மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜன 2019

மக்களாட்சி மகாத்மியம்!

மக்களாட்சி மகாத்மியம்!

ஸ்ரீராம் சர்மா

இந்த ஆண்டின் குடியரசு தினம் சனிக்கிழமை பார்த்து வருகிறது.

வாரக் கடைசி என்பது குடிமகன்களுக்கு கொண்டாட்டமானது.

ஆனால், பாருங்கள் அன்று டாஸ்மாக் லீவ்.

இப்படியாப்பட்ட அதிர்ச்சித் தகவலைத்தான் அன்றைய ஐரோப்பியர்களின் செவிகளில் அள்ளிக் கொட்டினார்கள் டச்சு வியாபாரிகள்.

அன்றைய நாளில், உலக வர்த்தகத்தில் ஓங்கி இருந்தவர்கள் டச்சு வியாபாரிகள். ஒட்டுமொத்த ஐரோப்பியர்களின் உணவுக்கும் காரசார சப்ளையர்களாக இருந்தார்கள்.

என்ன நினைத்தார்களோ, ஏது நினைத்தார்களோ திடீரென ஒரு நாளில் அதன் விலையைக் கண்டமேனிக்கு ஏற்றிச் சொன்னார்கள். இஷ்டப்பட்டால் வாங்கிக்கொள்ளலாம்; இல்லை, ஆளை விடலாம் என்று தடாலடி செய்தார்கள்.

“மிளகு” என்னும் சிறிய குண்டைக் கொண்டு ஐரோப்பியர்களின் வயிற்றில் ஓங்கி அடித்தார்கள்.

திகைத்துப்போன லண்டன் வாழ் வியாபாரிகள் ரோஷம் கொண்டு ஒன்றுபட்டார்கள். 72,000 ஸ்டெர்லிங் பணத்தோடு தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்து ஓர் அமைப்பைத் தோற்றுவித்தார்கள்.

அதுதான், “கிழக்கிந்தியக் கம்பெனி”!

டச்சு வியாபாரிகளுக்கு எதிராக அவர்கள் கடல் தாண்டி வந்து இறங்கிய இடம்தான் இந்தியா.

அன்று, அவர்கள் கண்ட இந்தியா அவர்கள் எதிர்பார்த்ததை விட மிக மிக வளமானதாக, செழிப்பானதாக இருந்தது. கூடவே, அன்றைய இந்திய மக்களின் வாழ்வு காணச் சகிக்காதபடிக்கு சீழ்பட்டும் கிடந்தது.

அது, முகலாயர்களின் ஆட்சிக் காலம்.

வரலாற்றில் பிரித்தானியர்களுக்கு முன்பு இந்திய மண்ணை முடுக்கி ஆண்டவர்கள் முகலாயர்கள்.

பரந்து விரிந்த இந்திய மண்ணின் உண்மை வரலாற்றைப் பொறுத்தவரை முகலாயர்கள் என்பவர்கள்தான் அதிதீவிர வந்தேறிகள்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

வறண்ட பாலைவனத்திலிருந்து செழித்த பூமியை நோக்கி வந்த முகலாயர்களை வருக வருக வென வலிந்தழைத்ததில் இந்திய மண்ணின் ஒற்றுமையின்மைக்குப் பெரும் பங்குண்டு..

வடநாட்டில் வீர சிவாஜி போன்றவர்கள் முகலாயர்களை தீவிரமாக எதிர்த்து ஓட ஓட விரட்டினார்கள்.

ஆனாலும் அக்கம்பக்கத்திலிருந்த சற்றும் துணிவற்ற லோக்கல் மன்னர்களின் ஆதரவின்மையினால் இந்திய மன்னர்களுக்கு இடையேயான ஒற்றுமை சந்தி சிரித்தது.

பொருளொன்றே குறியென்று வழியெங்கும் சூறையாடி வந்த முகலாய மன்னர்களின் வீரியத்துக்கு முன் ஒற்றுமை துறந்த அத்தனை பேரும் சடசடவெனச் சரிந்து மாய்ந்தார்கள் .

தென்னகத்தைப் பொறுத்தவரை, அன்றைய பாண்டிய மன்னன் சுந்தர பாண்டியன் வழியே மாலிக்கபூர் உள் நுழைந்தான்.

மாலிக்கபூரின் குதிரைப் படை ஆக்ரோஷத்துக்கு முன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கீர்த்தியும் மாட்சியும் சுக்கு நூறாகின.

அதன்பின் எழுந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தால் மூவேந்தர்கள் கட்டிக்காத்த மொத்தக் கல்வியும் , கலாச்சாரமும், ஆன்மிகத் தொண்டும் தூக்கி வீசப்பட்டது.

இந்தியக் குறுநில மன்னர்களின் ஒற்றுமையின்மையால் பீறிட்டுக் கிளம்பிய அந்த முகலாய ரத்த வரலாறு 1707இல் ஔரங்கசீப்பின் ஆட்சியோடு முடிந்தேவிட்டது என்றாலும்கூட...

முகலாய சுல்தான்களால் ஆங்காங்கே நிர்மாணிக்கப்பட்ட நவாப்கள் தங்கள் சுகபோக வாழ்க்கை பறி போய்விடுமோ என்று எண்ணிக் கலங்கினார்கள்.

ஆங்காங்கிருந்த குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் ஒற்றுமையின்மையைத் தங்களுக்குச் சாதகமாக்கியபடி மக்களுக்கு எதிரான அதிகாரக் கொடுமைகளைத் தொடர்ந்தார்கள்.

வியாபாரம் செய்யும் எண்ணத்தோடு மட்டுமே உள்ளேறி வந்த கிழக்கிந்திய கம்பெனியினர் அதிர்ச்சியடைந்தார்கள்.

தங்களை நம்பும் மக்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் “நவாபுக்கு நான் வால் பிடிப்பேன், இல்லையில்லை நான்தான் வால் பிடிப்பேன்...” என்று பரஸ்பரம் அடித்துக்கொள்ளும் அற்பர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். வந்த நோக்கத்திலிருந்து மனம் மாறத் துவங்கினார்கள்.

பொதுவாகவே, வியாபாரிகள் தன் முனைப்புக் கொண்டவர்கள்.

பிரித்தானிய வியாபாரிகளோ தங்கள் வியாபாரத்தை சிஸ்டமாட்டிக்காகச் செய்யும் வித்தையை மரபு வழி அறிந்தவர்கள்.

இந்தியர்கள் கலை, கலாச்சாரத்தில் தங்களைவிட மேலோங்கி நின்றிருப்பதைக் கண்டு வியந்த அதே சமயத்தில், தங்கள் மண்ணைக் குறித்தும் அதன் தன்னாட்சி குறித்தும் சற்றும் விவேகமின்றி அலைபாய்ந்துகொண்டிருந்த இந்திய பிராந்திய மன்னர்களைக் கண்டு நப்பாசை கொண்டனர். தங்களுக்குள் கூடித் திட்டமிட்டனர்.

லண்டன் தலைமைக்குச் செய்தி அனுப்பிக் காத்திருந்தனர். அங்கிருந்து “கிரீன் சிக்னல்” கிடைத்தவுடன் தங்களுக்கே உரித்தான சாதுரிய வலையை வீசத் தொடங்கினர்.

“கனம் பொருந்திய நவாப் அவர்களே... உங்களை சுல்தான்களைக் காட்டிலும் அதிகம் செல்லம் கொஞ்ச நாங்கள் ஆசைப்படுகிறோம். அவர்களுக்குப் பிடிக்கும் வாலை எங்களுக்குப் பிடித்தால் என்ன...?”

குந்தித் தின்று கொழுத்துக்கொண்டிருந்த நவாபையும், நவாபின் கால் அலம்பிக்கொண்டிருந்த ஒருசில பாளையக்காரர்களையும் மெல்ல மெல்லப் பேசிக் கரைத்தனர்.

ஆளாளுக்கு ஏழெட்டு சொகுசுக் கார்கள், ஐரோப்பியாவுக்கு உல்லாசப் பயணம், ஒரு சிலருக்கு லண்டன் வாழ் வெள்ளைப் பரத்தையர்களின் சகவாசம் என ஆசைகாட்டி அதற்கு அதிக வட்டியில் கடனும் அளித்தனர்.

மண்டியிட்டார்கள் நவாப்கள். தொப்பூள்வரை நாக்கைத் தொங்கப் போட்டபடி அலைந்தார்கள் நம்மவர்கள்.

அந்நியர்களின் நப்பாசை இப்போது பேராசையாக விரிந்துவிட்டிருந்தது.

அதன் பின்னான இந்தியத் தமிழ் மண் “அய்யோ” வெனச் சீரழிந்து போனதுதான் வரலாறு.

தோராயமாக கிபி 1700 முதல் வெள்ளையர்களின் மனம்போக்கான ஏகாதிபத்தியம் இந்திய மண்ணெங்கும் விரவியது.

பொருள் வேட்டையாட வந்த முகலாயர்களே மேல் எனும்படியாக மண்ணாசை கொண்ட வெள்ளையர்களின் கொடுமை பன்மடங்கானது.

எதையும் சிஸ்டமேட்டிக்காக அணுகும் தொழில் முறை வியாபாரிகளான பிரித்தானியர்கள் இந்திய மூளைகளை அணுஅணுவாக நெருக்கி அட்டகாசம் செய்தனர்.

இந்தியர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து சுதாரித்துக்கொள்ள எத்தனிக்கும் வேளையில் காலம் கடந்து விட்டிருந்தது.

ஆம், அந்நியர்கள் தங்கள் ஆயுத பலங்களை ஆங்காங்கே இறக்கிவிட்டிருந்தார்கள்.

ஆனாலும், தென்னகத்து வீரம் வெள்ளையரை எதிர்த்தடித்தது.

சித்திரப் புத்திரத் தேவரின் வீரமகன் பூலித்தேவர், அஞ்சா நெஞ்சம் படைத்த மாமன்னர்கள் மருது பாண்டியர்கள், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஓங்கி நின்ற தீரன் சின்னமலை, கயத்தாற்று மாவீரன் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், பாயும்புலி பண்டார வன்னியன் எனப் பற்பலரும் வெள்ளையரை வரிசை கட்டி எதிர்த்தனர். பலனில்லை.

மொத்தத்தையும் அழித்து ஒழித்தது பிரித்தானிய பெரும் படை. அவர்களின் பேராயுத சூழ்ச்சிகளுக்கு முன் ஹைதர் அலியும் திப்புவும்கூடச் செயலற்று மாய்ந்தார்கள்.

வெள்ளையரைத் தன் வியூகத்தால் வெற்றி கொண்டவர் சிவகங்கை மகாராணி வேலுநாச்சியார். ஆயினும், அவரது வெற்றி வரலாற்றைத் தங்களது சூழ்ச்சி கொண்டு மறைத்தழிக்க முயன்றனர். இந்திய வாழ்க்கையை மட்டுமல்ல; அதன் வரலாற்றையும்கூடத் தங்கள் மனம்போன போக்குக்குத் திருப்பினர் அந்நியர்.

மன்னராட்சியை ஒழிக்க முற்பட்ட போதிலும் நவாப்களை மட்டும் உயிர்ப்போடு வைத்திருந்தபடி இந்திய மக்களுக்கெதிரான தங்கள் சூழ்ச்சியைத் தொடர்ந்தனர்.

அந்நியரிடம் கடன்பட்ட நவாப்களோ தங்களை சுக போகமாக வாழ விட்டால் போதும் என்று மக்களைக் கை கழுவினர்.

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்த நமது முன்னோர்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை.

20 மணி நேர வேலை. ஒரு வேளைக் கஞ்சி.

சங்க காலம் தொட்டு செழித்து வாழ்ந்த வளமார் தமிழர்கள் மேனி மெலிந்து மனம் சூம்பிக் கிடந்தனர்.

கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் அதற்குச் சாட்சி.

பத்தொன்பதாம் நூற்றாண்டு கொடூரமாகக் கடந்து ஒருவழியாக இருபதாம் நூற்றாண்டு சமீபித்தது.

போர்க்கொடி உயர்த்திய மன்னர்கள் யாவரும் அழிக்கப்பட்டுவிட்டாலும் வெள்ளையர்களுக்கு எதிரான விடுதலைக் கனல் ஓயவில்லை. விடுதலைத் தாகம் வேறு வடிவெடுத்தது.

மண்ணின் விடுதலையை எளிய மக்கள் முன்னெடுத்தனர்.

வெகுண்டெழுந்த மகாகவி சுப்ரமணிய பாரதியார், வ.உ.சி, சுப்ரமணிய சிவா, பகத்சிங், குமரன், போன்ற எண்ணற்றோர் தாய்த்திரு நாட்டின் விடுதலையை அதன் தன்னாட்சியை தங்கள் சர்வபரி தியாகத்தால் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர்.

உலகமெங்கும் சுதந்திரக் காற்று பரவிக்கொண்டிருந்த நேரம்...

சுதந்திரப் போராட்டத்தை முன்வைத்து சகோதரிகள் சங்கத்தைத் தோற்றுவித்த பத்மாசனி அம்மாள், சேலம் அங்கச்சி அம்மாள், ஞானம்மாள், அசலாம்பிகை, கே.பி. ஜானகி அம்மாள் போன்ற தியாகப் பெண்மணிகளின் அர்ப்பணிப்பு அந்நியரை உலுக்கியது.

பிரித்தானிய ஆட்சியாளர்களில் பலர் சுயநலம் மேலிட ஆங்காங்கே தங்கள் தலைமையை மீறி செயல்பட்டுக் கொண்டிருந்ததையும் லண்டன் தலைமை கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து நீண்டு பரந்த இந்திய மண்ணின் மூலை முடுக்கெங்கிலும் சுதந்திரக் கனல் பரவ தன் அரையாடையோடு வலம்வந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஏற்கெனவே பிராந்தியங்கள்தோறும் மூண்டிருந்த விடுதலைக் கனல் அவரை ஒற்றைத் தலைமையாகப் பற்றிக்கொண்டு காந்தியத்தை எதிரிகளின் மேல் வீசி எறியத் தொடங்கியது.

இனியும் இவர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாது என்று எண்ணிய பிரித்தானியப் பேரரசு பின்வாங்கிய ஆண்டு 1947. அந்த ஆண்டு ஆகஸ்ட் 15இல்தான் மவுன்ட்பேட்டன் தலைமையிலான வெள்ளையர் அரசாங்கம் வெளியேற முடிவெடுத்தது.

அந்த ஆகஸ்ட் 15ஐச் சுதந்திர நாளாகக் கொண்டாடினாலும்கூட,

நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம் – இது

நமக்கே உரியதாம் என்பதறிவோம்

என்று மன்றாடி மறைந்த தேசிய மகாகவி சுப்ரமணிய பாரதியாரின், விடுதலைக் கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஓங்கி முழங்கினார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.

“எங்கள் நாட்டின் அரசாட்சியை, அதன் சட்ட வரையறையை நாங்களே வரையறுப்போம்” என்று அதிர முழங்கினார் அந்தச் சட்ட மேதை.

பாபா சாகேப் அம்பேத்கர் முழங்கிய அந்த 1950ஆம் ஆண்டே இந்தியப் பெரு நிலத்தின் “குடியரசு ஆண்டாக” நிலைத்தது.

சரி, ஜனவரி 26 எப்படி வந்தது ?

அன்றொரு நாள் 1930ஆம் ஆண்டில் இந்திய விடுதலை இயக்கத்தினர் ஒன்றுகூடி “பூர்ண ஸ்வராஜ்” என்ற அறைகூவலை விடுத்தனர். ஸ்வராஜ் தின உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.

அன்று, அந்த உறுதி மொழியை வடிவமைத்தவர் காந்தியடிகள்.

கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் இவ்வாறு முழங்கினார்...

“பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மிகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டுக்குக் கேடு விளைவித்துவரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்...”

அந்த நாள்தான் ஜனவரி 26. மகாத்மா உறுதி மொழி எடுத்த நாளே நமது மக்களாட்சி நாளாக நிலைத்துவிட்டது.

ஆம், தாய்த்திரு நாட்டுக்கு எந்த வகையிலும் துரோகம் செய்துவிடலாகாது என்று உணர்த்துவதுதான் குடியரசு தினம்!

வாழிய தமிழகம்!

வாழிய பாரத மணித்திரு நாடு!!

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

வெள்ளி 25 ஜன 2019