மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 3 டிச 2018

ஸ்டெர்லைட் கழிவு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஸ்டெர்லைட் கழிவு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள் அகற்றுவது தொடர்பான வழக்கில், வேதாந்தா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

தூத்துக்குடியிலுள்ள மீளவிட்டான் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டபோது, ஆலைக் கழிவுகளை அகற்றும்போது முறையாகத் தெரிவிக்க வேண்டுமென்ற விதியுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அவ்வாறு செயல்படவில்லை என்று கூறி, திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.

“ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் 3.52 லட்சம் டன் மதிப்புள்ள கழிவுகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமல், தூத்துக்குடி உப்பாற்றில் கொட்டியுள்ளது. இது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் புகார் அளித்தால், வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அவர்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே, மாசுக் கட்டுப்பாடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட வேதாந்தா நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மீதான விசாரணை இன்று (டிசம்பர் 3) நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், வேதாந்தா நிறுவனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதன்பின்னர், இந்த வழக்கு டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கேவியட் மனு

கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக, ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டது தீர்ப்பாயம். கடந்த மாத இறுதியில் ஆய்வுக் குழுவினர் தங்களது அறிக்கையை சீல் இடப்பட்ட 42 உறைகளில் சமர்ப்பித்தனர். கடந்த 28ஆம் தேதியன்று இது குறித்து விசாரணை நடத்திய தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடியது தவறு என்னும் தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கையை வெளியிட்டது. ஆலையைத் திறக்கலாம் என்று ஆய்வுக்குழு கூறியது இதன் மூலமாகத் தெரிய வந்தது. இது குறித்துப் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது தீர்ப்பாயம். இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 3 டிச 2018