மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜன 2019

ஒரு கப் காபி!

ஒரு கப் காபி!

இயல்பை உணர்ந்திடு!

நான் யார் என்ற கேள்விக்கு விடை தெரிந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம் என்று சொல்லப்படுவதுண்டு. அந்த விடை வாட்ஸ் அப்பில் லீக் ஆகுமா என்று கேட்கும் காலகட்டம் இது. இப்போது தத்துவார்த்த ரீதியான பதில்களை மட்டுமல்ல, கேள்விகளையும் கேட்க யாரும் தயாராக இல்லை.

சரி, தத்துவ விசாரம் வேண்டாம். அதற்குப் பதிலீடாக என்ன செய்யலாம்?

உலக தத்துவ மேதைகள் அதற்கும் ஒரு மாற்று வைத்திருக்கின்றனர். இயல்பை உணர்ந்தால், எந்நாளும் மகிழ்ச்சிதான் என்பதே அது.

எது இயல்பு என்று அறிவது மிகச் சுலபம். நம்மை நாமே ஏமாற்றாமல் இருக்க வேண்டும். விருப்பையும் வெறுப்பையும் மனதில் அசைபோடப் பழக வேண்டும். சுற்றியிருப்பவர்கள் முன்னால் நாம் யார் என்று காட்டிக்கொள்ள எந்த முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது.

சரி, இயல்பு திரிந்தால் என்னவாகும்? இயல்பை உணர்வது எப்படி?

ஓர் ஊரில் ஒரு கழைக்கூத்தாடி. அவனால் எவ்வளவு சிறிய வளையத்துக்குள்ளும் தனது உடலை நுழைத்து வெளியே வர முடியும். ஒருமுறை மிகச்சிறு வளையத்துக்குள் தன்னுடலை நுழைத்த கழைக்கூத்தாடியின் திறமையைக் கண்டு வியந்துபோனான் ஒரு திருடன். இவன் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே நுழைந்து கொள்ளையடிக்கும் வீட்டின் கதவைத் திறந்துவிட்டால், நம் வேலை சுலபத்தில் முடியுமே என்று நினைத்து, அந்த கழைக்கூத்தாடியைத் துணைக்கு அழைத்துக்கொண்டான்.

பங்களா வீடொன்றில் இருவரும் திருடச் சென்றனர். எவ்வளவு முயன்றும், கழைக்கூத்தாடியினால் ஜன்னல் கம்பிகளுக்குள் உடலைக் குறுக்க முடியவில்லை. முயன்று அலுத்துபோன கழைக்கூத்தாடியைப் பார்த்து திருடன் கேட்டான்: “நீதானே அன்று கையளவு வளையத்துக்குள் நுழைந்து சாகசம் செய்தாய்?”

“10 பேர் சுற்றி நின்று கைதட்டினால் நான் ஜன்னலுக்குள் நுழைந்துவிடுவேன்” என்றான் கழைக்கூத்தாடி.

கைதட்டினால் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வந்துவிட மாட்டாரா என்று கோபப்பட்டான் திருடன். அதனைக் கேட்டுப் புன்னகைத்த கழைக்கூத்தாடி, “என் வேலையின் வெற்றி கைத்தட்டலில் இருக்கிறது. உங்களது வேலையின் வெற்றி நிசப்தத்தில் அடங்கியிருக்கிறது. இது எனக்குச் சரிப்பட்டு வராது” என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.

ஒவ்வொரு மனிதரின் இயல்பும் வேறுபட்டது. எல்லோருக்கும் எல்லாமும் சரிப்பட்டு வருவதில்லை. இதை உணராமல், மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டே இருந்தால், கம்பிகளுக்கு இடையில் மாட்டிக்கொள்வோம்!

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வெள்ளி 11 ஜன 2019