்கள் சம்பந்தப்பட்ட கடைகளில் இருந்து வாசகர்களிடம் இடையறாது உறவாடிக்கொண்டிருப்பதை பார்த்தபோது முதிர் வாசகனாகவும் இளம் எழுத்தாளனாகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு வாசகர் ஒரு மூத்த படைப்பாளியின் தோள்மீது அழுத்தமாக கையைப் போட்டுக்கொண்டு செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிட்டிருந்தார். அவரது வாசக அன்பு எவ்வளவு அழுத்தமானது என்பதை அந்த எழுத்தாளரின் தோள் ஒரு அடி இறங்கி இருந்ததிலிருந்து என்னால் யூகிக்க முடிந்தது.

அப்பளத்தின் மீது கொஞ்சம் ‘மிளகாய்ப் பொடி’!

சென்னைப் புத்தகக் காட்சியைப்பற்றி ஜெயமோகன் “பேருருப் பார்த்தல்” என்று கவித்துவமாக எழுதி இருப்பதைப் பார்த்தேன். அப்பளத்தின் ‘பேருரு’வான டெல்லி அப்பளத்தைத்தான் அவர் சொல்லியிருப்பார் என்று தவறாகப் புரிந்துகொண்டார்களோ என்னமோ... அப்பளக்கடையில் பெருங்கூட்டம். மற்றபடி அப்பள, பஜ்ஜி, இன்ன பிற நொறுக்குத் தீனிக் கடைகளை எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் வெளியே கிண்டலாகவும் உள்ளுக்குள் முற்றிய பொறாமையுடனும் முகநூலில் விமர்சனம் செய்வதைப் பார்த்தேன். நான் புத்தகக் காட்சிக்குச் சென்றது ஒரு வாசகனாக ஓர் ஓவியனாக மட்டுமல்லாது ஒரு குடும்பத் தலைவனாகவும்தான் என்பதால் அப்பள, பஜ்ஜி, ஐஸ்க்ரீம் கடைகளின் முக்கியத்துவமும் நன்றாகப் புரிந்திருந்தது . வெறுமனே புத்தகங்களை வாங்குவதற்காக மட்டும் மக்கள் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது சர்வாதிகாரம்.

அதே நேரம் இது அப்பளக் காட்சி மட்டும் அல்ல, இது புத்தகக் காட்சியும்கூட என்பது அப்பளம் மீது தூவும் ‘மிளகாய்ப் பொடி’ போல மக்களுக்கும் உறைக்க வேண்டும். கூடவே பல தலைமுறைகளுக்குப் பொக்கிஷமாக இருக்கப்போகிற புத்தகங்களை விலை அதிகமோ என்று மோவாயைத் தடவும் ஆசாமிகள் சில மணித்தியாலங்களுக்குள் ஜீரணமாகிவிடும் பரோட்டா, மசால் தோசை, பக்கோடா போன்றவற்றின் அநியாய விலைகளைப் பற்றியும் கவலைப்பட்டு ஒரு சமநிலையை பேணியிருக்க வேண்டும் என்பதைப் பலகாரக் கடைகளின் முன்பு நிற்கும்போது உணர முடிந்தது.

இந்தக் களேபரங்கள் எல்லாவற்றையும் தாண்டி கூட்டத்தில் தன் காதலியைக் கண்டறியும் கனவானைப் போலத் தனக்கு வேண்டிய புத்தகங்களை நல்ல வாசகர்கள் கண்டடைந்து விடுவார்கள் என நான் நம்புகிறேன்.

புத்தகக் காட்சி 2019 குறித்த மேலும் சில பார்வைகள்:

புத்தகங்களின் கடலுக்குள்! - எஸ்.ராமகிருஷ்ணன்

புத்தகம்: (கண்)காட்சி, சந்தை, திருவிழா! - ராஜன் குறை

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019